தொடுவானம் தொடாத விரல்

May 14, 2009

கம்யூனிசமும்,”குருவி” மண்டையும்!

கன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி  வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான  அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து  ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.

என் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்?).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய?.அதையும் மீறி  நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.

அப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான்  தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே  நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(!),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…

February 23, 2008

நான் விரும்பும் பேய்கள்..

Filed under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 4:20 am
Tags: , , ,

பேய்களை பற்றிய கதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை… சிறு வயதில் இரவில் சொல்லப்பட்ட அத்தனை பேய்க்கதைகளும் ரத்த கறை படிந்தவை… சில பேய்கள் புதையல்களை காத்தபடி காலந்தள்ளி கொண்டிருப்பதையும்… சில பேய்கள் நான் குளிக்க போகும் கிணற்றில் அமாவஷை, பௌர்ணமி தினங்களில் தலைக்கு குளித்து விட்டு கூந்தலை விரித்து விட்டபடி… அழுதுகொண்டோ அல்லது பலமாக பேய் சிரிப்பு சிரித்த படியோ உட்கார்ந்து கொண்டிருப்பதையோ கேள்விப்பட்டிருக்கிறேன். . சில நாட்களுக்கு அந்த கிணற்று பக்கம் போக மாட்டேன் என்று என் தாயார் என்னிடம் கூறியதாக கூட இருக்கலாம்.. ஆனால் அந்த கிணற்றில் குளிக்கும்போது கண்களை மூடுவதற்கு சற்று பயமாகவே இருக்கும்..

அதுவும் கிணற்றுக்கு மேலே இருந்து குதித்து தலை தண்ணிக்கு வெளியே வரும் வரைக்கும் உள்ளே உலவுகிற பேய் காலை பிடித்து இழுத்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.. பள்ளிக்கூடத்திற்கு பின்னால் இருக்கும் கல்லறை கிணற்றில் தண்ணீர் எப்பொழுதுமே வற்றுவதில்லை… கோடையில் கூட பால் மாதிரி தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும்… அதற்கு காரணம் கல்லறையிலிருந்த பேய்கள்தான்.. நான் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை..எபோழுதாவது கிரிக்கெட் விளையாட போகும்பொழுது கல்லறை தோட்டத்தை பார்ப்பதுண்டு.. அரளி பூக்கள் சிரித்தபடி இருக்கும்… அதுகூட பயப்படுத்தும்படியாகவே இருக்கும்.. அரளி விதை விஷம் என்பதுதான் காரணம்.. கல்லறை என்பதற்காக பூக்கள் கூடவா அரளிப்பூகளாக இருக்க வேண்டும்.. பேய்கள் அப்படிப்பட்ட இடங்களை விரும்புவதாகவே தோன்றியது..

சினிமா தியேட்டருக்கு அருகில் இருந்த ஒத்த பாலம் கூட பேய்கள் அமர்ந்து கதை பேசும் இடமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.. அங்கே ஒரு மோகினியும், சில
இரத்த காட்டேரிகளும் இருப்பதாக சொன்னார்கள்.. நம்பத்தான் வேண்டியிருந்தது.. ஏனெனில் எங்கள் ஊரில் நடந்த இரட்டை கொலைகளில் ஒன்று அங்கே நடந்ததாக செய்தி..பின்னிரவு காட்சிகளை நான் காணமல் இருந்ததற்கு அந்த பேய்கள்தான் காரணம்
மற்றபடி சைக்கிளில் நான் செல்லும்பொழுது அந்த பாலம் ஒரு கொலைக்களமாகவே தெரியும் மிக மெதுவாகவே செல்லுவேன் .. இருந்தும் ஒருமுறை கீழே விழுந்து என் கீழுதட்டின் கீழே ஒரு ஓட்டை விழுந்து விட்டபின் என்னை அந்த பேய்கள் பதம் பார்த்துவிட்டதாகவே தோன்றியது..

பேய்கள் உலாவும்.

.vampire-eyes-sm1.jpg

Create a free website or blog at WordPress.com.