உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
April 4, 2011
என் குருசு…
June 14, 2008
அமைதியாக ஒரு யாசகன்…
நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக
பெறுகிறேன்!
இது
என் குலத்தொழில்
இல்லை;
நான்
கர்ண பரம்பரை;
என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!
அவளிடம்
கேட்காமல் கிடைத்தது,
இன்று
கேட்டும் கிடைக்கவில்லை.
யாசகனுக்கு
முகம் கிடையாது;
முகமூடிதான்
அவனுக்கும் அடையாளம்;
எனக்கு
இரண்டுமே கிடையாது;
அடையாளமோ,
அரிதாரமோ
அவசியமற்றது;
எவர் கனவுகளிலும்
நான்
வருவதில்லை;
எனக்கு
கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!
என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும்
வேளையில்
தாங்க முடியாத வலி;
பல காயங்களுக்கு
நான்
மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை
கேட்பதில்லை!
எனக்காக,
எனக்கு
அழத்தெரியாது;
என்
பொம்மைகளுக்காக
அழுதிருக்கிறேன்.
முளைவிடும்
விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது
என் தவம்;
எனக்கும்
வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர்
தருகிறது;
என் பச்சையங்கள்
பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று
சுவாசமும் தருகிறது.
இந்த உலகம்
இரண்டாவது தாய்;
என்னை
பெரும் யாசகனாக்கியது.
என்னிடம்
புன்னகைப்பவர்களுக்கு
நான்
பூச்செண்டு கொடுப்பேன்;
யாசகனின்
பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.
யாசகம் கேட்பது
தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே
புன்னகைத்திருக்க கூடும்…