தொடுவானம் தொடாத விரல்

April 9, 2011

களித்தோழி!

விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..

June 11, 2008

நேருக்கு நேர்!!!

காற்றை
சந்திக்க புறப்பட்டேன்,

காதல் போலத்தான்
காற்றும்,
உன்னைச் சுற்றியிருக்கும்
உனக்குள்ளும் இருக்கும்!

தேடியலைய
தேவையில்லை,
உணர்வதுதான்
உன் வேலை!

சாலையில் வந்தது
எதிர் காற்று,
பின் கீழ்க்காற்று,
வடக்கிலிருந்து வீசிய
வாடைக்காற்று,

இளமையில்
மிதி வண்டியை,
நடைவண்டியாகிய
மேல்காற்று,

மார்கழியில்
போர்வைக்குள் புகுந்த
பனிக்காற்று,

புதுமணப் பூக்களை
வாட வைக்கும்
ஆடிக்காற்று,

சித்திரையில்
கத்திரிக்கு பிறந்த
அனல் காற்று,

ஜுனில்
பள்ளிக்கு வந்த
பூவிற்கு,
செப்டம்பரில்
கடிதம் கொடுக்கும்
பருவக்காற்று,

கோபியரை
கொள்ளை கொண்டது
வேய்ங்குழலில் பூத்த
கண்ணனின்
காதல் காற்று,

அதிசயம்தான்,
பங்குச் சந்தை
தெரியாத
வியாபாரக் காற்று,

பக்கம் நின்றாலே
பதங்கமாவாய்,
அவளின் மூச்சுக் காற்று,

ஐந்து நாள்
அவசர வாழ்க்கையை,
அரைமணி நேர
நிதானத்தில்
கரைக்கும்
கடற்கரை காற்று,

நிலாமுற்றத்தில்
அன்னை மடியே
சுகம்,
வரும் தென்றல்
ஒரு உயிரின்
இரு பிரதிகளையும்
வருடிவிட்டுப்போகும்,
அது தெய்வீக காற்று,

காற்றின்
பரிமாணங்களை
புரியமுடியாது,
தென்றலாய் கொஞ்சும்,
சூறாவளியாய் சுழற்றும்,
புயலாய் சீறும்,

காதலும் அதுபோலவே,

நீ
மகிழ்வாய்,
துயில்வாய்,
துணுக்குருவாய்,
துயரடைவாய்,

காதலும்,காற்றும்
ஒருபோதும்
ஓய்வதில்லை,
ஓய்ந்தால்
அப்போது
உலகமில்லை!

Blog at WordPress.com.