தொடுவானம் தொடாத விரல்

October 14, 2008

கோப்பையில்லாத கைப்பிடி!!!

Filed under: அன்பு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:08 am
Tags: , ,
You&Me

நுணுக்கமானதொரு
பீங்கான் கோப்பை
எதிர்பாராமல்
நிகழ்ந்த  கைபடலில்
தன்னிலும் வலுவான
தரையில் விழுந்து
நொறுங்காமல் உடைந்தது…

கோப்பையின் கைப்பிடி,
கைப்பிடியில்லாத கோப்பை
இப்படியாக…

உடைந்தாலும்
அது
ஏதோவொரு கோப்பையாக
இருந்ததினால்
பூக்களை சுமந்துகொண்டு
சூடான தேநீர் காலங்களை
நினைத்தபடி….

மற்றுமொரு
பிஞ்சு கரத்தின்
கைபடலையோ…
தளர்ந்த விரல்களின்
நடுக்கமான ஸ்பரிசத்தையோ,
தவற விடுதலையோ
மௌனமாக எதிர்பார்த்தபடி…

ஆனால்
உடைந்த கைப்பிடி
உடைந்த  “கோப்பையின் கைப்பிடியாகவே”
சிறுமையுற்றது…

கோப்பையில்லாத கைப்பிடியாக
யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை…
அதுவே கூட…

நீ
என் கோப்பை,
நான்
உனது கோப்பையில்லாத கைப்பிடி…

Advertisements

September 8, 2008

தொடுவானம் தொலைத்தல்…

Filed under: அன்பு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:49 pm
Tags: , ,

எதிர்பார்ப்புகள்
தீர்ந்த மழை நாளில்
நீயும்,நானும்…

கணுக்காலளவு
தண்ணீரில்
கனவுகள் கப்பலாக..

காகிதம்
தீர்ந்த பிறகு
கண்களில்..

ஓசைப்படாமல்
ஒரு காற்று
உன் கூந்தல்
கலைத்தது…

உன்
அழகு சுழலில்
நானும்,காற்றும்..

நீயோ
தூரம் சென்ற
கப்பல்களோடு…

நீ
திரும்பி
பேச விழைந்த
கணத்தில்..

உன் கண்கள்,
என் கண்கள்,
சிறு
புன்னகை மின்னல்..

நீ
தேடிக்கண்ட
சொற்களில்
ஒளிந்திருந்தது
உனது பிரியம்..

தொலைந்திருந்தது
தொடுவானம்…

August 10, 2008

நினைவுகளாய் நீள்பவன்…

Filed under: அன்பு,நட்பு,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 7:51 am
Tags: , ,

நண்பனே..
என் வசந்த காலங்களின்
சிறகாக இருந்தவனே..
உன்னை நினைக்காத
நாளில்லை..
மயிலிறகு போல
மனதை வருடுகிறது
உன்னை நானும்
என்னை நீயும்
நிரப்பிக்கொண்ட நிமிடங்கள்..
அந்த நாட்களில்
வீடு மட்டுமே
நமக்கு வேறாக இருந்தது…
சிறுசிறு சண்டைகள் கூட
இல்லாதது
நமது நட்பு..
நான் வாசித்த
புத்தகங்களின்
அட்டைப் படம் மட்டுமே
பார்த்தவன் நீ..
நீ
சுவாசித்த
திரைப்படங்களின்
பாடல்களை கூட
கேட்காதவன் நான்..
நாம்
பேசிக்கரைந்த இரவுகள்
எதற்கும் நீளமில்லை..
நீ
சேகரித்த
கிளிஞ்சல்களும்,
கூழாங் கற்களும்
என் நினைவோடையில்
நிறைந்து கிடக்கிறது…
எந்த விடுமுறையும்
நம்மிடம் விடுபட்டதில்லை..
எல்லா தேநீர் கடைகளிலும்
தெரிந்தே இருந்தது
நமது நட்பின் சுவை…
எந்த தையலகமும்
பண்டிகை காலங்களில்
நம்மை சேர்த்தே தைத்தது…
இன்னும் எழுதலாம்..
நினைவுகளை மட்டுமே
பரிசாக தந்துவிட்டுபோன
நிலாக் காலங்களை…

August 8, 2008

இரவெலாம் நாம்!!!

Filed under: அன்பு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 7:19 pm
Tags: , ,

இரவெல்லாம்
பேச வேண்டும்,
கனவுகளை,
கண்ணீரை,
கவிதையை,
ஏமாற்றத்தை,
எழுச்சியை,
துயரத்தை…..
எல்லாவற்றையும்..
ஊர் உறங்கிப்போன பிறகும்
உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்
போதும் இது போதும்…

August 7, 2008

திருட வந்திருக்கிறேன்…

கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…

July 30, 2008

இரவு குழந்தை,நீ தாலாட்டு!!!

ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக்கமின்றி
என் ஜன்னலின் வழியே
இருளாய் கசிந்தது…!
ஓசையின்றி
அதன் காதுகளில்
உன் பெயரை சொன்னேன்..!
விடியும் வரை
எழுந்திருக்கவில்லை இரவு..!
இரவு குழந்தை,
நீ தாலாட்டு!!!

July 12, 2008

இதற்குப் பெயரும் காதல்தானா?

Filed under: அன்பு,காதல் — கண்ணன் பெருமாள் @ 5:32 pm
Tags: ,

யுகயுகமாய் காதலித்தும்
என்ன பிரயோஜனம்?
என்றுமே
என் அனுமானங்களை
கடந்து விடுகிறது
உன் அன்பு மட்டும்!

உன்னால் மட்டுமே முடிகிறது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
உயிரை உறிஞ்சும்படியான
காதலை சொல்ல!

பேனாவை தொடாமல்
நாள் முழுவதும்
கைகட்டியபடியே இருந்தேன்,
உன் அளவில்லாத அன்பால்
அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!

உன் அன்பை
பற்றிக் கேட்டேன்
நீ
ஆகாயத்தை கை காட்டினாய்,
இதற்குப் பெயரும் காதல்தானா?

July 5, 2008

காதல் சொல்லும் கவிதைகள்-3!!!

Filed under: அன்பு,காதல் — கண்ணன் பெருமாள் @ 4:46 pm
Tags: ,

உன்னால்
என்னை நம்ப முடியவில்லை,
பிறகு
என்னால் என்னை எப்படி நம்புவது?

தொலைபேசியில் கண்டபடி
எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே
பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;

உன்னைத் தெரிந்தவர்களிடம்
கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய
வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத
துக்கமுமாக,
நாளெல்லாம்
வெறுமையில் கரைகிறது!

உன் வெட்கம்
என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும்
வார்த்தை மட்டும் வரவேயில்லை!

உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி
திரும்பி உன்னிடமே வருகிறேன்!

தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள்
நீ எங்காவது போய்விடப் போகிறாய்!

June 26, 2008

அவள் அருகிலில்லாத இரவுகள்!!!

Filed under: அன்பு,காதல்,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 12:43 am
Tags: , , ,

அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உறங்குவாய்?

மின்சாரம் தடைப்பட்ட
இரவுகளும்  அதுபோலவே;

உடைந்து வரும் வார்த்தைகளில்
மத்திய மாநில சர்க்கார்கள்
நொறுங்கிபோயிருக்கும்;

புரண்டு படுத்தாலும்,
முகம் புதைத்தாலும்,
போர்வை உதறினாலும்
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!

தியானத்திற்கு  எழுத்து கூட்டாத நீ
கண்ணை மூடி உறக்கத்தை
உச்சரிக்க வேண்டிவரும்,
அவள் அருகிலில்லாத இரவுகளில்,
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!

மகாநதிகளும்,காற்றும்,கடலும்
என் கருவறைகள்,
இனிவரும் நூற்றாண்டுகளில்
குளோனிங் குழந்தைகள்
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;
மின்சாரம் இல்லாமல்?

காதலின் சாட்சியாக
இருந்த குழந்தைகள்,
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,
அவள் அருகிலில்லாத இரவுகள்?
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!

June 15, 2008

மாறாத என் காதல் தேவதையே…

Filed under: அன்பு,காதல் — கண்ணன் பெருமாள் @ 5:45 pm
Tags: , ,

நீ
நிலவென்பதால்
என் காதலும்
இரவாகவே
இருந்து விடுகிறது!

நீ
கவிதையென்பதால்
என் காதலும்
தமிழோடு
தங்கி விடுகிறது!

நீ
அழகு என்பதால்
என் காதல்
கண்களாகவே
காலம் தள்ளுகிறது!

நீ
அடக்கம் என்பதால்
என் காதல்
ஒழுக்கமாக
ஒதுங்கி நிற்கிறது!

நீ
நதி என்பதால்
என் காதல்
கடலாக
காத்திருக்கிறது!

நீ
பூ என்பதால்
என் காதல்
வாசமாக
வீசுகின்றது!

கடைசியில்
நீ
என்பதால்தான்
என் காதல்
இப்படி வெட்கப்படுகிறது!

தீராத காதல்மழையின்
துவக்க வரிகளாக
இருகரைகளிலும்
கவிதை மேகங்கள்!

நீயா?நானா?
விழிக்கும்,
மனதிற்கும்
காதல் சமர்;

காதல் பெரும்புனலில்
கரைகள்
கரைவதற்குள்
மனதின் மதகுகளை
திறந்திடு சகியே!

நாகரிகம் கருதி
நானும்;
நாணம் கருதி
நீயும்
பேசாமல் பேசுகிறோம்!

உன் வழியில்
நானும்;
என் வழியென
நீயும்
காத்திருந்தோம்;

நாம்
சந்திக்கவேயில்லை;
காதல்
நம்மை சந்தித்தது!

நான்
முத்தப்போருக்கு
அழைத்த போதெல்லாம்
நீ
முகம் திருப்பிக்கொண்டாய்;

அன்று புரியவில்லை
நீ
கன்னம்தான்
காட்டுகிறாயென்று!

« Previous PageNext Page »

Create a free website or blog at WordPress.com.