உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
April 4, 2011
என் குருசு…
July 4, 2010
திறக்காதீர்கள்..
ஜன்னல்களை அடைத்தே
வைத்திருங்கள்
இருள்
வெளியே கசியாமல்..
அறைக்குள்
இருக்கும் வானம்
என்றும்
இருள்வதில்லை…
மனிதர்கள்
குதித்துவிடக் கூடும்
எச்சரிக்கை…
சில வார்த்தைகள்
ஊடுருவும் ..
சில குழந்தைகளின்
அழுகை கேட்கும்..
சொப்பனங்களில் ஆழ்த்தும்
ஆபாசப் பாடல்கள் வரும்
அடைத்தே வைத்திருங்கள்..
கதவுகளை..
யார் அவர்கள் கேளிர்,
கேளிக்கையாக
வந்து போகும்
சத்திரமா என்ன?
இறுக அடைத்துவையுங்கள்
நாய்கள்
நன்றி இல்லாத நாய்களைத்தான்
சொல்கிறேன்
வாலை ஆட்டிப்பார்க்கும்..
அடைத்து விடுங்கள்..
தயவு செய்து
இறக்கும் வரை
அடைத்த ஜன்னலும்
அடைத்த கதவுமாய்
இருக்க பிரார்த்தியுங்கள்…
உள்ளே வருவதுதான்
ஒருவனைக் கெடுக்கும்..
கிறிஸ்து அறைக்குள்
இருந்திருந்தால்
சிலுவையில் செத்திருப்பாரா?
கிருஷ்ணன்,
அறைக்குள்ளேயிருந்திருந்தால்
குருக்ஷேத்ரம் ஏது?
தோழர்களே தோழிகளே
கண்களை இறுக்க மூடி
மன்றாடுங்கள்..
அறியாமையில் அலையும்
மனிதர்கள் பாவம்,
அவர்களுக்கு மந்திரம்
தெரியாது?
வசனங்கள் புரியாது!
ஆகமம்,திருமறை,
காபிரியேல் எல்லாம்
தெரியாத ஜென்மங்கள்
புற்கள் என ஜென்னில்
அவர்களைத்தான் சொல்கிறார்கள்..
ஏன் இந்த குருவி காக்கா
கோழி பருந்து
பன்றி கழுதை
வகையறாக்கள் இன்னும்
பிறந்து தொலைக்கின்றன..?
பறப்பதும் நீந்துவதும்
ஆடுவதும் பாடுவதும்
கத்தி கும்மாளமிடுவதும்
என்ன கூத்து இது?
உங்களுக்கு நேரமில்லை
எனக்கு தெரியும்!
ஈனப் பிறவிகளுக்கு
ஒன்றும் புரிவதில்லை!
பிறந்து பிறந்து
சாகின்றன..
அறைக்குள் இருந்தபடியே
உங்கள் உள்ளத்தை
விண்ணுக்கு எழுப்புங்கள்
அங்குதான் நமது
தந்தை தாய்
மூதாதையர்கள்..
சிவபாதமெய்திய
சுந்தரர்களும் சுந்தரிகளும்
இருக்கிறார்கள்..
அவர்களுடன் நாம்
மரித்திருப்போம்..
மன்னிக்கவும் மகிழ்ந்திருப்போம்..
அப்படியே ஆகுக..
March 24, 2010
வலசை பறவைகள்!
February 6, 2010
நீராடல்…
மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…
January 26, 2010
மந்தைகளே…
உங்கள் மந்தைகளில் இல்லை
நான்,
எனது மேய்ப்பனை
தேடும் ஆடு
நான்,
என்னிடமிருந்து
தொலைந்த அவனை
தேடுகிறேன்..
உங்கள் மந்தைகளில்
தேடுகிறேன்,
அவனும் ஓர்
ஆடாகியிருக்கக்கூடும்..
உங்கள் மேய்ப்பர்களில்
தேடுகிறேன்
அவன் என்னை
மறந்திருக்கக்கூடும்..
உங்கள் சவ ஊர்வலங்களில்
தேடுகிறேன்
உங்கள் களப்பலியாக
அவனிருந்திருக்கக்கூடும்..
உங்கள்
பிணக் குவியல்களில் தேடுகிறேன்
நானில்லாமல் அவன்
அனாதையாகியிருக்கக்கூடும்..
குழந்தைகளை தேடி
அலைகிறவன்
ஏதாவது பள்ளியில்
ஆசிரியராயிருப்பான்..
இல்லை தெருக்களில்
கோமாளியாகியிருப்பான்..
அவனை என்னிடம்
வரவிடுங்கள்
மந்தைகளே…
November 13, 2009
வலி தொடாத தூரத்தில்…
தாங்க முடியாத
பெருவலிகள்
வந்தபோது
கணத்தில்
மறுதலித்து விட்டேன்,
எதையும்
ஏற்றுக்கொள்ளவில்லை
பெரும் பாவனை
இதுதான்
“நான் வலி கடந்தவன்”
சொந்தமான வலி
தீண்ட எத்தனிக்கும்போது
எனக்கே
நான் யாரோ?
மரணம் தொட்டதில்லை
தோல்வி தொட்டதில்லை
காயம் தொட்டதில்லை
கண்ணீர் இரத்தம் பசி பயம்
எதுவும் தொட்டதில்லை
வலியை உணராத
மிருகம்
வலியை அஞ்சும்
எதுவும் மிருகம்தான்..
இல்லை மனிதன்..
குரூபி கொடூரன்
கல்நெஞ்சக்காரன்
நீசன் ஈசன்
சண்டாளன்..
வலி தொடாத
தூரத்தில்
உளறல்கள்…
June 6, 2009
இரவோடு கலையும் கனவுகள்…
இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…
ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…
துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…
புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…
கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…
எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,
மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…
April 1, 2009
நிழல் பற்றியெரியும் நெருப்பு…
தீண்டாத விரல்களுக்கும்,
எதுவுமே பேசாத
என் புகைந்து
சிவந்த இதழ்களுக்குமாய்,
நீ
மௌனப் புன்னகையோடும்,
வன்மம் தீர்க்கும்
உக்கிர பத்ரகாளியின்
மர்ம செந்நாக்கோடும்….இருள் கரைந்து,
கொடுஞ் சாபங்கள் சூடி,
நீலி நீ
நெஞ்சில் எரிகிறாய்…
பாவ மண்டையோடுகள்
பதக்கம் போலவே
பழிகாரி
சுழற்றி சுழற்றி
நீயென்னை
ஓங்கி தரையிலெறிகிறாய்…அகந்தை கொல்லும்
அகங்காரி நீ,
குளிர் நீரோடையில்
நிலா முகம் காணவே
நிகழ்ந்ததொரு
நீண்ட நிழல் வதம்…நீரலைகளாய்…
நெளிந்து நெளிந்து..
உடைந்து உடைந்து..
இருளின் கரையேறும்
ஊமை நிழலின்
உயிர் கிழிந்த பிம்பங்கள்…ஒருபோதும் இரங்காத
பயங்கரி நீ,
ஊட்டு சோறும்,
எருமைக் கிடாவும்,
தலச்சம் பிள்ளை
மூளை மசையும்…
கேட்டு கேட்டு
நெஞ்சின் மீதேறி
ஆடுகிறாய்
ஊழித் தாண்டவம்…என்
சிரம் கொய்து
சுடு இரத்தம்
புசிக்கும்
வெறித்த கண்களோடு
காத்திருக்கிறாய் காளி நீ…
March 17, 2009
இரகசியம் பேசு…
நீ பேசவே..
பூ
நிலவு
இரவு
தென்றல்
குழந்தை பருவம்
காயம்
கண்ணீர்
தேவதைகள்
காதல்
கடல்
அலை
மழை
வானம்
ஓவியம்
எழுதி தீராத கவிதைகள்
தினமும்
கேட்கும் பாடல்
ரசித்து படித்த
புத்தகம்
………
பிரபஞ்ச ரகசியம்
புரியாமலே விரிகிறது
செங்குருதி
நிணம்
செங்காற்றென
அடங்கிகிடந்த உயிர்ப்பூ..
February 24, 2009
விடுபட்ட கவிதைகள்!!!
- Love Never Ends
நீ
தொட்டுவிட்டால்,
உன்
அனிச்ச விரல்
பட்டுவிட்டால்,
பாவம் விலகுமடி,
ஜென்ம
சாபம் தீருமடி!
கட்டியணைத்துவிடு
என்
காயம் ஆற்றிவிடு!
கனவே
கண் வந்துவிடு,
என்
கண்ணீர் கொஞ்சம்
ருசித்துவிடு!
இதயம் திறந்துவிடு,
என்
இளமை கொன்றுவிடு!
கவிதை பாடிவிடு,
என்
காதல் ஏற்றுவிடு!
தோள் சேர்ந்துவிடு
என்
துயரம் தாங்கிவிடு!
இதழ் சேர்த்துவிடு
என்
இனிமை உறிஞ்சுவிடு!
கண் பார்த்துவிடு
என்
காதல்ஜோதி ஏற்றிவிடு!
நிலவே
கொஞ்சம் இறங்கிவிடு,
இந்த சூரியனை
மடியில் சுமந்துவிடு!