உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
April 4, 2011
என் குருசு…
August 14, 2010
தீண்டாச் சர்ப்பம்!
நினைவுகளில்
என்றும் நெளிகிறது
ஒரு பாம்பு..
முகம் காட்டியதில்லை..
உடல்
வளைத்து வளைத்து
நெளியுமது..
தனிமைகளில்
எங்கோ
பதுங்கியிருக்கிறது!
சட்டென்ற
வினோத ஓசை
பாம்பானது…
வால் நுனி
காட்டிய
அரணை,பல்லி
ஓணான்
எல்லாமே பாம்பாகிறது..
அத்துவானக் காடுகளில்,
ஆளரவமற்ற பாதைகளில்,
பாம்பின் சட்டைகள்..
இரவின் இடுக்குகளில்,
பாழடைந்த கிணறுகளில்,
பாம்பின் வாசனை..
தனியான ஒத்த வீடுகளில்,
நகாராத பெரிய கற்களில்,
பாம்பின் காத்திருப்புகள்..
வாழப் பிடித்த
நாட்களிலும்
தீண்டக் காத்திருக்கிறது
எங்கோ
ஒரு சர்ப்பம்.. !
July 4, 2010
திறக்காதீர்கள்..
ஜன்னல்களை அடைத்தே
வைத்திருங்கள்
இருள்
வெளியே கசியாமல்..
அறைக்குள்
இருக்கும் வானம்
என்றும்
இருள்வதில்லை…
மனிதர்கள்
குதித்துவிடக் கூடும்
எச்சரிக்கை…
சில வார்த்தைகள்
ஊடுருவும் ..
சில குழந்தைகளின்
அழுகை கேட்கும்..
சொப்பனங்களில் ஆழ்த்தும்
ஆபாசப் பாடல்கள் வரும்
அடைத்தே வைத்திருங்கள்..
கதவுகளை..
யார் அவர்கள் கேளிர்,
கேளிக்கையாக
வந்து போகும்
சத்திரமா என்ன?
இறுக அடைத்துவையுங்கள்
நாய்கள்
நன்றி இல்லாத நாய்களைத்தான்
சொல்கிறேன்
வாலை ஆட்டிப்பார்க்கும்..
அடைத்து விடுங்கள்..
தயவு செய்து
இறக்கும் வரை
அடைத்த ஜன்னலும்
அடைத்த கதவுமாய்
இருக்க பிரார்த்தியுங்கள்…
உள்ளே வருவதுதான்
ஒருவனைக் கெடுக்கும்..
கிறிஸ்து அறைக்குள்
இருந்திருந்தால்
சிலுவையில் செத்திருப்பாரா?
கிருஷ்ணன்,
அறைக்குள்ளேயிருந்திருந்தால்
குருக்ஷேத்ரம் ஏது?
தோழர்களே தோழிகளே
கண்களை இறுக்க மூடி
மன்றாடுங்கள்..
அறியாமையில் அலையும்
மனிதர்கள் பாவம்,
அவர்களுக்கு மந்திரம்
தெரியாது?
வசனங்கள் புரியாது!
ஆகமம்,திருமறை,
காபிரியேல் எல்லாம்
தெரியாத ஜென்மங்கள்
புற்கள் என ஜென்னில்
அவர்களைத்தான் சொல்கிறார்கள்..
ஏன் இந்த குருவி காக்கா
கோழி பருந்து
பன்றி கழுதை
வகையறாக்கள் இன்னும்
பிறந்து தொலைக்கின்றன..?
பறப்பதும் நீந்துவதும்
ஆடுவதும் பாடுவதும்
கத்தி கும்மாளமிடுவதும்
என்ன கூத்து இது?
உங்களுக்கு நேரமில்லை
எனக்கு தெரியும்!
ஈனப் பிறவிகளுக்கு
ஒன்றும் புரிவதில்லை!
பிறந்து பிறந்து
சாகின்றன..
அறைக்குள் இருந்தபடியே
உங்கள் உள்ளத்தை
விண்ணுக்கு எழுப்புங்கள்
அங்குதான் நமது
தந்தை தாய்
மூதாதையர்கள்..
சிவபாதமெய்திய
சுந்தரர்களும் சுந்தரிகளும்
இருக்கிறார்கள்..
அவர்களுடன் நாம்
மரித்திருப்போம்..
மன்னிக்கவும் மகிழ்ந்திருப்போம்..
அப்படியே ஆகுக..
March 24, 2010
வலசை பறவைகள்!
December 27, 2009
புல்..
யாரும் சொல்லாத
கவிதை
சுமந்த பனித்துளி,
யாரும் கேட்காத
கவிதையோடு
தொலைகிறது..
இரவில்
வந்த கனவை
என்றுமறியாது
அந்தப் புல்..
October 2, 2009
மழையிரவில் உலகம்..
உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..
June 6, 2009
இரவோடு கலையும் கனவுகள்…
இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…
ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…
துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…
புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…
கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…
எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,
மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…
April 9, 2009
கன்னி நிலம்…
சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது மிக அணுக்கமான, கவனம் தேவையாகிற எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய முடிந்ததில்லை.உதாரணமாக புத்தகங்களை பைண்ட் செய்து ,அடுக்கி வைத்து உபயோகிப்பதில் இருக்கும் அழகே தனி.அது ஒரு கனவைப் போலவே இன்றளவும் என்னுள் இருக்கிறது.எனது அறையில் புத்தகங்களை குவித்து வைத்திருப்பேன்; நான் படுத்திருக்கும் கோரைப்பாயை சுற்றிலும் பத்திரிக்கைகளும்,நோட்டுகளும் கூடவே நான் நேசித்த புத்தகங்களும் சிதறி கிடக்கும்.பல நேரங்களில் வாசிப்பு ஒரு கொந்தளிப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இல்லை அது போன்ற உள்ளடக்கம் நிறைந்த புத்தகங்களை விரும்பியிருக்கிறேன்.செவ்விலக்கியங்களை பெண்களாகவே கருதினேன்,அதாவது புரிந்து கொள்ள முடியாதென்று.சட்டென ஒருநாள் மிகாயில் ஷோலகவ் எழுதிய கன்னி நிலத்தை வாசிப்பதென ஒரு அதிர்ச்சியான முடிவை நானே எடுத்தேன் அந்த புத்தகம் ருசிய புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு என்னைப் வாசி வாசி என்று கூவி அழைக்கும் விதமாக எங்களூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.கையில் பிடித்து வாசிக்க முடியாத அளவில் அது மிகப் பெரிய புத்தகமாயிருந்தது.மனசுக்குள் காத்தாடி ஓடியது.மின்விசிறியல்ல ஓலைக்காத்தாடி காக்கா முள் எனச் சொல்லப்படும் உட மரத்து முள்ளை பசுமையான அல்லது காய்ந்து போன பனை ஓலையை ரெண்டு இன்ச் அளவிற்கு ஒடித்து, அதன் நடுவில்(centroid) துளையிட்டு ஒரு அடி கம்ம(ன்) தட்டையில் முன் பக்கம் அல்லது பக்கவாட்டில் குத்தி,காற்றுக்கு எதிராக பிடிக்க ஓலை காத்தாடி விர்ரென்று இறைந்து கொண்டு சுற்றும்.அடடா அதை செய்து கொடுத்தவருக்கு பொன் கொடுத்தாலும் தகும்.மேகாத்து காலம் எல்லா சிறுவர்களும் ஒரு காத்தாடி வைத்திருப்பார்கள் சிலர் மிக அழகாக அந்த ஓலையின் பக்கவாட்டில் கீறி மற்றொரு ஓலையை செருகி சிலுவை போன்ற காத்தாடிகள் வைத்திருப்பார்கள்.எல்லா சிறுவர்களுக்கும் அவ்விதமான காத்தாடி செய்து கொடுப்பவர்கள்(தேவ தூதர்கள்) இருந்தார்கள் என் அப்பா கடைக்கு சென்று விடுவார்.என் அம்மாவிடம் கேட்டால் நினைத்து கூட பார்த்ததில்லை.நான் அவளிடம் கேட்டதேயில்லை.காரணம் அவள் நான் விளையாடுவதற்காக சுற்றியலைவதை அனுமதித்ததில்லை எனவே காத்தாடியும் செய்து தர மாட்டாளென்று நான் யூகித்திருந்தேன்.நானே அரை குறையாக பக்கத்து வீட்டு ஓலைகளை ஒடித்து காத்தாடி செய்வேன் ஓலைகள் ஒடிந்து ஒடிந்து போகும்.உண்மையில் என்னிடம் சரியாக ஒடிக்கும் உத்தி இல்லை.யாராவ்து மூத்தவர்கள் என்னிடம் செய்து கொடுப்பதாக சொல்லும்வரை பக்கத்து வீடு கூரைக்கு ஆபத்துதான்.
ஒருவழியாக கன்னி நிலத்தை கையில் தூக்கி கொண்டு வீடு சேர்ந்தேன்.வழியெல்லாம் எல்லோரும் என்னை பார்த்திருக்க கூடும் குருவி தலையில் பனம் பழத்தை தூக்கி கொண்டு சுற்றுகிறது என நினைத்திருப்பார்கள்.ஒரு குட்டி கர்வத்தோடுதான் வீட்டிற்குள் நுழைந்தேன்.என் அம்மா படியாதவள் நான் என்ன வாசித்தாலும் பூரிப்போடு பார்ப்பாள் நான் அதை கவனிக்காதது போல வாசித்து கொண்டிருப்பேன்.இடையிடையே எதாவது தின்பண்டம் வாங்கி கொடுப்பாள்.கன்னி நிலத்தில் புரள்வதற்காக என் சிற்றப்பா வீட்டு மெத்தைக்கு(மாடிக்கு) சென்றிருந்தேன்.அங்கு என்னை சுற்றி புத்தகங்கள் சிதறி கிடந்தது. ஒரு கனவு வெளியைப் போல இன்றும் என் கண்களில் விரிகிறது அந்தக் காலம்.வாசிப்பதின் சுகத்தை பூரணமாக நான் அனுபவித்த இடம் அந்த வீடுதான்.அந்த இடமே ஒரு தேவலோகம் போலிருந்தது.மாடியில் தெற்குப்புறம் பால்க்கனி.வடக்குப்புறம் மொட்டை மாடி.அறைக்குள் காற்று வீசிக்கொண்டே இருக்கும் உபயம் அருகிலிருந்த சுடலை மாடன் கோவில் வேப்பமரம்.வடக்கில் சற்று தள்ளி என் அறைக்கு நேர் எதிரே லூர்து மாதா சர்ச்.தெற்கில் அதே போல காந்தாரி அம்மன் கோயில்.எனக்கு பரவசமாயிருந்தது காலை பொழுதுகள்தான்.சர்ச்சில் அதிகாலையில் ஒரு விவிலிய வாக்கியமும் அதை தொடர்ந்து மிக இனிமையான பாடல்களும்;அம்மன் கோவிலில் அவ்வப்போது பாடல்கள் மாறும் என்ற போதிலும் துதிப்போர்க்கு என பெரும்பாலும் கந்த சஷ்டி கவசம் ஓங்கி ஒலிக்கும் அன்று காலைகளுக்கு இருந்த போதையும் பரவசமும் இன்று நூறில் ஒரு பங்கில்லை வாழ்க்கை மிக வறண்டு விட்டது.இருக்கட்டும்.கன்னி நிலம் இப்படி ஒரு சூழலில் வாசிக்கப்பட்டது.ஆனால் வழக்கம் போல என் மர மண்டையில் கதை ஏறவில்லை.வாசிப்பதில் கூட எனக்கு பொறுமை கிடையாது மூச்சிரைக்க ஓடுவது போலவே இருந்தது எனது வாசிப்பு.மீள் வாசிப்பென்பது தேர்வுகளுக்காக என் பாடப் புத்தகங்களோடு நான் செய்து கொண்ட கட்டாய கல்யாணம்(வாழ்க வைரமுத்து!).மீள் வாசிப்பதென்பது புரிந்து கொள்ளுதல், என் வாசிப்பு ஒரு சுதந்திர வெளி;புரிந்து கொள்ளுதல் ஒரு நிர்பந்தமாகவே தோன்றியிருந்தது ஆகவே மனம் ஊன்றி வாசிதத போதிலும் நான் ஒரு போதும் திரும்ப வாசிக்க எண்ணியதில்லை.விதிவிலக்குகள் வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி,குறைந்தது ஒரு நூறு முறை வாசித்திருப்பேன்.அப்படியொரு சுவை, அந்த கதா நாயகன் திருஞானம் போலவே மிக பரவசமாக இயற்கையை வழிபட வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வேட்கையாக எரிந்த நாட்கள் அவை.பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் குறிப்பாக “ஞானம் பிறந்த கதை” என்ற ஐந்தாம் பாகம் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்று மகன் பட்டிணத்து செட்டிக்கு சொல்லி செல்கிறான்.அவனது ஆத்தாவும்,மகன் கஷாயம் தரிக்கும் பொழுதும் அவன் பிரியும் தருணத்திலும் அவன் கண்களை திறக்கிறாள்.எனக்கு விவரம் தெரியாமல் நான் வாசித்த இது போன்ற வறட்டு தத்துவங்கள் என்னை ஒரு வகையான சிமிழுக்குள் அடைத்துவிட்டது இன்றும் எண்ணெய் போல வாழ்க்கையோடு ஒட்டவிடாமல் செய்வது இந்த சின்ன வயது புரிதலில்லாத தத்துவங்கள்தான்.
– தொடரும்…
February 24, 2009
விடுபட்ட கவிதைகள்!!!
- Love Never Ends
நீ
தொட்டுவிட்டால்,
உன்
அனிச்ச விரல்
பட்டுவிட்டால்,
பாவம் விலகுமடி,
ஜென்ம
சாபம் தீருமடி!
கட்டியணைத்துவிடு
என்
காயம் ஆற்றிவிடு!
கனவே
கண் வந்துவிடு,
என்
கண்ணீர் கொஞ்சம்
ருசித்துவிடு!
இதயம் திறந்துவிடு,
என்
இளமை கொன்றுவிடு!
கவிதை பாடிவிடு,
என்
காதல் ஏற்றுவிடு!
தோள் சேர்ந்துவிடு
என்
துயரம் தாங்கிவிடு!
இதழ் சேர்த்துவிடு
என்
இனிமை உறிஞ்சுவிடு!
கண் பார்த்துவிடு
என்
காதல்ஜோதி ஏற்றிவிடு!
நிலவே
கொஞ்சம் இறங்கிவிடு,
இந்த சூரியனை
மடியில் சுமந்துவிடு!
January 24, 2009
விடிந்தெழுந்தேன்!!!

Endless Night
நேற்று இரவு
நெடு நேரமாய்
நீ
உறங்கவில்லை,
புரண்டு படுக்கவும்
விருப்பமில்லாதவளாய்
நீயாகிவிட்டாய்!
திசைகாட்டும் கருவியாய்
வடக்கு சுவர்
பார்த்தே
உறங்கினாய்
இல்லை, இருந்தாய்!
இன்னும்
உன்னைப்பற்றி
எழுதிக்கொண்டே
இருக்கலாம்…
என்னைப்பற்றி
ஒன்றை மட்டுமே
சொல்லமுடியும்!
நேற்றிரவும்
நான் பேசுவதற்காக இல்லை,
நீ
பேச விரும்பும்
எந்த தருணத்திலும்
கேட்கவே,
விழித்திருந்தேன்!