உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
April 4, 2011
என் குருசு…
August 14, 2010
தீண்டாச் சர்ப்பம்!
நினைவுகளில்
என்றும் நெளிகிறது
ஒரு பாம்பு..
முகம் காட்டியதில்லை..
உடல்
வளைத்து வளைத்து
நெளியுமது..
தனிமைகளில்
எங்கோ
பதுங்கியிருக்கிறது!
சட்டென்ற
வினோத ஓசை
பாம்பானது…
வால் நுனி
காட்டிய
அரணை,பல்லி
ஓணான்
எல்லாமே பாம்பாகிறது..
அத்துவானக் காடுகளில்,
ஆளரவமற்ற பாதைகளில்,
பாம்பின் சட்டைகள்..
இரவின் இடுக்குகளில்,
பாழடைந்த கிணறுகளில்,
பாம்பின் வாசனை..
தனியான ஒத்த வீடுகளில்,
நகாராத பெரிய கற்களில்,
பாம்பின் காத்திருப்புகள்..
வாழப் பிடித்த
நாட்களிலும்
தீண்டக் காத்திருக்கிறது
எங்கோ
ஒரு சர்ப்பம்.. !
July 5, 2010
மழைக் குறிப்புகள்-1!
மழை வருமா
என்றபடி
கண்ணாடி பார்த்தாள்,
வானவில்!
கண்ணாடிக்குள்
யார் பார்த்தது
மழையான மழை?
March 24, 2010
வலசை பறவைகள்!
March 20, 2010
உன் வானாகி…

பறப்பதையுணராத
பறவையது..
திசையிலி..
எங்கோ தூரத்தில்
ஒற்றையாய்
மாந்தளிர் மேகம்,
மெப்பனைக்கு
ஓட்டைச் சூரியன்…
எதற்கு சிறகுகள்?
சாலையோரங்களில்
பொறுக்கித் தின்னும்
புறாக்கள்…
கீரைக்காம்பு கால்கள்..
படபடக்கும் சிறகுகள்..
கனவு பூக்காத
கண்கள்…
அடிவயிற்றில்
சில்லிடுகிறது,
நெருஞ்சிச் செடியில்
நெறைஞ்ச
ரெண்டு தாமரை..
எதற்கு வானம்?
February 6, 2010
நீராடல்…
மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…
December 27, 2009
புல்..
யாரும் சொல்லாத
கவிதை
சுமந்த பனித்துளி,
யாரும் கேட்காத
கவிதையோடு
தொலைகிறது..
இரவில்
வந்த கனவை
என்றுமறியாது
அந்தப் புல்..
November 15, 2009
நித்ய விளையாட்டு…
அணையாமல்
எரிகிறது
சுடலையின் தீ..
திசையெங்கும்
பரவுகிறது
வெறுமையின் உச்சம்..
என்றுந் தீராத
பரிதவிப்பின் விளையாட்டு..
அலையலையாய்
ஒற்றை மேளத்தின்
பிணந்தின்னும்
வேட்டைராகம்..
இசைஞர்களும்
கேட்டிராத
மோனக்குரலில்
அழைக்கிறாள்…
மோகனம் மோகனம்
மல்லிகை மல்லிகை..
கச்சை திறந்து
காட்டினாள்
கனன்றெரியும்
காலச் சக்கரங்களை…
November 3, 2009
சிவ தனுசு!
யாருக்காகவோ எழுதும்
ஒரு கவிதை,
மௌனமாக பார்க்கப்படுகிறது..
சில தடவைகள்
நாட்குறிப்புகளுக்குள்
உப்புக்கரிக்கும் விரல்களால்
ஒளித்து வைக்கப் படுகிறது…
யாரும் வாசித்து
விடாமலிருக்க நாட்குறிப்பும்
கைக்கெட்டாத
ஆழங்களில் அடைக்கலமாகிறது…
நாட்களாக பார்க்கப்பட்ட
நாட்குறிப்பு
மாதங்களாய்,வருடங்களாய்
கண்ணுக்குள் ஒளியாகி,
மொழிகளின் மொழியாகி,
வன்மத்தின்
உதிரம் குடித்து,
சிவ தனுசாகிறது…
வேண்டாம் இராமனென்று
ஒரு கனத்த இரவில்
சீதையே
ஒடித்து விட்டாள்…
தீ பிழைத்தது..
October 13, 2009
நீ வாசித்த புல்லாங்குழல்…
காற்றுக்கென்ன
திட சித்தம்?
ஒரு துளை
நுழைந்து
மறு துளை
தலை காட்டும்..
பூங்கரத்தால்
தட்டி தடுத்து
இன்னிசையாய்
வளரவிட்டாய்…
குளிர்ந்து கனிந்து
உறைந்து நானானது
உன் சுவாசம்…