விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..
April 9, 2011
களித்தோழி!
January 26, 2010
மந்தைகளே…
உங்கள் மந்தைகளில் இல்லை
நான்,
எனது மேய்ப்பனை
தேடும் ஆடு
நான்,
என்னிடமிருந்து
தொலைந்த அவனை
தேடுகிறேன்..
உங்கள் மந்தைகளில்
தேடுகிறேன்,
அவனும் ஓர்
ஆடாகியிருக்கக்கூடும்..
உங்கள் மேய்ப்பர்களில்
தேடுகிறேன்
அவன் என்னை
மறந்திருக்கக்கூடும்..
உங்கள் சவ ஊர்வலங்களில்
தேடுகிறேன்
உங்கள் களப்பலியாக
அவனிருந்திருக்கக்கூடும்..
உங்கள்
பிணக் குவியல்களில் தேடுகிறேன்
நானில்லாமல் அவன்
அனாதையாகியிருக்கக்கூடும்..
குழந்தைகளை தேடி
அலைகிறவன்
ஏதாவது பள்ளியில்
ஆசிரியராயிருப்பான்..
இல்லை தெருக்களில்
கோமாளியாகியிருப்பான்..
அவனை என்னிடம்
வரவிடுங்கள்
மந்தைகளே…
November 14, 2009
தேன்சிட்டும், லெகான் கோழி குஞ்சுகளும்!!!
ஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக
செல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.பார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.
கடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை(?) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்? நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க கோழி முட்டைகள் மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.
கோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையா?நான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால் போதும் அதை பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.
கோழிக் குஞ்சியை பார்த்திருக்கிறீர்களா? சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வாங்கிச் சென்றோம்…
June 6, 2009
இரவோடு கலையும் கனவுகள்…
இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…
ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…
துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…
புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…
கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…
எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,
மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…
May 3, 2009
டைகர்,டாமி,டெவில்..ஜூலி..
எழுதும்போதெல்லாம்
என் எல்லா வார்த்தைகளுமே
கட்டவிழ்த்த நாய்க்குட்டிகளாய்
உன்னை தேடியே ஓடுகின்றன…
August 7, 2008
திருட வந்திருக்கிறேன்…
கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…
July 30, 2008
இரவு குழந்தை,நீ தாலாட்டு!!!
ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக்கமின்றி
என் ஜன்னலின் வழியே
இருளாய் கசிந்தது…!
ஓசையின்றி
அதன் காதுகளில்
உன் பெயரை சொன்னேன்..!
விடியும் வரை
எழுந்திருக்கவில்லை இரவு..!
இரவு குழந்தை,
நீ தாலாட்டு!!!
June 26, 2008
அவள் அருகிலில்லாத இரவுகள்!!!
அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உறங்குவாய்?
மின்சாரம் தடைப்பட்ட
இரவுகளும் அதுபோலவே;
உடைந்து வரும் வார்த்தைகளில்
மத்திய மாநில சர்க்கார்கள்
நொறுங்கிபோயிருக்கும்;
புரண்டு படுத்தாலும்,
முகம் புதைத்தாலும்,
போர்வை உதறினாலும்
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!
தியானத்திற்கு எழுத்து கூட்டாத நீ
கண்ணை மூடி உறக்கத்தை
உச்சரிக்க வேண்டிவரும்,
அவள் அருகிலில்லாத இரவுகளில்,
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!
மகாநதிகளும்,காற்றும்,கடலும்
என் கருவறைகள்,
இனிவரும் நூற்றாண்டுகளில்
குளோனிங் குழந்தைகள்
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;
மின்சாரம் இல்லாமல்?
காதலின் சாட்சியாக
இருந்த குழந்தைகள்,
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,
அவள் அருகிலில்லாத இரவுகள்?
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!