விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..
April 9, 2011
களித்தோழி!
April 4, 2011
என் குருசு…
உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
August 14, 2010
தீண்டாச் சர்ப்பம்!
நினைவுகளில்
என்றும் நெளிகிறது
ஒரு பாம்பு..
முகம் காட்டியதில்லை..
உடல்
வளைத்து வளைத்து
நெளியுமது..
தனிமைகளில்
எங்கோ
பதுங்கியிருக்கிறது!
சட்டென்ற
வினோத ஓசை
பாம்பானது…
வால் நுனி
காட்டிய
அரணை,பல்லி
ஓணான்
எல்லாமே பாம்பாகிறது..
அத்துவானக் காடுகளில்,
ஆளரவமற்ற பாதைகளில்,
பாம்பின் சட்டைகள்..
இரவின் இடுக்குகளில்,
பாழடைந்த கிணறுகளில்,
பாம்பின் வாசனை..
தனியான ஒத்த வீடுகளில்,
நகாராத பெரிய கற்களில்,
பாம்பின் காத்திருப்புகள்..
வாழப் பிடித்த
நாட்களிலும்
தீண்டக் காத்திருக்கிறது
எங்கோ
ஒரு சர்ப்பம்.. !
July 4, 2010
திறக்காதீர்கள்..
ஜன்னல்களை அடைத்தே
வைத்திருங்கள்
இருள்
வெளியே கசியாமல்..
அறைக்குள்
இருக்கும் வானம்
என்றும்
இருள்வதில்லை…
மனிதர்கள்
குதித்துவிடக் கூடும்
எச்சரிக்கை…
சில வார்த்தைகள்
ஊடுருவும் ..
சில குழந்தைகளின்
அழுகை கேட்கும்..
சொப்பனங்களில் ஆழ்த்தும்
ஆபாசப் பாடல்கள் வரும்
அடைத்தே வைத்திருங்கள்..
கதவுகளை..
யார் அவர்கள் கேளிர்,
கேளிக்கையாக
வந்து போகும்
சத்திரமா என்ன?
இறுக அடைத்துவையுங்கள்
நாய்கள்
நன்றி இல்லாத நாய்களைத்தான்
சொல்கிறேன்
வாலை ஆட்டிப்பார்க்கும்..
அடைத்து விடுங்கள்..
தயவு செய்து
இறக்கும் வரை
அடைத்த ஜன்னலும்
அடைத்த கதவுமாய்
இருக்க பிரார்த்தியுங்கள்…
உள்ளே வருவதுதான்
ஒருவனைக் கெடுக்கும்..
கிறிஸ்து அறைக்குள்
இருந்திருந்தால்
சிலுவையில் செத்திருப்பாரா?
கிருஷ்ணன்,
அறைக்குள்ளேயிருந்திருந்தால்
குருக்ஷேத்ரம் ஏது?
தோழர்களே தோழிகளே
கண்களை இறுக்க மூடி
மன்றாடுங்கள்..
அறியாமையில் அலையும்
மனிதர்கள் பாவம்,
அவர்களுக்கு மந்திரம்
தெரியாது?
வசனங்கள் புரியாது!
ஆகமம்,திருமறை,
காபிரியேல் எல்லாம்
தெரியாத ஜென்மங்கள்
புற்கள் என ஜென்னில்
அவர்களைத்தான் சொல்கிறார்கள்..
ஏன் இந்த குருவி காக்கா
கோழி பருந்து
பன்றி கழுதை
வகையறாக்கள் இன்னும்
பிறந்து தொலைக்கின்றன..?
பறப்பதும் நீந்துவதும்
ஆடுவதும் பாடுவதும்
கத்தி கும்மாளமிடுவதும்
என்ன கூத்து இது?
உங்களுக்கு நேரமில்லை
எனக்கு தெரியும்!
ஈனப் பிறவிகளுக்கு
ஒன்றும் புரிவதில்லை!
பிறந்து பிறந்து
சாகின்றன..
அறைக்குள் இருந்தபடியே
உங்கள் உள்ளத்தை
விண்ணுக்கு எழுப்புங்கள்
அங்குதான் நமது
தந்தை தாய்
மூதாதையர்கள்..
சிவபாதமெய்திய
சுந்தரர்களும் சுந்தரிகளும்
இருக்கிறார்கள்..
அவர்களுடன் நாம்
மரித்திருப்போம்..
மன்னிக்கவும் மகிழ்ந்திருப்போம்..
அப்படியே ஆகுக..
March 20, 2010
உன் வானாகி…

பறப்பதையுணராத
பறவையது..
திசையிலி..
எங்கோ தூரத்தில்
ஒற்றையாய்
மாந்தளிர் மேகம்,
மெப்பனைக்கு
ஓட்டைச் சூரியன்…
எதற்கு சிறகுகள்?
சாலையோரங்களில்
பொறுக்கித் தின்னும்
புறாக்கள்…
கீரைக்காம்பு கால்கள்..
படபடக்கும் சிறகுகள்..
கனவு பூக்காத
கண்கள்…
அடிவயிற்றில்
சில்லிடுகிறது,
நெருஞ்சிச் செடியில்
நெறைஞ்ச
ரெண்டு தாமரை..
எதற்கு வானம்?
December 18, 2009
இலக்கிய வாசிப்பு!
ஈழ இலக்கியம் குறித்து பெரிய பரிச்சயம் எனக்கு கிடையாது.தமிழில் கூட நான் வாசித்த எழுத்தாளர்களில் போன தலைமுறை எழுத்தாளர்களே அதிகம்.சம கால இலக்கிய உலகம் இன்னும் முழுமையாக அறிமுகமாகிவிடவில்லை.தமிழ் புத்தகங்களை குறித்து சரியான மதிப்புரைகள் வெகுசன ஊடகங்களில் கிடைப்பதில்லை.அதிகமாக விற்பனையாகும் விகடன் குமுதம் வகையறாக்கள் ஒரு மாதிரியான, இல்லை ஒரே மாதிரியான வாசிப்பையே திரும்ப திரும்ப முன் வைக்கின்றன.கணிசமான பக்கங்கள் காத்திரமான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒதுக்கலாம்.இதுவரை இருந்த தலைமுறை வேறு இப்பொழுது இலக்கியம் வாசிக்க ஆர்வமுள்ள ஒரு இளைய தலைமுறை முளைத்துள்ளது.அவர்களுக்கு அறிமுகம் மட்டுமே தேவை.எனது எதிர்பார்ப்பெல்லாம் இலக்கியம் தேநீர் விடுதிகளிலும்,கல்லுரி வளாகங்களிலும்,படுக்கை அறையிலும்,பேருந்து நிறுத்தங்களிலும் பேசப்பட வேண்டுமென்பதுதான்.இலக்கியம் பேசுவதால் என்ன பிரயோஜனம்?யாருக்கு லாபம் இதுதான் நம்முள் முளைக்கும் முதல் கேள்வி.எல்லாமே லாப நட்ட கணக்கில் பார்க்கும் பார்வையை அது மாற்றும்.அமெரிக்காவின் வெகுஜன ஊடகங்களில் அருமையான புத்தக மதிப்புரைகள் விமர்சனங்கள் காணக் கிடைக்கின்றன.பிரிட்டனின் கார்டியனில் வரும் புத்தக பக்கங்களை வாசித்து ரசித்திருக்கிறேன்.என்றாலும் நாம் இன்னும் இந்த தளங்களில் மக்களை அணுகவில்லை.தமிழின் முக்கிய படைப்பாளிகளை பற்றி எந்தப் பள்ளி கல்லூரி ஆசிரியருக்கும் கவனமில்லை.அவர்கள்(மேற்கில்) creative writing என்னும் பாடத்திட்டத்தையே பல காலமாக வைத்திருக்கிறார்கள்.நம்மவர்கள் இன்னும் இலக்கிய பேச்சை பேச கூசி அலைய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.பொத்தாம் பொதுவாக குறை கூறுவதில்லை என் நோக்கம் ஏன் நாம் அடுத்த தலைமுறைக்கு அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடாது?.அங்கு walmart-ல் புத்தகங்களை போட்டு விற்கிறார்கள்.மக்கள் வாங்குகிறார்கள்.புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும்.அது புனிதப் பொருளில்லை.அது புத்திசாலிகளுக்கு இல்லை.அது மனிதர்களுக்கானது.அது வாழ்வதற்கானது.கனவுகளுக்கானது.
இன்று காலையில் மு.தளையசிங்கம்(நன்றி ஜெயமோகன்) அவர்கள் அறுபதின் தொடக்கத்தில் எழுதிய கட்டுரை வாசிக்க ஒன்றை நேர்ந்தது.இது தற்செயல்தான்.அட அறுபதுகளில் இப்படி ஒரு வசீகரமான எழுத்தாளரா? என்று எண்ணத் தோன்றியது.வியக்க வைத்தது அவரது உலகப் பார்வையும்,துல்லியமான விமர்சனமும், சமநிலையான நோக்கும்தான்.ஜெயமோகன் சொன்ன பிம்பத்தை கொஞ்சம் பிரக்ஞை பூர்வமாக பொருத்தி பார்த்து வாசித்தேன்.அவ்வளவுதான்.ஆனால் மனிதரின் பாதை சற்று தேடல் உள்ளவர்களால் மட்டுமே சென்று தொடக்கூடிய இடம்.உள்ளுணர்வு,அக எழுச்சி இதுவெல்லாம் என்னவென்று கேட்டால் துலங்காது.கறாரான விமர்சனம்.ஜெயமோகனின் விமர்சனங்கள் மிக மிக நுண்ணிய தளங்களை தொட்டுச் செல்பவை.அவரின் வாசிப்பு ஒரு அரக்கத்தனமான வாசிப்பு.அவரை குறித்து(படைப்புகளை) நிறைய எழுத வேண்டும்.முகஸ்துதி இல்லை.எழுதும் போது தெரிந்துகொள்வீர்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரேய்மன்ட் கார்வர் என்ற அமெரிக்க சிறு கதை எழுத்தாளரை வாசிக்க நேர்ந்தது.மிக அருமையான சிறு கதைகள்.கலாச்சாரங்களை ஒப்பிட்டுக் கொண்டேன்.ஜெயமோகன் லங்கா தகனம் என்றொரு குறுநாவல் எழுதியிருக்கிறார் வாசிக்கும்போது காதுகளில் செண்டை மேளத்தின் முழக்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.உடல் குலுங்கி,விதிர்த்து, கடைசி பக்கத்தில் என் உடம்பிலிருக்கும் ரோமக்கற்றைகள் பொசுங்கியது போல நாசி நுகர்ந்தது.எனக்கு பாத்திரங்களின் பெயரை ஞாபகம் கொள்ள முடியவில்லை ஆனால் உணர்வுகள் இன்றும் நெஞ்சுக்குள் அதிர்வுகளை பரப்பிக்கொண்டிருக்கிறது.இசையை எழுத்தில் கேட்க முடியுமா?அன்று கேட்டேன்.
December 16, 2009
ஊகணங்கள்..
December 15, 2009
இன்று காலையில்..
December 13, 2009
கொசுக் கொலை!
வாசிப்பை கெடுத்த
கொசுவின்
சவாலை எதிர்கொண்டு
கொலை வெறியுடன்
துரத்தினேன்,
கீபோர்டில் ஒரு அடி,
மானிட்டரில்
சீபீயுவில்
கடைசியில் ஸ்பீக்கரை
அடித்து தள்ளியாயிற்று,
இடது மார்பில்
சுள்ளென்று ஒரு அடி
அற்பக் கொசு
தோளில் வீழ்ந்தது..
அற்பக் கொசு..
செத்தொழிந்தது..
காலில் ஏதோ
சுருக்கென்றது..
November 14, 2009
தேன்சிட்டும், லெகான் கோழி குஞ்சுகளும்!!!
ஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக
செல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.பார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.
கடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை(?) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்? நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க கோழி முட்டைகள் மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.
கோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையா?நான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால் போதும் அதை பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.
கோழிக் குஞ்சியை பார்த்திருக்கிறீர்களா? சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வாங்கிச் சென்றோம்…