தொடுவானம் தொடாத விரல்

June 6, 2009

இரவோடு கலையும் கனவுகள்…

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…

April 24, 2009

போடி(டா) லூசு.. உன்னைப்போல ஒரு கவிதை!!!-2.

“நான் பைத்தியந்தான்..”
என்றபடி
என் தலைமுடி
கலைத்தாய்,
கன்னத்தில்
ஓங்கி அடிப்பதாக அடித்தாய்,
தோளில்
மென்கரத்தால்
பலங்கொண்டு குத்துவதாக குத்தினாய்,
பிராண்டி
விடுவதாய் விரல்களை
கொக்கி போலாக்கி,
அழகான முகத்தை
கசக்கிய காகிதமாக்கி,
பச்சரிசி பற்களை
மோகினியாக  காட்டி,
சங்கீதக் குரலில்
அபஸ்வரம் பிடித்து,
மூச்சடக்கி
பூந்தண்டு
கழுத்தில்
பச்சை நரம்புகள்
புடைக்க
சிலைபோல காற்றில்
இமைக்க மறந்தாய்….
உன்னை பைத்தியமாக்கிய
“நானும் பைத்தியந்தான்..”
என்றபடி…உன்..

May 18, 2008

நான் விரும்பும் பேய்கள்

Filed under: பேய்கள் — கண்ணன் பெருமாள் @ 5:32 am
Tags:

நான் விரும்பிய பேய்களை என்னால் தொடர முடியவில்லை.இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தது ஏன்? சிலர்(உண்மையில் ஒருத்தர்தான் ;)) என்னிடம் கேட்டனர்.சுவாரஸ்யம்தான் காரணம்.காதலைப்போல பேய்களும் சுவாரஸ்யம் நிறைந்தவை.காலையிலிருந்து இரவு வரை ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகளை  படித்து கொண்டிருந்தால் வெறுத்து போய்விடும்.கூலி வேலை செய்கிறவர்களுக்கு  ஒரு கிலோ வத்தல் என்ன விலை என தெரிந்திருக்கிறது சாப்ட்வேர் வேலை பார்ப்பவனுக்கு காலையில் குடித்தது காபியா?டீயா? எனக் கேட்டால் தெரியவில்லை.மறதி.தன்னை மறந்திருப்பவனுக்கு உலக நடப்பு எதற்கு? உப்பு,புளி விலையேற்றத்திற்கு நமக்கென்ன?பர்மாவில் புயல்,சீனாவில் நிலநடுக்கம் எல்லாமே நடந்து கொண்டே இருக்கிறது.இந்த செய்திகள் மனதை குடைந்தெடுத்தாலும் வாழ்க்கையை நாம் தொடர சற்று சிரித்திருந்தால் மட்டுமே முடியும்.சிலருக்கு  நகைச்சுவை உணர்வு சற்று குறைவு ஆனால் நன்றாக சிரிப்பார்கள்.

உண்மையை சொல்ல போனால் பேய்கள் இன்றைய காலக்கட்டத்தில்  மதிப்பிழந்து விட்டன.பேய்களை வைத்து திகில் படமெடுத்த காலமெல்லாம் போய் இன்று பேய் கார்டூன்கள்,காமெடி படங்கள்,சிரியல்கள் என பேய்களின் தரம்(பயம்) குறைந்துவிட்டன.ஆனாலும் கிராமங்களில் பேய்கள் வலம் வந்து கொண்டிருப்பது உண்மை.அங்கும் நாம் இலவச டிவி கொடுத்தபிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்,சித்தி,அம்மா,அப்பா,கொழுந்தன் என நாடகம் பார்க்க தொடங்கி விட்டால்  பேய்களை மறந்து விடுவார்கள்.கலாச்சாரம் மாறுவதற்கு டிவி ஒரு நல்ல காரணி.தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் சாதாரண மக்களின் மனதில் பிராண்ட் மோகத்தை  ஏற்படுத்தி விட்டன.முன்னெல்லாம் வீடு வீடாக பெனாரஸ் பட்டு,சூரத் சில்க் என சொல்லிக்கொண்டு சிலர் கிராமங்களில் வந்து விற்பனை செய்வார்கள்.இப்போ செருப்பு எடுக்க கூட டவுணுக்கு போகிறார்கள்.டிவியில் விளம்பரம் செய்யாத பொருள் தரம் குறைந்த பொருள்.விளம்பரங்கள்  நமக்கு உண்மையை சொல்வதில்லை.ஒருபக்க நியாயங்களையே சொல்கிறது.கேளிக்கைதான் இன்றைய வாழ்க்கையின் பிரதானம்.யாருக்குமே பொறுமை இல்லை.இதில் என்ன பேய்கள் பற்றிய  சுவாரஸ்யம் வேண்டியிருக்கிறது?.இருக்கிறது சாதாரணமாக நாம் ஒரு பஸ்ஸில் போகும்போதோ அலுவலகத்தில் வேலை செய்யும்போதோ பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

ஆனால் தனியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடந்து பாருங்கள்.எதிரில் வரும் நாய் கூட ஜென்ம நட்சத்திரத்தில் வந்த கருப்பு நாய் மாதிரி தெரியும்.தனியாக தூங்கும்போது திடீரென நடுநிசியில் எழுந்துவிட்டால் ஜன்னலுக்கு வெளியே கத்தும் பூனையை எட்டிப்பார்க்கும் தைரியம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் .அவர்களுடைய வாழ்வில் பேய்களை காட்டிலும் சுவாரஸ்யம் அதிகமான விஷயங்கள் நடந்திருக்கக்கூடும்.நள்ளிரவில் ஆற்றின் கரையோரத்தில் தனியாக அமர்ந்து நீங்கள் எதையாவது பயமின்றி யோசிக்கக்கூடுமென்றால் உங்களுக்கு சற்று வயது அதிகம், இல்லை வயதை விட நீங்கள் வாழ்வில் அனுபவித்தது அதிகம்.பேய்கள் நம் இளமையை நினைவு படுத்துபவை நமது அறியாமையை,புரிதலின்மையை சொல்பவை.வயது ஆக ஆக நம்மால் பேய்களை பார்க்கவோ கேட்கவோ முடிவதில்லை.எல்லோருக்குமே இப்படி நிகழ்ந்துவிடுகிறது.நம் கற்பனை உலகத்தை எந்தவொரு இரக்கமுமின்றி நாம் எரித்துவிடுகிறோம்.இல்லை எரித்து விடுகிறார்கள்.என்னால் இன்று பேய்களை தேடி அலைய முடியவில்லை.உங்களில் பலருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம்.ஆனால் உண்மையில் நீங்கள் உங்களை மதிப்பவராக இருந்தால் ஒரு முறையாவது   ஏதாவது ஒரு பேயின் கதையை காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்.நீங்கள் கேட்காவிட்டாலும் பேயின் இருப்பை உணர முயலுங்கள் அதுகூட ஆச்சரியாமான ஒன்றுதான்.ஒரு குழந்தையின் உலகம் உங்கள் கண்களில் விரியும்.எனக்கு பேய்களை துஷ்டமாக நினைக்க முடியாது அவை முழுக்க முழுக்க உங்கள் கற்பனையின் குழந்தைகள்.

நீங்கள் பேய்கள் இல்லையென்று சொன்னால்  நான் ஒப்புக்கொள்ள தயங்க மாட்டேன் ஏனெனில் உங்களுக்கு கற்பனைத்திறன் இல்லை.அல்லது அது போன்ற ஒரு கற்பனை உங்களுக்கு பிடிக்கவில்லை அவ்வளவே.ஆனால் ஒரு போதும் உங்கள் குழந்தைத்தனமான உலகத்தை அழிக்க முற்படாதீர்கள் பிறகு உண்மையிலுமே வாழ்க்கை மெகா  சீரியல் மாதிரி ஜவ்வாக அழுதுவிடும்.இன்னொரு வகையில் நான் இப்படி சில நாட்கள் நினைத்திருக்கிறேன் பேய்கள் ஒரு காலையில் தங்கள் முழு பலத்தையும் திரட்டி சூரியனுக்கு பதிலாக வானமெங்கும் வெள்ளை உடை அணிந்து சுற்றினால் எல்லோரும் பேய்களை நம்பிவிடுவார்களா?.ஆனால் அப்போது நமது முப்பத்து முக்கோடி கடவுளரும் பின்பு பன்னாட்டு கடவுள்களும் காட்சி கொடுக்க வேண்டிவரும்.சற்று சுவாரஸ்யம் நிறைந்த கற்பனைதான்.இந்த தலைப்பில்  நான் எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை எனக்கு அப்படியொரு எண்ணமும் கிடையாது.உங்கள் நம்பிக்கைகளை காயப்படுத்தும் எண்ணமும் எனக்கு கிடையாது.சொல்லப்போனால் நம்பிக்கைகள்  வார்த்தைகளை கடந்தவை.காயப்படுத்தும் சாத்தியங்களை கடந்தவை.என்ற போதிலும் என்னை மீறி நடந்த தவறுகளுக்கு நான் வருந்துகிறேன்.எனது விருப்பமெல்லாம் உங்கள் கற்பனை சிறகுகளுக்கு ஒரு இறகு கொடுப்பதுதான்.நன்றி.

அன்புடன்
கண்ணன்.பெ

vampire-eyes

Blog at WordPress.com.