தொடுவானம் தொடாத விரல்

April 4, 2011

என் குருசு…

my_cross

உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?

March 24, 2010

வலசை பறவைகள்!

நிலவின் கவிதை
ஒளிர்ந்தது..
குளிர் நிறைத்து 
இருளாய் விரிந்தது..
மின்னி மின்னி 
மறைந்தது.. 
விண்மீன்கள் 
துளிர்த்தது..
கடல் நடுவே
அலைகளைப் போல 
அர்த்தம் இழந்தது…
கண்கள்,கடல்..
உடல்,உப்பு..
எங்கே காற்று? 
எங்கே மண்?   
வலசைப் பறவைகளின்  
வழியில்
சுடர்ந்தது நிலா..
 
    
    

March 20, 2010

உன் வானாகி…

trivial_bloom

பறப்பதையுணராத
பறவையது..
திசையிலி..
எங்கோ தூரத்தில்
ஒற்றையாய்
மாந்தளிர் மேகம்,
மெப்பனைக்கு
ஓட்டைச் சூரியன்…
எதற்கு சிறகுகள்?
சாலையோரங்களில்
பொறுக்கித் தின்னும்
புறாக்கள்…
கீரைக்காம்பு கால்கள்..
படபடக்கும் சிறகுகள்..
கனவு பூக்காத
கண்கள்…
அடிவயிற்றில்
சில்லிடுகிறது,
நெருஞ்சிச் செடியில்
நெறைஞ்ச
ரெண்டு தாமரை..

எதற்கு வானம்?

February 6, 2010

நீராடல்…

மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி  சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…

January 26, 2010

மந்தைகளே…

a call to my shepherd

உங்கள் மந்தைகளில் இல்லை
நான்,
எனது மேய்ப்பனை
தேடும் ஆடு
நான்,
என்னிடமிருந்து
தொலைந்த அவனை
தேடுகிறேன்..
உங்கள் மந்தைகளில்
தேடுகிறேன்,
அவனும் ஓர்
ஆடாகியிருக்கக்கூடும்..
உங்கள் மேய்ப்பர்களில்
தேடுகிறேன்
அவன் என்னை
மறந்திருக்கக்கூடும்..
உங்கள் சவ ஊர்வலங்களில்
தேடுகிறேன்
உங்கள் களப்பலியாக
அவனிருந்திருக்கக்கூடும்..
உங்கள்
பிணக் குவியல்களில் தேடுகிறேன்
நானில்லாமல் அவன்
அனாதையாகியிருக்கக்கூடும்..
குழந்தைகளை தேடி
அலைகிறவன்
ஏதாவது பள்ளியில்
ஆசிரியராயிருப்பான்..
இல்லை தெருக்களில்
கோமாளியாகியிருப்பான்..
அவனை என்னிடம்
வரவிடுங்கள்
மந்தைகளே…

December 27, 2009

புல்..

innocent_grass

யாரும் சொல்லாத
கவிதை
சுமந்த பனித்துளி,

யாரும் கேட்காத
கவிதையோடு
தொலைகிறது..

இரவில்
வந்த கனவை
என்றுமறியாது
அந்தப் புல்..

November 15, 2009

நித்ய விளையாட்டு…

அணையாமல்
எரிகிறது
சுடலையின் தீ..
திசையெங்கும்
பரவுகிறது
வெறுமையின் உச்சம்..
என்றுந் தீராத
பரிதவிப்பின் விளையாட்டு..
அலையலையாய்
ஒற்றை மேளத்தின்
பிணந்தின்னும்
வேட்டைராகம்..
இசைஞர்களும்
கேட்டிராத
மோனக்குரலில்
அழைக்கிறாள்…
மோகனம் மோகனம்
மல்லிகை மல்லிகை..
கச்சை திறந்து
காட்டினாள்
கனன்றெரியும்
காலச் சக்கரங்களை…

November 13, 2009

வலி தொடாத தூரத்தில்…

Filed under: கண்ணீர்,கவிதை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:01 pm
Tags: , ,

தாங்க முடியாத
பெருவலிகள்
வந்தபோது
கணத்தில்
மறுதலித்து விட்டேன்,
எதையும்
ஏற்றுக்கொள்ளவில்லை
பெரும் பாவனை
இதுதான்
“நான் வலி கடந்தவன்”
சொந்தமான வலி
தீண்ட எத்தனிக்கும்போது
எனக்கே
நான் யாரோ?
மரணம் தொட்டதில்லை
தோல்வி தொட்டதில்லை
காயம் தொட்டதில்லை
கண்ணீர் இரத்தம் பசி பயம்
எதுவும் தொட்டதில்லை
வலியை உணராத  
மிருகம்
வலியை அஞ்சும்
எதுவும் மிருகம்தான்..
இல்லை மனிதன்..
குரூபி கொடூரன்
கல்நெஞ்சக்காரன்
நீசன் ஈசன்
சண்டாளன்..
வலி தொடாத
தூரத்தில்
உளறல்கள்…

November 3, 2009

சிவ தனுசு!

Filed under: அன்பு,இளமை,கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 2:35 am
Tags: ,

யாருக்காகவோ எழுதும்
ஒரு கவிதை,
மௌனமாக பார்க்கப்படுகிறது..
சில தடவைகள்
நாட்குறிப்புகளுக்குள்
உப்புக்கரிக்கும் விரல்களால்
ஒளித்து வைக்கப் படுகிறது…
யாரும் வாசித்து
விடாமலிருக்க நாட்குறிப்பும்
கைக்கெட்டாத
ஆழங்களில் அடைக்கலமாகிறது…
நாட்களாக பார்க்கப்பட்ட
நாட்குறிப்பு
மாதங்களாய்,வருடங்களாய்
கண்ணுக்குள் ஒளியாகி,
மொழிகளின் மொழியாகி,
வன்மத்தின்
உதிரம் குடித்து,
சிவ தனுசாகிறது…
வேண்டாம் இராமனென்று
ஒரு கனத்த இரவில்
சீதையே
ஒடித்து விட்டாள்…
தீ பிழைத்தது..

October 13, 2009

நீ வாசித்த புல்லாங்குழல்…

Filed under: கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 4:38 pm
Tags: ,

காற்றுக்கென்ன
திட சித்தம்?
ஒரு துளை
நுழைந்து
மறு துளை
தலை காட்டும்..
பூங்கரத்தால்
தட்டி தடுத்து
இன்னிசையாய்
வளரவிட்டாய்…
குளிர்ந்து கனிந்து
உறைந்து நானானது
உன் சுவாசம்…

Next Page »

Blog at WordPress.com.