ரசூலின் இந்த கவிதை கவித்துவத்தின் பேரெழுச்சியை தருவதில்லை மாறாக இரண்டாயிரம் வருடத்திற்கு மேற்பட்ட மரபின் மீது, விழுமியத்தின் மீது , பண்பாட்டின் மீது ஒரு கேள்வியை எழுப்புகிறது.ஒரு இலட்சம் அருளாளர்கள்,இறைத்த தூதர்கள் உருவாகி வந்த வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு புள்ளியிலும் இந்த கேள்வி எழவில்லையா? இன்றும் இது செல்ல மகளின் கேள்வி மட்டும்தானா?.இன்னும் இது போன்று ஆயிரமாயிரம் கேள்விகளை இன்றைய உலகின் அளவீடுகளைக் கொண்டு நேற்றைய வரலாற்றின் மீது, வாழ்வின் மீது ,பண்பாட்டின் மீது எழுப்பலாம்.ஒரு நதியின் பாதையை,மலையின் உயரத்தை,காற்றின் வேகத்தை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே வரலாற்றின் போக்கையும் வரையறுக்கமுடியாது.ஆயிரமாயிரம் காரணங்களோடு அது நிகழ்கிறது ஒட்டுமொத்த மானுடத்தின் நல்லெண்ணங் கொண்டும் அதை நிறுத்தவோ,திசை திருப்பவோ முடியாது.
“அஞ்சுவண்ணம்” என்பது சோழ,பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டு அரசனால் வரவழைக்கப்பட்டு குடியமர்த்தப் பட்ட ஐந்து நெசவாளர் குடும்பத்தால் உருவாக்கப்பட்ட வணிக குழுவின் பெயர். அதுவே ஆதி தெருவின் பெயராகிறது.அந்த ஐவர் குடும்பத்தில் வந்த பாவா பக்கீர் சாகிப், வாப்பாவிடம் ஆதி தெருவின் வரலாற்றை சொல்கிறார். தெருவின் வரலாற்றை அறிந்த ஒரே தொண்டுக்கிழவன்.தாத்தா(அக்கா) வாடகை வீட்டிலிருப்பதாக வாப்பாவிடம் சொல்லி சொல்லி கை பிசைகிறாள்,வேம்படிப்பள்ளிக்கு அடுத்த தெருவான அஞ்சு வண்ணம் தெருவில் இருக்கும் “நபீசா மன்ஸிலை” நாடாரிடம் விலை பேசி வாங்குகிறார் வாப்பா.விருத்திகெட்ட வீடு என்று பலர் எடுத்து சொல்லியும் அதை வாங்கி விடுகிறார்.அங்கிருந்து கதைகள் கிளைக்கிறது.ஷேக் மதர் சாஹிப்பின் நபீஸா மன்ஸிளுக்கு “தாருல் சஹினா” என்று தாத்தாவின் இளைய மகள் பெயர் சூட்டப் படுகிறது.அஞ்சு வண்ணம் தெருவின் மத்தியில் தாயும்மாவின் சமாதி கொண்ட மம்மதுப்பாவினால் கட்டப்பட்ட தைக்காப் பள்ளி இருக்கிறது. அதையொட்டிய மூத்திரப் புரையை அடுத்து “தாருல் சஹினா”.தெருவில் தைக்காப் பள்ளியை விட உயரமான ஒரே கட்டிடம்.அதனாலேயே அது விருத்திகெட்டதென்று பேசப்படுகிறது.
தைக்காப்பள்ளியில் உறைந்த தாயும்மா யார் என்று பக்கீர் சாஹிப் சுருட்டு பிடித்தபடி சொல்லத் தொடங்குவதிலிருந்து மீரான் தொடர்ந்து கதைகளை நெய்தபடியே இருக்கிறார்.இங்கும் அங்குமாக தெருவின் வரலாறு, வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்களை பற்றிய சித்திரங்களென கடைசி வரையிலும் கதைகள்,வரலாறுகள்,தொன்மங்கள்,நம்பிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன.இஸ்லாமிய சமுதாயத்தில் புழங்கும் பல சொற்கள் எனக்கு புதியது. பள்ளி,தர்கா,சூபி,முல்லா,காபிர்,ஜிகாத்,நிக்கா,மவுத்,ஜமாத்,ஹஜ்,ஹதிஸ்,இமாம்,ஈமான் போன்று சில வார்த்தைகள் எனக்கு தெரியும்.”அஞ்ஞானி” பஷீர் எழுதிய “பாத்துமாவின் ஆடு” குளச்சல் முஹம்மது யுசுப்பால் மொழிபெயர்க்கப்பட்டு என்னிடம் வந்த போது “காக்காவை” பற்றி தெரிந்து கொண்டேன்.இப்போது தாத்தா,சுப்ஹு,இஷா,அஸர்,மஃரிப்,ஜின்,அவுலியா,ஷிர்க்,நஜிஸ்,ஒளு,ஒஜீபனம்,கிஸ்ஸா,தல்கீன்,தவ்ஹீத்,மலக்கு.இன்று எனது குலமரபுகளின் வழிப்பட்ட இறைவழிபாடு,அதன் நெறிமுறைகள் என எதுவும் எனக்கு தெரியாது.கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் ஒவ்வொரு குடும்பமும் விட்டுச் செல்வது ஒரு நிலத்தின் பண்பாட்டையும்,மரபைம்.மாறாக அவர்கள் பெற்றுக்கொள்வது எங்கெங்குமிருக்கும் ஒரு பெரு மரபை அல்லது நிரந்தரமாக மரபுகளற்று போவதை.
தாயும்மா எட்டு ஆண்பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே பெண், பேரழகி. சுசீந்திரம் பெருமாளை வழிபடச் செல்லும் திருமேனியை காண ஒளிந்திருக்கிறாள்,நாடாளும் மன்னன் பார்வையில் படுகிறாள் அந்த அழகி. அவன் ஆளனுப்புகிறான் எட்டு ஆண் பிள்ளைகளை விடியுமுன் கண்காணா தேசத்திற்கு தப்பியோட சொல்லிவிட்டு,தன் ஒரே மகளை அரசனில்லாத தேசத்திற்கு ஈமானுள்ள முஸ்லீமாக குழி தோண்டி புதைத்து அனுப்பி வைக்கிறார் தந்தை.கி.ரா எழுதிய கோபல்ல கிராமம் இதே போன்றதொரு சித்திரத்தை தருகிறது. இஸ்லாமிய மன்னனுக்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு நூற்றுக்கணக்கான மைல்கள் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்கு மக்கள் அவர்கள் கட்டியெழுப்பும் ஒரு கிராமம்.கடைசியில் நாடோடிகளாவதும்,ஒளிந்து வாழ்வதும்,உயிருடன் புதைக்கப் படுவதும் ஈமானுள்ளவர்களே,மரபின் மீது உயிரை வைத்திருப்பவர்களே,எல்லோரும் மனிதர்களே.
தைக்காப் பள்ளிக்கு பின்புறம் ஒரு தெரு அடுத்திருப்பது வேம்படித் தெரு.மெஹ்ராஜ் மாலையை ஆலிப் புலவர் அரங்கேற்றியது அங்குதான்.வாப்பா அங்குதான் தொழ செல்வது வழக்கம்.ஆலிப் புலவர் வம்சாவளி வந்த குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் அதன் இமாம்.புலவரின் வாரிசென்பதால் தமிழ் புலமையோடு பேசுவதிலும் கதை சொல்வதிலும் தேர்ந்தவராயிருக்கிறார்.தைக்கப் பள்ளியில் பாங்கு சொல்லும் தொண்டுக் கிழவன் மைதீன் பிச்சை மோதீன்.குழாயடிச் சண்டையில் கெட்டிக்காரியான மம்மதும்மாவும் அஞ்சு வண்ணம் தெருவின் ஒரு பிரஜைதான்.வீடற்றவள் தாத்தா “நஃபீஸா மன்சிலுக்கு” வருமுன் முன்வாசலில் வாடகையில்லாமல் குடியிருந்தவள்.இரவில் நடமாடும் ஜின்னுகளுடன் பேசி அஞ்சு வண்ணம் தெருவின் அத்தனை பேரின் ரகசியமும் அறிந்தவள். “தாருல் ஸஹினா” பெயர் மாற்றி தாத்தா குடியேறியது பிடிக்காவிட்டாலும் ரஹுப் பிறந்த போது வீட்டிற்கு வந்து தாத்தாவிடம் நலம் விசாரிக்கிறாள்.தாத்தாவும் முறுக்கும் சுலைமானியும் கொடுத்து விருந்துபசரிக்கிறாள். இது போன்ற ஒரு காட்சியை பெரிய கெளடனும்,வாயாடி புட்டாவும் சம்ஸ்காராவில் நினைவூட்டினாலும்,அஞ்ஞானி பஷீரும்,மீரானும்,முத்து லிங்கமும் எனக்கு காட்டும் பண்பாட்டின் வேர்கள் மம்மதும்மா போன்றவர்களே.
-தொடரும்
Leave a Reply