தொடுவானம் தொடாத விரல்

February 23, 2008

நான் விரும்பும் பேய்கள்..

Filed under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 4:20 am
Tags: , , ,

பேய்களை பற்றிய கதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை… சிறு வயதில் இரவில் சொல்லப்பட்ட அத்தனை பேய்க்கதைகளும் ரத்த கறை படிந்தவை… சில பேய்கள் புதையல்களை காத்தபடி காலந்தள்ளி கொண்டிருப்பதையும்… சில பேய்கள் நான் குளிக்க போகும் கிணற்றில் அமாவஷை, பௌர்ணமி தினங்களில் தலைக்கு குளித்து விட்டு கூந்தலை விரித்து விட்டபடி… அழுதுகொண்டோ அல்லது பலமாக பேய் சிரிப்பு சிரித்த படியோ உட்கார்ந்து கொண்டிருப்பதையோ கேள்விப்பட்டிருக்கிறேன். . சில நாட்களுக்கு அந்த கிணற்று பக்கம் போக மாட்டேன் என்று என் தாயார் என்னிடம் கூறியதாக கூட இருக்கலாம்.. ஆனால் அந்த கிணற்றில் குளிக்கும்போது கண்களை மூடுவதற்கு சற்று பயமாகவே இருக்கும்..

அதுவும் கிணற்றுக்கு மேலே இருந்து குதித்து தலை தண்ணிக்கு வெளியே வரும் வரைக்கும் உள்ளே உலவுகிற பேய் காலை பிடித்து இழுத்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.. பள்ளிக்கூடத்திற்கு பின்னால் இருக்கும் கல்லறை கிணற்றில் தண்ணீர் எப்பொழுதுமே வற்றுவதில்லை… கோடையில் கூட பால் மாதிரி தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும்… அதற்கு காரணம் கல்லறையிலிருந்த பேய்கள்தான்.. நான் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை..எபோழுதாவது கிரிக்கெட் விளையாட போகும்பொழுது கல்லறை தோட்டத்தை பார்ப்பதுண்டு.. அரளி பூக்கள் சிரித்தபடி இருக்கும்… அதுகூட பயப்படுத்தும்படியாகவே இருக்கும்.. அரளி விதை விஷம் என்பதுதான் காரணம்.. கல்லறை என்பதற்காக பூக்கள் கூடவா அரளிப்பூகளாக இருக்க வேண்டும்.. பேய்கள் அப்படிப்பட்ட இடங்களை விரும்புவதாகவே தோன்றியது..

சினிமா தியேட்டருக்கு அருகில் இருந்த ஒத்த பாலம் கூட பேய்கள் அமர்ந்து கதை பேசும் இடமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.. அங்கே ஒரு மோகினியும், சில
இரத்த காட்டேரிகளும் இருப்பதாக சொன்னார்கள்.. நம்பத்தான் வேண்டியிருந்தது.. ஏனெனில் எங்கள் ஊரில் நடந்த இரட்டை கொலைகளில் ஒன்று அங்கே நடந்ததாக செய்தி..பின்னிரவு காட்சிகளை நான் காணமல் இருந்ததற்கு அந்த பேய்கள்தான் காரணம்
மற்றபடி சைக்கிளில் நான் செல்லும்பொழுது அந்த பாலம் ஒரு கொலைக்களமாகவே தெரியும் மிக மெதுவாகவே செல்லுவேன் .. இருந்தும் ஒருமுறை கீழே விழுந்து என் கீழுதட்டின் கீழே ஒரு ஓட்டை விழுந்து விட்டபின் என்னை அந்த பேய்கள் பதம் பார்த்துவிட்டதாகவே தோன்றியது..

பேய்கள் உலாவும்.

.vampire-eyes-sm1.jpg

Create a free website or blog at WordPress.com.