இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலான சமயங்களில் தொன்மைங்களையும் அமானுஷ்யங்களையும் நிகழ்காலத்தொடு இழையோட விட்டு கதையாடுகின்றன, அள்ளித் தீராத இந்த வாழ்வை வார்த்தைகளால் அளக்க முடியுமா? நாமறிந்த வாழ்க்கையே எத்தனை பிரம்மாண்டம்?, நாமறியாத வாழ்க்கை? இந்த பூமி?,பிரபஞ்சம்?,இன்னும் மனிதன் அறியாத என்னென்னவோ இருக்கலாம்தானே?.எத்தனை கோடி இன்பம் வைத்தாய்? என்ற பரவசம், இன்பமே கோடி எண்ணிலடங்காது,வாழ்விலடங்காது,சொல்லிலடங்காது.மலைக்காமல் எழுதுவதே எத்தனை பெரிய சாகசம்?இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை தொட்டுக்காட்டிவிட முயல்வதுதானா அத்தனை இலக்கியங்களும்,கலைகளும்?.பல்லூழிக்காலம் வாழ்ந்த வாழ்வை,அதன் பயனை,அதன் வழி திரண்ட ஞானத்தை சுருங்க சொல்வதா இந்த இலக்கியங்கள்? இத்தனை கலைகள்?.
ஆம். அனந்த கோடி வருடங்களாய் வாழ்ந்த வாழ்வின், வளர்ந்த பண்பாட்டின் ,செய்த தவத்தின் திரண்ட ஞானம்தான் நமது சமயங்கள், அதன் வேர்கள் பல்லாயிரம் இனக்குழுக்களின் கலை,இலக்கிய செயல்பாடுகள்தான்.இசையில்லாமல்,கவிதையில்லாமல்,கதையில்லாமல்,நாடகமில்லாமல்,ஓவியமில்லாமல்,சி்ற்பமில்லாமல் இதுவரை எந்த மதமும் உருவாகவில்லை. குறைந்தபட்சம் “சொல்” அல்லது “வார்த்தை”.இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது சென்ற பதிவில் எழுதியது போல எல்லா நீதிநூல்களும்,சாஸ்திரங்களும் வாழ்க்கை சிக்கலை குறைக்க என்ற ஒற்றை நோக்கத்தை ஏற்றிச் சொல்லி முன்னகர்ந்து விடலாம்.அவ்வளவுதானா?.”அஞ்சு வண்ணம் தெரு” ஒரு தெருவின் வரலாற்றை,வாழ்ந்த மனிதர்களின் கதையை, அதன் தொன்மங்களை,அதன் நிகழ்கால சிக்கல்களை, நிறைவாக அதன் வீழ்ச்சியை சொல்லும் நாவல்.

நன்றி: http://aadhirah.blogspot.in/
1997-ல் தோப்பில் முகம்மது மீரானுக்கு சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது, நாளிதழில் வாசித்திருந்தேன். “ஒரு கடலோர கிராமத்தின் கதை” என்ற நாவலை விலைக்கு வாங்கிவிட்டேன்.பிறகுதான் தெரிந்தது அவருக்கு “தேங்காப்பட்டினம்” ஊரென்று,நான் பாளையங்கோட்டை மளிகை கடைக்காரர் கதை எழுதி விருது வாங்கிவிட்டார்,பக்கத்து ஊர்க்காரனான நான் அவர் புத்தகங்களை வாங்கி வாசிப்பது மேலான கடமை என நினைத்தேன்.ஞாபகப் பிழை ஐயா என்ன செய்வது?.பத்து பக்கங்கள் கூட என்னால் வாசிக்க முடியவில்லை,பிராப்தம்!. என் பெரியம்மா மகன் , வாசித்து விட்டு பேய்க்கதை என்று சொன்னான்.எனக்கு துக்கம் தாளவில்லை என் தமிழறிவை எண்ணி அன்று தாங்கொணா துயரடைந்தேன். ஆனால் முயற்சி செய்தேனில்லை புத்தகம் பரணேறி விட்டது.(மன்னிக்கவும் எங்கள் வீட்டில் உண்மையில் பரண் எதுவுமில்லை “ஒரு கடலோர கிராமத்தின் கதை” கரை ஒதுங்கி விட்டது என்பதையே பண்டித தமிழில் எழுதியிருக்கிறேன்).அப்பொழுது எனக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தை எழுதும் படைப்பாளிகள் யாரும் அறிமுகமாயிருக்கவில்லை.ஏற்கனவே சொன்னது போல மேத்தா,அப்துல் ரஹ்மான் போக பாடப் புத்தகங்களிலிருந்து சீறாப் புராணம் எழுதிய உமறுப் புலவர்.
வகை தொகையில்லாமல் வாசிக்கும் நண்பர் வழியாக நான் அறிய வந்தது மைலாஞ்சி எழுதிய எச் ஜி ரசூலின் மறக்க முடியாத வரிகள்
வந்துதிக்காத ஓர் இனத்தின் நபி
=========================
பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்
நபிமார்களென்று.
திருகுரான் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபி…அய்யூப்நபி..
………… ………
ஈசாநபி…மூசாநபி…
இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முகமது நபி…
சொல்லிக் கொண்டிருந்த போதே
செல்லமகள் கேட்டாள்…
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?
– தொடரும்
Leave a Reply