தொடுவானம் தொடாத விரல்

June 6, 2009

இரவோடு கலையும் கனவுகள்…

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…

May 18, 2008

நான் விரும்பும் பேய்கள்

Filed under: பேய்கள் — கண்ணன் பெருமாள் @ 5:32 am
Tags:

நான் விரும்பிய பேய்களை என்னால் தொடர முடியவில்லை.இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தது ஏன்? சிலர்(உண்மையில் ஒருத்தர்தான் ;)) என்னிடம் கேட்டனர்.சுவாரஸ்யம்தான் காரணம்.காதலைப்போல பேய்களும் சுவாரஸ்யம் நிறைந்தவை.காலையிலிருந்து இரவு வரை ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகளை  படித்து கொண்டிருந்தால் வெறுத்து போய்விடும்.கூலி வேலை செய்கிறவர்களுக்கு  ஒரு கிலோ வத்தல் என்ன விலை என தெரிந்திருக்கிறது சாப்ட்வேர் வேலை பார்ப்பவனுக்கு காலையில் குடித்தது காபியா?டீயா? எனக் கேட்டால் தெரியவில்லை.மறதி.தன்னை மறந்திருப்பவனுக்கு உலக நடப்பு எதற்கு? உப்பு,புளி விலையேற்றத்திற்கு நமக்கென்ன?பர்மாவில் புயல்,சீனாவில் நிலநடுக்கம் எல்லாமே நடந்து கொண்டே இருக்கிறது.இந்த செய்திகள் மனதை குடைந்தெடுத்தாலும் வாழ்க்கையை நாம் தொடர சற்று சிரித்திருந்தால் மட்டுமே முடியும்.சிலருக்கு  நகைச்சுவை உணர்வு சற்று குறைவு ஆனால் நன்றாக சிரிப்பார்கள்.

உண்மையை சொல்ல போனால் பேய்கள் இன்றைய காலக்கட்டத்தில்  மதிப்பிழந்து விட்டன.பேய்களை வைத்து திகில் படமெடுத்த காலமெல்லாம் போய் இன்று பேய் கார்டூன்கள்,காமெடி படங்கள்,சிரியல்கள் என பேய்களின் தரம்(பயம்) குறைந்துவிட்டன.ஆனாலும் கிராமங்களில் பேய்கள் வலம் வந்து கொண்டிருப்பது உண்மை.அங்கும் நாம் இலவச டிவி கொடுத்தபிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்,சித்தி,அம்மா,அப்பா,கொழுந்தன் என நாடகம் பார்க்க தொடங்கி விட்டால்  பேய்களை மறந்து விடுவார்கள்.கலாச்சாரம் மாறுவதற்கு டிவி ஒரு நல்ல காரணி.தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் சாதாரண மக்களின் மனதில் பிராண்ட் மோகத்தை  ஏற்படுத்தி விட்டன.முன்னெல்லாம் வீடு வீடாக பெனாரஸ் பட்டு,சூரத் சில்க் என சொல்லிக்கொண்டு சிலர் கிராமங்களில் வந்து விற்பனை செய்வார்கள்.இப்போ செருப்பு எடுக்க கூட டவுணுக்கு போகிறார்கள்.டிவியில் விளம்பரம் செய்யாத பொருள் தரம் குறைந்த பொருள்.விளம்பரங்கள்  நமக்கு உண்மையை சொல்வதில்லை.ஒருபக்க நியாயங்களையே சொல்கிறது.கேளிக்கைதான் இன்றைய வாழ்க்கையின் பிரதானம்.யாருக்குமே பொறுமை இல்லை.இதில் என்ன பேய்கள் பற்றிய  சுவாரஸ்யம் வேண்டியிருக்கிறது?.இருக்கிறது சாதாரணமாக நாம் ஒரு பஸ்ஸில் போகும்போதோ அலுவலகத்தில் வேலை செய்யும்போதோ பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

ஆனால் தனியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடந்து பாருங்கள்.எதிரில் வரும் நாய் கூட ஜென்ம நட்சத்திரத்தில் வந்த கருப்பு நாய் மாதிரி தெரியும்.தனியாக தூங்கும்போது திடீரென நடுநிசியில் எழுந்துவிட்டால் ஜன்னலுக்கு வெளியே கத்தும் பூனையை எட்டிப்பார்க்கும் தைரியம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் .அவர்களுடைய வாழ்வில் பேய்களை காட்டிலும் சுவாரஸ்யம் அதிகமான விஷயங்கள் நடந்திருக்கக்கூடும்.நள்ளிரவில் ஆற்றின் கரையோரத்தில் தனியாக அமர்ந்து நீங்கள் எதையாவது பயமின்றி யோசிக்கக்கூடுமென்றால் உங்களுக்கு சற்று வயது அதிகம், இல்லை வயதை விட நீங்கள் வாழ்வில் அனுபவித்தது அதிகம்.பேய்கள் நம் இளமையை நினைவு படுத்துபவை நமது அறியாமையை,புரிதலின்மையை சொல்பவை.வயது ஆக ஆக நம்மால் பேய்களை பார்க்கவோ கேட்கவோ முடிவதில்லை.எல்லோருக்குமே இப்படி நிகழ்ந்துவிடுகிறது.நம் கற்பனை உலகத்தை எந்தவொரு இரக்கமுமின்றி நாம் எரித்துவிடுகிறோம்.இல்லை எரித்து விடுகிறார்கள்.என்னால் இன்று பேய்களை தேடி அலைய முடியவில்லை.உங்களில் பலருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம்.ஆனால் உண்மையில் நீங்கள் உங்களை மதிப்பவராக இருந்தால் ஒரு முறையாவது   ஏதாவது ஒரு பேயின் கதையை காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்.நீங்கள் கேட்காவிட்டாலும் பேயின் இருப்பை உணர முயலுங்கள் அதுகூட ஆச்சரியாமான ஒன்றுதான்.ஒரு குழந்தையின் உலகம் உங்கள் கண்களில் விரியும்.எனக்கு பேய்களை துஷ்டமாக நினைக்க முடியாது அவை முழுக்க முழுக்க உங்கள் கற்பனையின் குழந்தைகள்.

நீங்கள் பேய்கள் இல்லையென்று சொன்னால்  நான் ஒப்புக்கொள்ள தயங்க மாட்டேன் ஏனெனில் உங்களுக்கு கற்பனைத்திறன் இல்லை.அல்லது அது போன்ற ஒரு கற்பனை உங்களுக்கு பிடிக்கவில்லை அவ்வளவே.ஆனால் ஒரு போதும் உங்கள் குழந்தைத்தனமான உலகத்தை அழிக்க முற்படாதீர்கள் பிறகு உண்மையிலுமே வாழ்க்கை மெகா  சீரியல் மாதிரி ஜவ்வாக அழுதுவிடும்.இன்னொரு வகையில் நான் இப்படி சில நாட்கள் நினைத்திருக்கிறேன் பேய்கள் ஒரு காலையில் தங்கள் முழு பலத்தையும் திரட்டி சூரியனுக்கு பதிலாக வானமெங்கும் வெள்ளை உடை அணிந்து சுற்றினால் எல்லோரும் பேய்களை நம்பிவிடுவார்களா?.ஆனால் அப்போது நமது முப்பத்து முக்கோடி கடவுளரும் பின்பு பன்னாட்டு கடவுள்களும் காட்சி கொடுக்க வேண்டிவரும்.சற்று சுவாரஸ்யம் நிறைந்த கற்பனைதான்.இந்த தலைப்பில்  நான் எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை எனக்கு அப்படியொரு எண்ணமும் கிடையாது.உங்கள் நம்பிக்கைகளை காயப்படுத்தும் எண்ணமும் எனக்கு கிடையாது.சொல்லப்போனால் நம்பிக்கைகள்  வார்த்தைகளை கடந்தவை.காயப்படுத்தும் சாத்தியங்களை கடந்தவை.என்ற போதிலும் என்னை மீறி நடந்த தவறுகளுக்கு நான் வருந்துகிறேன்.எனது விருப்பமெல்லாம் உங்கள் கற்பனை சிறகுகளுக்கு ஒரு இறகு கொடுப்பதுதான்.நன்றி.

அன்புடன்
கண்ணன்.பெ

vampire-eyes

March 30, 2008

நான் விரும்பும் பேய்கள்-5!

Filed under: பொது — கண்ணன் பெருமாள் @ 9:23 pm
Tags:

சிறிது காலத்திலெல்லாம் என் அப்பா என்னிடம் சொன்ன உண்மைதான் என் பயம் என்னை விட்டு விலக காரணமாயிருந்தது.இத்தனை வருடங்களாகியும் அவர் இதுவரைக்கும் பேய்களையோ,கடவுளையோ நேரில் கண்டதில்லை என்ற ஊரறிந்த உண்மைதான் அது.ஒரு சிலரே சாட்சியங்களோடு திரிகின்றனர். பெரும்பாலானவர்கள் பேய்களை பற்றி
கோவில்களிலும், கடவுளை பற்றி சுடுகாடுகளிலும் நினைக்கின்றனர்.ஆண்கள் பெண்களை
பற்றியும் பெண்கள் ஆண்களை பற்றியும் நினைப்பது போல பேய்களும், கடவுளரும் தங்களுக்குள்ளே நினைத்துகொள்வார்களா?.என் அப்பா அவருடைய சின்ன வயதில்
எம்.ஜி.ஆரின் படங்களில் பைத்தியமாக இருந்திருக்கிறார்.எனவே பல மைல்கள் நடந்து இரவு காட்சி பார்த்துவிட்டு சௌகரியமாக சுடுகாட்டில் கூட படுத்து தூங்கிருப்பதாக சொன்னார்.எனக்கு அப்போது தோன்றியதெல்லாம் எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் தைரியம்
நிறைய வரும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனை மட்டுமே.இப்படி பேய்களை பற்றிய பயம்
எனக்கு குறைந்தும் கூடியும் கூடவே வந்து கொண்டிருந்தது.அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் என் கையில் சிக்கியது அந்த புத்தகம்.எங்கள் வீட்டு பரணில் கிடந்ததை தூசி தட்டி எடுத்துவிட்டேன்.புத்தகத்தின் தலைப்பு “மரணத்தின் பின் மனிதர் நிலை” என ஞாபகம் மறைமலைஅடிகள் எழுதியதென நினைக்கிறேன்.பேய்களை பற்றிய எனது முதல் புத்தகம் சிறு வயதில் எனக்கு பரிச்சயமாயிருந்ததெல்லாம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும்,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமும்தான்.எனவே மறைமலையடிகளின் தூய தமிழ் நடை என்னை சற்று வியர்க்க வைத்துவிட்டது.இருந்தாலும் திகிலோடு படித்துகொண்டிருந்தேன்.நான் எந்த தத்துவ விசாரணையிலும் இறங்கவில்லை எனக்கு தேவையெல்லாம் ஞாபகம் வைத்துகொள்ளும்படியான பேய்க்கதைகள்.அவர் ஷேக்ஸ்பியரின் ஹம்லேட் நாடகம் குறித்து எழுதியிருந்தது மட்டும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.அதுதவிர நம்மவூர் கதைகள் சிலவும் இடம் பெற்றிருந்தது.ஆவேசம் கொண்டு அலையும் ஆன்மாக்கள் பழி தீர்த்துகொள்ளாமல் சாந்தியடையாது என தெரிந்தவுடன் சற்று கிலி பிடித்தது.
பின்பொருமுறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை படித்தேன்.விவேகானந்தர் சிறு வயதில் பேயிருக்கிறது என சொல்லப்பட்ட மரத்தில் தலைகீழாக தொங்குவாராம்.எனக்கு ஒரே சந்தோசம் சிறுவர்களை பேய் ஒன்றும் செய்யாது என்று நினைத்து.நான் கூட கேள்வி பட்டிருக்கிறேன் புளியமரங்களில் பேயும் வேப்ப மரங்களில் அம்பிகையும் குடியிருப்பதாக. அதனால்தான் அதிக அளவில் புளியமரங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.அது மட்டுமல்ல புளிய மரத்தின் அளவை வைத்தே அதில் எத்தனை பெரிய பேயிருக்கலாம் என்பதை சொல்லிவிட முடியும். ஆனால் நான் பெரும்பாலும் மாலை வேலைகளில் டிவி பார்க்க தெருத்தெருவாக சுற்றுவேன்.அப்பொழுதெல்லாம் அஞ்சு(ஐந்து) வீட்டு வளவு தாண்டி ஓடித்தான் போவேன் ,அங்கே பெரிய புளிய மரம் ஒன்றிருந்தது.அதன் காய்கள் மிகமிக சுவையாக இருக்கும்.அதுதவிர ரெட்டை குளத்துகருகில் இருந்த சொக்குபிள்ளை கிணற்றுக்கு நானும் என் தம்பியும் சில நண்பர்களும் செல்வதுண்டு.சாலை நெடுக புளிய மரங்கள்தான் இருந்தது. ஆனால் என்னை வியர்க்க வைத்தது கிணற்றுக்கு திரும்பும் முனையிலிருந்த அந்த புளிய மரம்தான்…

vampire-eyes-sm1.jpg

March 23, 2008

நான் விரும்பும் பேய்கள்!-4

Filed under: பொது — கண்ணன் பெருமாள் @ 4:17 pm
Tags:

பேய்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் எல்லோரிடமும் எதோ ஒரு கதையோ,விஷயமோ அல்லது அனுபவமோ இருக்கும்.வயது வித்தியாசமின்றி பேய்களைப் பற்றி எல்லோரும் பேசக் கேட்டிருக்கிறேன்.எனது அம்மா பேய்களைப் பற்றி நிறைய கதை சொல்லுவாள்.அதுக்கு காரணமிருந்தது,நான் சிறு வயதில் வீட்டிலிருக்கும் நேரம் மிகக் குறைவு.சொல்லப் போனால் இரவு தூங்கவும், மற்ற வேலைகளில் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்கு செல்வேன். ஆகவே எனக்கு பேய்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் நிறையவே இருந்தது.

என் தாத்தா,பாட்டி காலத்து பேய்களிலிருந்து அவள் பார்த்த, கேட்ட பேய்கள் வரை எனக்கு விவரமாக எடுத்து சொல்லுவாள்.என் அம்மா மிக நன்றாக பேசுவாள்.அவள் பேசுவதைக் கேட்க நிறைய பேர் வருவார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக்கிடும் திறமை அவளிடம் அதிகம் அப்படிபட்டவளுக்கு பேய்கள் என்றால் கேட்கவா வேண்டும். என் தங்கை, தம்பி என எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள அவள் கதை சொல்லிடுவாள்.நான் பேய்களை விட பேய்கள் இருக்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருப்பேன்.மேலும் பேய்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? கோபமூட்டும் விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆசைபட்டிருக்கிறேன்.தெரிந்தோ தெரியாமலோ எந்த பேயையும் கோபப்படுத்தி விடக்ககூடாது என்ற பயம்தான்.பேய்கள் உலாவும் இடமென தெரிந்தால் தனியாக அங்கு செல்வதை தவிர்த்துவிடுவேன்.
அதையும் தாண்டி போக நேரிட்டால் எனக்கு தெரிந்த சப்பாணி மந்திரங்களை சொல்லுவேன், இல்லை ஒரு இரும்பு துண்டை என் டவுசருக்குள் (அரைக் கால் சட்டை என்ற தமிழ் வார்த்தை தெரிந்த பொழுது நான் அதை அணியும் பருவத்தை கடந்து விட்டேன்) போட்டுக் கொள்வேன்.இல்லை என்றால் என் கழுத்தில் “யாமிருக்க பயமேன்”
என முருகனின் டாலர் தைரியம் கொடுக்கும்.என் தாத்தா ஒரு சாமியாடி அவர் சொன்னால் பேய்கள் கேட்கும் என அம்மா சொல்லுவாள்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய முட்காட்டை ஒட்டி ஒரு சிறிய சுடலைமாடசுவாமி கோவில் இருந்தது.என் சிறு வயதில் நான் அங்கு விளையாடுவது
வழக்கம். சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன்,இசக்கியம்மன்,முனியசுவாமி என சில சாமிகள் அங்கே இருந்தனர்.அந்த சாமிகள் எல்லாம் சற்று துடியான தெய்வங்கள் (கோபக்கார சாமிகள்) என்ற செய்தி என் காதில் விழுந்தது.குறிப்பாக வீட்டில் தலைப் பிள்ளைகளை அந்த சாமிகள் காவு(பலி) கேட்கும் எனவும் சொன்னார்கள்.என்ன செய்வது நான் மூத்த பிள்ளையாயிற்றே என வருந்தினேன்.சற்று குறைந்து விட்டது எனது ஆட்டம்.ஆனால் அது நீடிக்கவில்லை..

vampire-eyes-sm1.jpg

பேய்கள் உலாவும்…

February 29, 2008

நான் விரும்பும் பேய்கள்… (3)

Filed under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 4:36 pm
Tags:

உங்கள் கனவுகளில் வருகின்ற பேய்கள் என்ன செய்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? பேய்களுக்கு மனிதர்கள் அளவுக்கு முகபாவனைகள் தெரியாதோ என்னவோ? எப்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு நம்மை பயமுறுத்தும்,ஒருவேளை ஒரே மாதிரி இருப்பதால்தான் பயங்கரமாக தெரிகிறதோ?.நானும் அப்படித்தான் ஒரு வித்தியாசமான பேய்க்கனவில் பயந்து அலறி விட்டேன்.என் அப்பா எனக்கு திருநீறு பூசிய பிறகு,சிறிது தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.

யாருமற்ற, பனை மரங்கள் நிறைந்த ஒரு காட்டுக்குள் நான் மட்டும் ஓடுகிறேன்,எதிரே இருக்கும் பெரிய குளத்தில் அடக்கடவுளே!,கருப்பு நிற அன்னங்கள் என் மூச்சே நின்று விடும் போல இருந்தது.பின்னே விரட்டுவது யார் எனத் தெரியாமல், திரும்பி பார்க்கும் தைரியமும் இல்லாமல், மூச்சிரைக்க ஓடினேன். ஆம், என்னை யாருமே விரட்டவில்லை நானேதான் ஓடி கொண்டிருக்கிறேன் ஆளரவமற்ற அந்த ஒத்தை வீட்டை நோக்கி என நினைத்த மாத்திரத்தில்..கிட்ட தட்ட உயிர் போய்விட்டது.
ஒருமுறையாவது என் அப்பாவை கூக்குரலிட்டு அழைத்து விடவேண்டுமென்று துடித்தேன்.நாக்கு வறண்டு விட்டிருந்தது.கண்களை கட்டிக்கொண்டு வந்தது.கால்கள் பின்னிக்கொண்டன. கடைசி முறையாக நான் உயிரை பிடித்து கத்தியபோது என்னை தவிர வீட்டில்  எல்லோரும் எழுந்திருந்தனர்.

தினமும் என் கனவில் பேய்கள் வந்தவாறே இருந்தன.உடைமரங்கள் நிறைந்த காட்டில், மரங்களை விட சற்று உயரத்தில் பறந்து கொண்டிருப்பேன்.வழக்கம்போல பேய்கள் என்னை துரத்தும்.பிறகு சற்று நேரத்தில் ஊரே பிரளயம் வந்தது போல் மழை வெள்ளத்தில் மிதக்கும்.தண்ணீரில் பல வண்ணங்களில் சேலைகள் மிதந்து செல்லும்,ஒவ்வொன்றும் ஒரு உயிருள்ள பாம்பை போல நெளிந்து நெளிந்து செல்லும்.ஒரு வெள்ளை நிற குதிரையில் நான் ஏறி காற்றை விட வேகமாக செல்ல… பொழுது விடிந்திருக்கும்.வெளிச்சத்தில் பேய்கள் வராது என்பது எனது அன்றைய நம்பிக்கை..

பேய்கள் உலாவும்…

vampire-eyes-sm1.jpg

February 23, 2008

நான் விரும்பும் பேய்கள்..

Filed under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 4:20 am
Tags: , , ,

பேய்களை பற்றிய கதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை… சிறு வயதில் இரவில் சொல்லப்பட்ட அத்தனை பேய்க்கதைகளும் ரத்த கறை படிந்தவை… சில பேய்கள் புதையல்களை காத்தபடி காலந்தள்ளி கொண்டிருப்பதையும்… சில பேய்கள் நான் குளிக்க போகும் கிணற்றில் அமாவஷை, பௌர்ணமி தினங்களில் தலைக்கு குளித்து விட்டு கூந்தலை விரித்து விட்டபடி… அழுதுகொண்டோ அல்லது பலமாக பேய் சிரிப்பு சிரித்த படியோ உட்கார்ந்து கொண்டிருப்பதையோ கேள்விப்பட்டிருக்கிறேன். . சில நாட்களுக்கு அந்த கிணற்று பக்கம் போக மாட்டேன் என்று என் தாயார் என்னிடம் கூறியதாக கூட இருக்கலாம்.. ஆனால் அந்த கிணற்றில் குளிக்கும்போது கண்களை மூடுவதற்கு சற்று பயமாகவே இருக்கும்..

அதுவும் கிணற்றுக்கு மேலே இருந்து குதித்து தலை தண்ணிக்கு வெளியே வரும் வரைக்கும் உள்ளே உலவுகிற பேய் காலை பிடித்து இழுத்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.. பள்ளிக்கூடத்திற்கு பின்னால் இருக்கும் கல்லறை கிணற்றில் தண்ணீர் எப்பொழுதுமே வற்றுவதில்லை… கோடையில் கூட பால் மாதிரி தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும்… அதற்கு காரணம் கல்லறையிலிருந்த பேய்கள்தான்.. நான் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை..எபோழுதாவது கிரிக்கெட் விளையாட போகும்பொழுது கல்லறை தோட்டத்தை பார்ப்பதுண்டு.. அரளி பூக்கள் சிரித்தபடி இருக்கும்… அதுகூட பயப்படுத்தும்படியாகவே இருக்கும்.. அரளி விதை விஷம் என்பதுதான் காரணம்.. கல்லறை என்பதற்காக பூக்கள் கூடவா அரளிப்பூகளாக இருக்க வேண்டும்.. பேய்கள் அப்படிப்பட்ட இடங்களை விரும்புவதாகவே தோன்றியது..

சினிமா தியேட்டருக்கு அருகில் இருந்த ஒத்த பாலம் கூட பேய்கள் அமர்ந்து கதை பேசும் இடமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.. அங்கே ஒரு மோகினியும், சில
இரத்த காட்டேரிகளும் இருப்பதாக சொன்னார்கள்.. நம்பத்தான் வேண்டியிருந்தது.. ஏனெனில் எங்கள் ஊரில் நடந்த இரட்டை கொலைகளில் ஒன்று அங்கே நடந்ததாக செய்தி..பின்னிரவு காட்சிகளை நான் காணமல் இருந்ததற்கு அந்த பேய்கள்தான் காரணம்
மற்றபடி சைக்கிளில் நான் செல்லும்பொழுது அந்த பாலம் ஒரு கொலைக்களமாகவே தெரியும் மிக மெதுவாகவே செல்லுவேன் .. இருந்தும் ஒருமுறை கீழே விழுந்து என் கீழுதட்டின் கீழே ஒரு ஓட்டை விழுந்து விட்டபின் என்னை அந்த பேய்கள் பதம் பார்த்துவிட்டதாகவே தோன்றியது..

பேய்கள் உலாவும்.

.vampire-eyes-sm1.jpg

Create a free website or blog at WordPress.com.