மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…
February 6, 2010
நீராடல்…
December 16, 2009
ஊகணங்கள்..
May 14, 2009
கம்யூனிசமும்,”குருவி” மண்டையும்!
கன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.
என் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்?).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய?.அதையும் மீறி நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.
அப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான் தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(!),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…
March 2, 2009
உன்னை என்னால் காதலிக்க முடியாது…
- Mad about U
இனி கவிதைகளில்
நீ தேவதையாகவும்
எனக்கு
சிறகு முளைப்பதாகவும்
எழுதிவிட முடியாது…
காதலை பேச சொல்லி
காற்றை
நிறுத்த முடியாது..
இரவுக் குருவிகளின்
சத்தத்தையெல்லாம்
சங்கீதமென
சொல்ல முடியாது…
ஒருத்தரும்
எதிர்ப்படாத சாலைகளில்
உன்னை நினைத்து
புன்னகைக்க முடியாது…
சவரம் செய்ய
பற்பசையை
முகத்தில்
தடவிக் கொள்ள முடியாது..
சொல்லிவிடுகிறேன்
இனிமேல்
என்னால் பைத்தியமாக
இருக்க முடியாது…
நீ
வேண்டுமானால்
என்னை காதலித்து கொள்,
உன்னை
என்னால் காதலிக்க முடியாது…
காதலுக்கு
இரண்டு இதயங்கள் தேவை..
உனதும்,எனதுமாய்
இரண்டுமே
இன்று உன்னிடம்…
எனவே என்னால்
உன்னை காதலிக்க முடியாது..
October 14, 2008
உறவுகள் ஒரு தொடர்கதை!!!
பலமுறை யோசித்திருக்கிறேன் ஏன் உறவுகள் உலகில் இத்தனை சிக்கலாகிவிடுகிறது? என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும்?என்னவாக இருக்க முடியும்? அது அவர்களுக்கே வெளிச்சம்.
அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மனிதன் அடிப்படையிலேயே குடும்ப உணர்வுள்ளவன்.அதனால்தான் எல்லா சமயங்களும் ஒரு கட்டத்தில் குடும்ப உறவை சற்று கடுமையாக சாடியிருக்கின்றன.அரசியல் தலைவர்கள் அதனாலேயே உறவுகளை சொல்லி தொண்டர்களை அழைக்கிறார்கள்.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குடும்பம் என அழைப்பதும் இது போன்றதொரு காரணத்தினால்தான்.மனிதன் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம் குடும்பத்தை,உறவுகளை,நட்பை விட முடியாது.பிறந்த குழந்தைக்கு சொல்லாமலேயே தெரிகிற உறவு தாய் மட்டுமே.தாயை துன்புறுத்துகிற தந்தைகளை பார்க்கிற குழந்தைகள் எத்தனை கொடுமையானதொரு வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
அடுத்தவர்களின் காலுக்கு செருப்பாக இருந்துவிட்டு மனைவியை ஏறி மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்ன பிரயோஜனம்?.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில் புலியாகிறவர்களை என்ன செய்வது?சர்க்கஸில் சேர்த்துவிட வேண்டியதுதான்!.நான் இப்படித்தான் என்னால் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியாது என சொல்பவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்?.அண்மையில் ஒரு மெகா சீரியலில் 😉 இப்படி காட்டினார்கள் அந்த காவலதிகாரி பல தருணங்களில் ஒரு “Hard Negotiator” ஆக இருந்து நடக்கவிருந்த குற்றங்களை நிறுத்தியிருக்கிறார் ஆனால் தன் மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாதவர் என்ற அவரின் மனைவியின் குற்றச் சாட்டினால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள்.
எப்படி இவருடன் குடும்பம் நடத்துறதுன்னே தெரியலப்பா என சொல்லி அழும் சாமானியர்கள் எத்தனை பேர்?பணம் ஒரு பிரச்சனையே இல்லை ,நிம்மதியா ஒரு நாள்கூட தூங்கினதில்ல.இது போன்று நம்மை பலவாறாக எண்ண வைக்கும் நிகழ்வுகளை பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.வயதானவர்களோ குழந்தைகளோ இளைஞர்களோ யாராக இருந்தாலும் எல்லோருக்கும் மனம் ஒன்றுதான் உணர்வுகள் ஒன்றுதான்.எத்தனை நடந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது,நீ அன்றைக்கு இதைத்தான் செய்தாய் இன்று என் முறை,உனக்கும் வலின்னா என்னன்னு தெரியணும்,மனுஷன் விடிஞ்சு போனா அடைஞ்சுவாறான் அவனிடம் ஆசையா ரெண்டு வார்த்த பேசாம நீ இப்படி ஈயத்த காய்ச்சி ஊத்துற மாதிரி பேசிறியே,நான் மட்டும் என்ன குத்துக்கல் மாதிரி சும்மாவா உக்காந்திட்டு இருக்கேன் வீடு தூக்கணும்,தெளிக்கணும்,ஓம் பிள்ளைகளுக்கு பீயள்ளிபோடனும்,கழுவி விடணும்,குளுப்பாட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்,போகைலே கையில மத்தியான சாப்பாடு கெட்டி கொடுக்கணும்..நீங்க கட்டின துணிமணியெல்லாம் தொவச்சு போடணும்,ராத்திரியில நாக்குக்கு ருசியா சாப்பிடறதுக்கு காய்கனியெல்லாம் வாங்கிட்டு வரணும்,மஞ்ச மசாலா சாமான் இப்படி நானும் நாயா ஓடியாடி வேல பாத்தாலும் ராத்திரி வந்தா ஒரே புடுங்கலு… சோசலிசமாக இருவரும் இப்படி திட்டிக்கொள்வதும் நடக்கும்.
நாம் இன்றும் இது போன்ற உரையாடல்களை கிராமங்களிலும் சேரிகளிலும் கேட்கலாம்,வசதியான குடும்பங்களில் பேசுவதெல்லாம் நன்றாகவே இருக்கும்.வெளியில் காட்ட மாட்டார்கள்.கேட்க முடியாது.அவர்கள் படித்தவர்கள் பிடிக்கவில்லை என்றால் பேச்சை குறைத்து கொண்டு செயல்களில் வஞ்சனை செய்வார்கள்.சாப்பாடை எடுத்துவைத்துவிட்டு அமைதியாக போய்விடுவார்கள்.தண்ணி வைக்கமாட்டார்கள்.இல்லை உப்பு போடமாட்டார்கள்.இப்படியாக இருக்கும்.பிறகு பேசினால் ஒன்னு ரெண்டு வார்த்தைகளில் ஜென்மத்திற்கும் பேசமுடியாத மாதிரி விஷ பேச்சாக இருக்கும்.
சரி இப்ப இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன?.உறவுகளை பொறுத்தவரையில் உடைத்தெறிந்து பேசுவது எளிது.ஆனால் என்ன செய்தாவது உறவுடன் பேச வேண்டும் பழக வேண்டும் நம்மை புரிய வைக்க வேண்டும்.இதுதான் விதி.கடவுளையோ,தலை எழுத்தையோ சொல்லுவது அறிவுடமையல்ல.நான் ஆம்பள அப்படித்தான் இருப்பேன் என வீராப்பு சொல்வது நல்லதல்ல.பெண்கள் பேசுகிற அளவிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.”அவள் அப்படி பேசிவிட்டாள் அதானால” என ஆண்கள் சொல்வதோ,”இவர் செஞ்ச காரியம் என்னன்னு தெரியுமா உனக்கு” என பெண்களோ பேசுவதை நிறுத்திவிட்டு தங்களையும்,தன் துணையையும் புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் ஒரு தொடர்கதை.
August 7, 2008
திருட வந்திருக்கிறேன்…
கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…
April 13, 2008
நான் விரும்பும் பேய்கள்-6.
அப்படி அந்த மரத்தில் என்னதான் இருந்தது? பேயை ஆணியில் அடித்திருந்தார்கள்!.ஆம் ஒரு ஆணியில் கத்தையாக ஏதோ முடி?.எங்கள் குழு பார்த்தவுடன் எந்த சந்தேகமுமின்றி பேய்தான் என்று முடிவை அறிவித்தது.நெஞ்சு படபடத்தது.மனிதன் மட்டும்தான் கடவுளையும் ஆணியால் அடித்தான்,பேய்களையும் ஆணியில் அடிக்கிறான்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கடவுள்கள் அசுத்தமான இடங்களுக்கு வருவதில்லை.மனதில் சுத்தமில்லாதவர்கள் ஆனால் கோவிலுக்கு போகலாம்.பேய்கள் என்ன பாவம் செய்தன?பேய்கள் யாரைக் கெடுத்தன?பேய்கள் எனக்கு தெரிந்து பொறாமை படுவதில்லை!.பேய்கள் தங்கள் சகோதரர்களுடன் நிலத்தகராறு செய்வதில்லை.தன் தாய் தந்தையரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில்லை.பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் விடக்கூடாது எனக் கொடிபிடிப்பதில்லை.பேய்களுக்குள் ஜாதி பிரச்சனை இல்லை.
மத பேதமில்லை.ஆனால் பேய்கள் நமக்கு பிடிப்பதில்லை.நான் பயந்திருக்கிறேனே தவிர பேய்களை விரும்ப பல காரணங்கள் இருந்தது.கடவுள்கள் கூட நாம் தவறு செய்தால் கோபம் கொள்வார்கள் ஆனால் பேய்கள் அப்படியில்லை.நாம்தான் பிரச்சாரம் செய்கிறோம் பேய்கள் கோபத்தோடு சுற்றுவதாக.ஏன் பேய்கள் எல்லோரிடமும் கோபப்படவேண்டும்.கடவுள்கள் கூட தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதாக புராணக்கதைகள் உண்டு.பேய்கள் அப்படிசெய்வதில்லை. பேய்கள் புனித யாத்திரைக்கு அழைப்பதில்லை.சாப்பிடும்போதோ,உறங்கும்போதோ நம்மை பிரார்த்தனை பண்ண சொல்வதில்லை.பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கணக்கு சூத்திரங்களை படிக்க சொன்னால் பேய் பிசாசு என மனதுக்குள் திட்டும் நாம் ஏன் ஒரு முறை கூட ஒன்றுமே செய்ய சொல்லாத பேயிடம் இத்தனை பயத்துடனும்,கோபத்துடனும் இருக்கிறோம்.இதை எந்த பேயிடமும் கேட்க முடியாது.பார்த்தால்தானே கேட்பதற்கு.மனிதர்களிடம்தான் கேட்க முடியும்.எவரை கேட்டாலும் ஏதோ வேதத்தில் இருக்கிறது அவர் சொல்லியிருக்கிறார் இவர் சொல்லியிருக்கிறார் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.நல்லது.அவர்களுடைய பேய்கள் மதம் சொன்ன பேய்கள்.நான் கேட்டது அந்த பேய்களை அல்ல.இப்படி கேள்வி கேட்பது கூட சாத்தானின் வேலையோ அல்லது ஏதோ ஒரு முனியின் வேலை என நினைத்தார்கள்.எப்படி இரத்தமும் சதையுமாக கண்முன் நிற்கும் மனிதனை பாவி என்றும் பேய்பிடித்தவன் என்றும் இவர்களால் நினைக்க முடிகிறது.
பேய்கள் உலாவும்…
March 30, 2008
நான் விரும்பும் பேய்கள்-5!
சிறிது காலத்திலெல்லாம் என் அப்பா என்னிடம் சொன்ன உண்மைதான் என் பயம் என்னை விட்டு விலக காரணமாயிருந்தது.இத்தனை வருடங்களாகியும் அவர் இதுவரைக்கும் பேய்களையோ,கடவுளையோ நேரில் கண்டதில்லை என்ற ஊரறிந்த உண்மைதான் அது.ஒரு சிலரே சாட்சியங்களோடு திரிகின்றனர். பெரும்பாலானவர்கள் பேய்களை பற்றி
கோவில்களிலும், கடவுளை பற்றி சுடுகாடுகளிலும் நினைக்கின்றனர்.ஆண்கள் பெண்களை
பற்றியும் பெண்கள் ஆண்களை பற்றியும் நினைப்பது போல பேய்களும், கடவுளரும் தங்களுக்குள்ளே நினைத்துகொள்வார்களா?.என் அப்பா அவருடைய சின்ன வயதில்
எம்.ஜி.ஆரின் படங்களில் பைத்தியமாக இருந்திருக்கிறார்.எனவே பல மைல்கள் நடந்து இரவு காட்சி பார்த்துவிட்டு சௌகரியமாக சுடுகாட்டில் கூட படுத்து தூங்கிருப்பதாக சொன்னார்.எனக்கு அப்போது தோன்றியதெல்லாம் எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் தைரியம்
நிறைய வரும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனை மட்டுமே.இப்படி பேய்களை பற்றிய பயம்
எனக்கு குறைந்தும் கூடியும் கூடவே வந்து கொண்டிருந்தது.அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் என் கையில் சிக்கியது அந்த புத்தகம்.எங்கள் வீட்டு பரணில் கிடந்ததை தூசி தட்டி எடுத்துவிட்டேன்.புத்தகத்தின் தலைப்பு “மரணத்தின் பின் மனிதர் நிலை” என ஞாபகம் மறைமலைஅடிகள் எழுதியதென நினைக்கிறேன்.பேய்களை பற்றிய எனது முதல் புத்தகம் சிறு வயதில் எனக்கு பரிச்சயமாயிருந்ததெல்லாம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும்,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமும்தான்.எனவே மறைமலையடிகளின் தூய தமிழ் நடை என்னை சற்று வியர்க்க வைத்துவிட்டது.இருந்தாலும் திகிலோடு படித்துகொண்டிருந்தேன்.நான் எந்த தத்துவ விசாரணையிலும் இறங்கவில்லை எனக்கு தேவையெல்லாம் ஞாபகம் வைத்துகொள்ளும்படியான பேய்க்கதைகள்.அவர் ஷேக்ஸ்பியரின் ஹம்லேட் நாடகம் குறித்து எழுதியிருந்தது மட்டும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.அதுதவிர நம்மவூர் கதைகள் சிலவும் இடம் பெற்றிருந்தது.ஆவேசம் கொண்டு அலையும் ஆன்மாக்கள் பழி தீர்த்துகொள்ளாமல் சாந்தியடையாது என தெரிந்தவுடன் சற்று கிலி பிடித்தது.
பின்பொருமுறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை படித்தேன்.விவேகானந்தர் சிறு வயதில் பேயிருக்கிறது என சொல்லப்பட்ட மரத்தில் தலைகீழாக தொங்குவாராம்.எனக்கு ஒரே சந்தோசம் சிறுவர்களை பேய் ஒன்றும் செய்யாது என்று நினைத்து.நான் கூட கேள்வி பட்டிருக்கிறேன் புளியமரங்களில் பேயும் வேப்ப மரங்களில் அம்பிகையும் குடியிருப்பதாக. அதனால்தான் அதிக அளவில் புளியமரங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.அது மட்டுமல்ல புளிய மரத்தின் அளவை வைத்தே அதில் எத்தனை பெரிய பேயிருக்கலாம் என்பதை சொல்லிவிட முடியும். ஆனால் நான் பெரும்பாலும் மாலை வேலைகளில் டிவி பார்க்க தெருத்தெருவாக சுற்றுவேன்.அப்பொழுதெல்லாம் அஞ்சு(ஐந்து) வீட்டு வளவு தாண்டி ஓடித்தான் போவேன் ,அங்கே பெரிய புளிய மரம் ஒன்றிருந்தது.அதன் காய்கள் மிகமிக சுவையாக இருக்கும்.அதுதவிர ரெட்டை குளத்துகருகில் இருந்த சொக்குபிள்ளை கிணற்றுக்கு நானும் என் தம்பியும் சில நண்பர்களும் செல்வதுண்டு.சாலை நெடுக புளிய மரங்கள்தான் இருந்தது. ஆனால் என்னை வியர்க்க வைத்தது கிணற்றுக்கு திரும்பும் முனையிலிருந்த அந்த புளிய மரம்தான்…
March 23, 2008
நான் விரும்பும் பேய்கள்!-4
பேய்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் எல்லோரிடமும் எதோ ஒரு கதையோ,விஷயமோ அல்லது அனுபவமோ இருக்கும்.வயது வித்தியாசமின்றி பேய்களைப் பற்றி எல்லோரும் பேசக் கேட்டிருக்கிறேன்.எனது அம்மா பேய்களைப் பற்றி நிறைய கதை சொல்லுவாள்.அதுக்கு காரணமிருந்தது,நான் சிறு வயதில் வீட்டிலிருக்கும் நேரம் மிகக் குறைவு.சொல்லப் போனால் இரவு தூங்கவும், மற்ற வேலைகளில் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்கு செல்வேன். ஆகவே எனக்கு பேய்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் நிறையவே இருந்தது.
என் தாத்தா,பாட்டி காலத்து பேய்களிலிருந்து அவள் பார்த்த, கேட்ட பேய்கள் வரை எனக்கு விவரமாக எடுத்து சொல்லுவாள்.என் அம்மா மிக நன்றாக பேசுவாள்.அவள் பேசுவதைக் கேட்க நிறைய பேர் வருவார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக்கிடும் திறமை அவளிடம் அதிகம் அப்படிபட்டவளுக்கு பேய்கள் என்றால் கேட்கவா வேண்டும். என் தங்கை, தம்பி என எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள அவள் கதை சொல்லிடுவாள்.நான் பேய்களை விட பேய்கள் இருக்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருப்பேன்.மேலும் பேய்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? கோபமூட்டும் விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆசைபட்டிருக்கிறேன்.தெரிந்தோ தெரியாமலோ எந்த பேயையும் கோபப்படுத்தி விடக்ககூடாது என்ற பயம்தான்.பேய்கள் உலாவும் இடமென தெரிந்தால் தனியாக அங்கு செல்வதை தவிர்த்துவிடுவேன்.
அதையும் தாண்டி போக நேரிட்டால் எனக்கு தெரிந்த சப்பாணி மந்திரங்களை சொல்லுவேன், இல்லை ஒரு இரும்பு துண்டை என் டவுசருக்குள் (அரைக் கால் சட்டை என்ற தமிழ் வார்த்தை தெரிந்த பொழுது நான் அதை அணியும் பருவத்தை கடந்து விட்டேன்) போட்டுக் கொள்வேன்.இல்லை என்றால் என் கழுத்தில் “யாமிருக்க பயமேன்”
என முருகனின் டாலர் தைரியம் கொடுக்கும்.என் தாத்தா ஒரு சாமியாடி அவர் சொன்னால் பேய்கள் கேட்கும் என அம்மா சொல்லுவாள்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய முட்காட்டை ஒட்டி ஒரு சிறிய சுடலைமாடசுவாமி கோவில் இருந்தது.என் சிறு வயதில் நான் அங்கு விளையாடுவது
வழக்கம். சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன்,இசக்கியம்மன்,முனியசுவாமி என சில சாமிகள் அங்கே இருந்தனர்.அந்த சாமிகள் எல்லாம் சற்று துடியான தெய்வங்கள் (கோபக்கார சாமிகள்) என்ற செய்தி என் காதில் விழுந்தது.குறிப்பாக வீட்டில் தலைப் பிள்ளைகளை அந்த சாமிகள் காவு(பலி) கேட்கும் எனவும் சொன்னார்கள்.என்ன செய்வது நான் மூத்த பிள்ளையாயிற்றே என வருந்தினேன்.சற்று குறைந்து விட்டது எனது ஆட்டம்.ஆனால் அது நீடிக்கவில்லை..
பேய்கள் உலாவும்…