
Courtesy:Tiago Pinheiro
வானம் மசமசவென்று இருண்டு கொண்டிருந்த மாலையது , பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன் வேலைப்பளுவின் அழுத்தத்தில் சோர்ந்து என்றைக்கு திரும்பும்போது ஜன்னலோரம் நகரத்தின் இரைச்சலையும், புகையையும்,தூசியையும் படியவிடும்..பெங்களூரில் மாலை புழுக்கத்தை ஜன்னலோரம் சற்றே தணிக்கும்..விரசலாக ஓடி மறையும் மரங்கள்,பெட்டிககடைகளில் வயது வித்தியாசமில்லாமல் புகைக்கும் கூட்டம்,தளர்ந்த மார்புகள் மறைத்து தொளதொளக்கும் டீ சர்ட்டுகளுடன் நடை பயிலும் பெண்கள், இரு சக்கர வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி செல்பேசியில் கதைப்பவர்கள்,நார்த் இண்டியன் சாட் வண்டிகள்,ஸ்லீவ்லெஸ் அணிந்து செல்பேசியை விரல்களிலும் ஹன்ட்பேகை தோளிலும் சுமந்தபடிக்கு பணி முடித்து திரும்பும் இல்லத்தரசிகள், நைந்து போன சட்டை வேட்டியுடன் குடை சுமக்கும் முதியவர்கள்…இன்னும் இன்னும் எங்கெங்கும் மக்கள் வெள்ளம்..அப்படித்தான் அந்த மாலையில் நான் அந்த பிச்சைக்காரனைக் கண்டேன்..வெளிச்சத்தை விளக்கி ஓடினான் இருள் கவ்விய ஒரு சுவர் மறைவு..மலமும் மூத்திரமும் சேர்ந்து வீசும் அந்த இடத்தில் போய் சக்கென்று உட்கார்ந்து கொண்டான்..வலி நெஞ்சை கவ்வியது.. யார் இவன்? ஏன் அவலத்தையே ஆசையோடு அணைத்துக் கிடக்கிறான்? ஏன் உங்கள் தூய கைகள் தழுவுவதை அவன் மறுக்கிறான்?ஓர் அன்பான நேசப்பார்வை அவனை பயப்படுத்துகிறது..ஏன்?நிலையான அமைதியான வாழ்வை அவன் நம்பவில்லை அதையும் அஞ்சுகிறான்.. அவனுக்கு நீங்கள்ஆயிரங்களை அள்ளிக்கொடுத்தாலும் பிச்சையேற்று சாவதுதான் அவன் தர்மமென கருதுகிறான்..வாழ்வையல்ல சாவுதான் அவன் வேண்டும் வரம்.அவனை அழிந்து போக விடுங்கள் அவன் வேண்டுவதெல்லாம் சிறுக சிறுக சாவதைதானா..?உங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வேறு சாவு கிடையாது ஆனால் அவனுக்கு பிறப்புக்கு பிறகு சின்ன சின்ன சாவுகள் இருக்கிறதோ..?அவன் மீது காறி உமிழுங்கள் அதை ஏற்றுக்கொள்வான் ஏனெனில் அவனுக்கு தெரியும் அவன் அதற்கு முற்றிலும் அருகதையுள்ளவன்.பிச்சை ஏற்கும்போது மகராசன் மகராசி எனப் பசப்புவான் பின்பு எச்சில் வடிப்பான்..சதைத்த புண்களில் அமர்ந்து மொய்க்கும் ஈக்களை பார்த்தபடி மகிழ்வான்..அவன் எதைத் துறந்தான்? இல்லை துரத்தப்பட்டானா? கேட்காதீர்கள் நீங்கள் நம்பும்படி அவனுக்கு பொய் சொல்லத் தெரியாது..மீறிக்கேட்டாலும் சொல்வான் தெரிந்த பொய்யை..நம்ப முடியாத பொய்யை..நம்ப முடியாத பொய் எனத் தெரிந்தபின் அந்தப் பொய் உண்மைதானா?