தொடுவானம் தொடாத விரல்

April 4, 2011

என் குருசு…

my_cross

உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?

October 2, 2009

மழையிரவில் உலகம்..

உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..

June 6, 2009

இரவோடு கலையும் கனவுகள்…

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…

January 24, 2009

விடிந்தெழுந்தேன்!!!

Filed under: அன்பு,இரவு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:25 pm
Tags: , ,
Endless Night

Endless Night

நேற்று இரவு
நெடு நேரமாய்
நீ
உறங்கவில்லை,

புரண்டு படுக்கவும்
விருப்பமில்லாதவளாய்
நீயாகிவிட்டாய்!

திசைகாட்டும் கருவியாய்
வடக்கு சுவர்
பார்த்தே
உறங்கினாய்
இல்லை, இருந்தாய்!

இன்னும்
உன்னைப்பற்றி
எழுதிக்கொண்டே
இருக்கலாம்…

என்னைப்பற்றி
ஒன்றை மட்டுமே
சொல்லமுடியும்!

நேற்றிரவும்
நான் பேசுவதற்காக இல்லை,

நீ
பேச விரும்பும்
எந்த தருணத்திலும்
கேட்கவே,
விழித்திருந்தேன்!

Create a free website or blog at WordPress.com.