தொடுவானம் தொடாத விரல்

December 16, 2009

ஊகணங்கள்..

Filed under: கவிதை,பகுக்கப்படாதது,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:39 pm
இன்னும் பார்த்தேயிராத  
சிகப்பு நிற கொம்பு
முளைத்த நாயைப் பற்றி
நாம் பேசலாம்…
இரண்டு கண்களும் 
செயின்ட் பெர்னார்டை 
போன்ற காதுகளும்…
அரபுக் குதிரை போன்ற 
கால்களும் அதற்கு…
உப்புநீர் முதலையின்    
உடலும்,
காண்டா மிருகத்தின் 
வாலும் அதற்கு.. 
அதை நீங்கள் 
புத்தகம் வாசிக்க
சொல்லலாம்..
 காலையென்றால்
அதுவே பாடும்..
உங்களுக்கு விருப்பமென்றால் 
வீட்டுக்குள் ஆடும்..
சிறுபிள்ளைகளுக்கு கதை 
சொல்லும்,
வீட்டு பாடம் செய்ய 
உதவும்…
பெரியவர்களை நடைபயிற்சிக்கு    
 அழைத்து போகும்,
ஒய்வு வேளைகளில்
கவிதை எழுதும்..
அரசியல் பேசும்.. 
கூட்டங்களில் பிரசங்கம்  
செய்யப் போகும்…
குளோபல் வார்மிங்கேல்லாம்
அதற்கு அத்துப்படி…    
ஒருத்தனால் செய்ய
முடியாத  எல்லாமே
அது செய்யும்..
 ஆனாலும் அதை
நாம் நாயாகவே
கடைசிவரை வைத்திருப்போம்…
அதுவும் அப்படியே 
இருக்கவும் செய்யும்..   
Advertisements

December 13, 2009

கொசுக் கொலை!

வாசிப்பை கெடுத்த
கொசுவின்
சவாலை எதிர்கொண்டு
கொலை வெறியுடன்
துரத்தினேன்,
கீபோர்டில் ஒரு அடி,
மானிட்டரில்
சீபீயுவில்
கடைசியில் ஸ்பீக்கரை
அடித்து தள்ளியாயிற்று,
இடது மார்பில்
சுள்ளென்று ஒரு அடி
அற்பக் கொசு
தோளில் வீழ்ந்தது..
அற்பக் கொசு..
செத்தொழிந்தது..
காலில் ஏதோ
சுருக்கென்றது..

November 15, 2009

நித்ய விளையாட்டு…

அணையாமல்
எரிகிறது
சுடலையின் தீ..
திசையெங்கும்
பரவுகிறது
வெறுமையின் உச்சம்..
என்றுந் தீராத
பரிதவிப்பின் விளையாட்டு..
அலையலையாய்
ஒற்றை மேளத்தின்
பிணந்தின்னும்
வேட்டைராகம்..
இசைஞர்களும்
கேட்டிராத
மோனக்குரலில்
அழைக்கிறாள்…
மோகனம் மோகனம்
மல்லிகை மல்லிகை..
கச்சை திறந்து
காட்டினாள்
கனன்றெரியும்
காலச் சக்கரங்களை…

November 13, 2009

வலி தொடாத தூரத்தில்…

Filed under: கண்ணீர்,கவிதை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:01 pm
Tags: , ,

தாங்க முடியாத
பெருவலிகள்
வந்தபோது
கணத்தில்
மறுதலித்து விட்டேன்,
எதையும்
ஏற்றுக்கொள்ளவில்லை
பெரும் பாவனை
இதுதான்
“நான் வலி கடந்தவன்”
சொந்தமான வலி
தீண்ட எத்தனிக்கும்போது
எனக்கே
நான் யாரோ?
மரணம் தொட்டதில்லை
தோல்வி தொட்டதில்லை
காயம் தொட்டதில்லை
கண்ணீர் இரத்தம் பசி பயம்
எதுவும் தொட்டதில்லை
வலியை உணராத  
மிருகம்
வலியை அஞ்சும்
எதுவும் மிருகம்தான்..
இல்லை மனிதன்..
குரூபி கொடூரன்
கல்நெஞ்சக்காரன்
நீசன் ஈசன்
சண்டாளன்..
வலி தொடாத
தூரத்தில்
உளறல்கள்…

November 3, 2009

சிவ தனுசு!

Filed under: அன்பு,இளமை,கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 2:35 am
Tags: ,

யாருக்காகவோ எழுதும்
ஒரு கவிதை,
மௌனமாக பார்க்கப்படுகிறது..
சில தடவைகள்
நாட்குறிப்புகளுக்குள்
உப்புக்கரிக்கும் விரல்களால்
ஒளித்து வைக்கப் படுகிறது…
யாரும் வாசித்து
விடாமலிருக்க நாட்குறிப்பும்
கைக்கெட்டாத
ஆழங்களில் அடைக்கலமாகிறது…
நாட்களாக பார்க்கப்பட்ட
நாட்குறிப்பு
மாதங்களாய்,வருடங்களாய்
கண்ணுக்குள் ஒளியாகி,
மொழிகளின் மொழியாகி,
வன்மத்தின்
உதிரம் குடித்து,
சிவ தனுசாகிறது…
வேண்டாம் இராமனென்று
ஒரு கனத்த இரவில்
சீதையே
ஒடித்து விட்டாள்…
தீ பிழைத்தது..

October 13, 2009

நீ வாசித்த புல்லாங்குழல்…

Filed under: கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 4:38 pm
Tags: ,

காற்றுக்கென்ன
திட சித்தம்?
ஒரு துளை
நுழைந்து
மறு துளை
தலை காட்டும்..
பூங்கரத்தால்
தட்டி தடுத்து
இன்னிசையாய்
வளரவிட்டாய்…
குளிர்ந்து கனிந்து
உறைந்து நானானது
உன் சுவாசம்…

October 2, 2009

மழையிரவில் உலகம்..

உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..

July 4, 2009

வலைக்குள் மழை!

Filed under: இளமை,கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 1:38 am
Tags: ,

நீயும் நானும்
வலை!
காலம் மழை!
காதல்
வலையில் சிக்கிய – ‘மழை’!

June 6, 2009

இரவோடு கலையும் கனவுகள்…

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…

May 31, 2009

காதல் மொழி!

Filed under: கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 4:06 pm
Tags: ,

எதையோ காற்றோடு
சொல்ல விழைந்து ,
எரிந்து அடங்குகிறது
நெருப்பின் நாக்கு…

« Previous PageNext Page »

Blog at WordPress.com.