தொடுவானம் தொடாத விரல்

October 2, 2009

மழையிரவில் உலகம்..

உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..

June 6, 2009

இரவோடு கலையும் கனவுகள்…

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…

May 3, 2009

டைகர்,டாமி,டெவில்..ஜூலி..

எழுதும்போதெல்லாம்
என் எல்லா வார்த்தைகளுமே
கட்டவிழ்த்த நாய்க்குட்டிகளாய்
உன்னை தேடியே ஓடுகின்றன…

April 25, 2009

பூ…

பூஞ்செடிகளின்
வேரில்
பூக்கிறது பூமி..!!!

April 9, 2009

கன்னி நிலம்…

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது மிக அணுக்கமான, கவனம் தேவையாகிற எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய முடிந்ததில்லை.உதாரணமாக புத்தகங்களை பைண்ட் செய்து ,அடுக்கி வைத்து  உபயோகிப்பதில் இருக்கும் அழகே தனி.அது ஒரு கனவைப் போலவே இன்றளவும் என்னுள் இருக்கிறது.எனது அறையில் புத்தகங்களை குவித்து வைத்திருப்பேன்; நான் படுத்திருக்கும் கோரைப்பாயை சுற்றிலும் பத்திரிக்கைகளும்,நோட்டுகளும் கூடவே நான் நேசித்த புத்தகங்களும் சிதறி கிடக்கும்.பல நேரங்களில் வாசிப்பு ஒரு கொந்தளிப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இல்லை அது போன்ற உள்ளடக்கம் நிறைந்த புத்தகங்களை விரும்பியிருக்கிறேன்.செவ்விலக்கியங்களை பெண்களாகவே  கருதினேன்,அதாவது புரிந்து கொள்ள முடியாதென்று.சட்டென ஒருநாள் மிகாயில் ஷோலகவ் எழுதிய கன்னி நிலத்தை வாசிப்பதென ஒரு அதிர்ச்சியான முடிவை நானே எடுத்தேன் அந்த புத்தகம் ருசிய புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு என்னைப் வாசி வாசி  என்று  கூவி அழைக்கும் விதமாக எங்களூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.கையில் பிடித்து வாசிக்க முடியாத அளவில் அது மிகப் பெரிய புத்தகமாயிருந்தது.மனசுக்குள் காத்தாடி ஓடியது.மின்விசிறியல்ல ஓலைக்காத்தாடி காக்கா முள் எனச் சொல்லப்படும்   உட மரத்து முள்ளை பசுமையான அல்லது காய்ந்து போன பனை ஓலையை ரெண்டு இன்ச் அளவிற்கு ஒடித்து, அதன் நடுவில்(centroid)  துளையிட்டு ஒரு அடி கம்ம(ன்) தட்டையில் முன் பக்கம் அல்லது பக்கவாட்டில்  குத்தி,காற்றுக்கு எதிராக பிடிக்க ஓலை காத்தாடி விர்ரென்று இறைந்து கொண்டு சுற்றும்.அடடா அதை செய்து கொடுத்தவருக்கு பொன் கொடுத்தாலும் தகும்.மேகாத்து காலம்  எல்லா சிறுவர்களும் ஒரு காத்தாடி வைத்திருப்பார்கள் சிலர் மிக அழகாக அந்த ஓலையின் பக்கவாட்டில் கீறி மற்றொரு ஓலையை செருகி சிலுவை போன்ற காத்தாடிகள் வைத்திருப்பார்கள்.எல்லா சிறுவர்களுக்கும் அவ்விதமான காத்தாடி செய்து கொடுப்பவர்கள்(தேவ தூதர்கள்) இருந்தார்கள் என் அப்பா கடைக்கு சென்று விடுவார்.என் அம்மாவிடம் கேட்டால் நினைத்து கூட பார்த்ததில்லை.நான் அவளிடம் கேட்டதேயில்லை.காரணம் அவள் நான் விளையாடுவதற்காக சுற்றியலைவதை அனுமதித்ததில்லை எனவே காத்தாடியும் செய்து தர மாட்டாளென்று  நான் யூகித்திருந்தேன்.நானே அரை குறையாக பக்கத்து வீட்டு ஓலைகளை ஒடித்து காத்தாடி செய்வேன் ஓலைகள் ஒடிந்து ஒடிந்து போகும்.உண்மையில் என்னிடம் சரியாக ஒடிக்கும் உத்தி இல்லை.யாராவ்து  மூத்தவர்கள் என்னிடம் செய்து கொடுப்பதாக சொல்லும்வரை பக்கத்து வீடு கூரைக்கு ஆபத்துதான்.
ஒருவழியாக கன்னி நிலத்தை கையில் தூக்கி கொண்டு வீடு சேர்ந்தேன்.வழியெல்லாம் எல்லோரும் என்னை பார்த்திருக்க கூடும் குருவி தலையில் பனம் பழத்தை தூக்கி கொண்டு சுற்றுகிறது என நினைத்திருப்பார்கள்.ஒரு குட்டி கர்வத்தோடுதான் வீட்டிற்குள் நுழைந்தேன்.என் அம்மா படியாதவள் நான் என்ன வாசித்தாலும் பூரிப்போடு பார்ப்பாள் நான் அதை கவனிக்காதது போல வாசித்து கொண்டிருப்பேன்.இடையிடையே எதாவது தின்பண்டம் வாங்கி கொடுப்பாள்.கன்னி நிலத்தில் புரள்வதற்காக என் சிற்றப்பா வீட்டு மெத்தைக்கு(மாடிக்கு) சென்றிருந்தேன்.அங்கு என்னை சுற்றி புத்தகங்கள் சிதறி கிடந்தது. ஒரு கனவு வெளியைப் போல இன்றும் என் கண்களில் விரிகிறது அந்தக் காலம்.வாசிப்பதின் சுகத்தை பூரணமாக நான் அனுபவித்த இடம் அந்த வீடுதான்.அந்த இடமே ஒரு தேவலோகம் போலிருந்தது.மாடியில் தெற்குப்புறம் பால்க்கனி.வடக்குப்புறம் மொட்டை மாடி.அறைக்குள் காற்று வீசிக்கொண்டே இருக்கும் உபயம் அருகிலிருந்த சுடலை மாடன் கோவில் வேப்பமரம்.வடக்கில் சற்று தள்ளி என் அறைக்கு நேர் எதிரே லூர்து மாதா சர்ச்.தெற்கில் அதே போல காந்தாரி அம்மன் கோயில்.எனக்கு பரவசமாயிருந்தது காலை பொழுதுகள்தான்.சர்ச்சில் அதிகாலையில் ஒரு விவிலிய வாக்கியமும் அதை தொடர்ந்து மிக இனிமையான பாடல்களும்;அம்மன் கோவிலில் அவ்வப்போது பாடல்கள் மாறும் என்ற போதிலும் துதிப்போர்க்கு என பெரும்பாலும் கந்த சஷ்டி கவசம் ஓங்கி ஒலிக்கும் அன்று காலைகளுக்கு இருந்த போதையும் பரவசமும்  இன்று நூறில் ஒரு பங்கில்லை வாழ்க்கை மிக வறண்டு விட்டது.இருக்கட்டும்.கன்னி நிலம் இப்படி ஒரு சூழலில் வாசிக்கப்பட்டது.ஆனால் வழக்கம் போல என் மர மண்டையில் கதை ஏறவில்லை.வாசிப்பதில் கூட எனக்கு பொறுமை கிடையாது மூச்சிரைக்க ஓடுவது போலவே இருந்தது எனது வாசிப்பு.மீள் வாசிப்பென்பது  தேர்வுகளுக்காக என் பாடப் புத்தகங்களோடு நான் செய்து கொண்ட கட்டாய கல்யாணம்(வாழ்க வைரமுத்து!).மீள் வாசிப்பதென்பது புரிந்து கொள்ளுதல், என் வாசிப்பு ஒரு சுதந்திர வெளி;புரிந்து கொள்ளுதல் ஒரு நிர்பந்தமாகவே தோன்றியிருந்தது ஆகவே மனம் ஊன்றி வாசிதத போதிலும்  நான் ஒரு போதும் திரும்ப வாசிக்க எண்ணியதில்லை.விதிவிலக்குகள்  வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி,குறைந்தது ஒரு நூறு முறை வாசித்திருப்பேன்.அப்படியொரு சுவை, அந்த கதா நாயகன் திருஞானம் போலவே மிக பரவசமாக இயற்கையை வழிபட வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வேட்கையாக எரிந்த நாட்கள் அவை.பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் குறிப்பாக “ஞானம் பிறந்த கதை” என்ற ஐந்தாம் பாகம் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்று மகன் பட்டிணத்து செட்டிக்கு சொல்லி செல்கிறான்.அவனது ஆத்தாவும்,மகன் கஷாயம் தரிக்கும் பொழுதும் அவன் பிரியும் தருணத்திலும் அவன் கண்களை திறக்கிறாள்.எனக்கு விவரம் தெரியாமல் நான் வாசித்த இது போன்ற வறட்டு தத்துவங்கள் என்னை ஒரு வகையான சிமிழுக்குள் அடைத்துவிட்டது இன்றும் எண்ணெய் போல வாழ்க்கையோடு ஒட்டவிடாமல் செய்வது இந்த சின்ன வயது புரிதலில்லாத தத்துவங்கள்தான்.

– தொடரும்…

February 24, 2009

விடுபட்ட கவிதைகள்!!!

Love Never Ends
Love Never Ends

நீ
தொட்டுவிட்டால்,
உன்
அனிச்ச விரல்
பட்டுவிட்டால்,
பாவம் விலகுமடி,
ஜென்ம
சாபம் தீருமடி!

கட்டியணைத்துவிடு
என்
காயம் ஆற்றிவிடு!

கனவே
கண் வந்துவிடு,
என்
கண்ணீர் கொஞ்சம்
ருசித்துவிடு!

இதயம் திறந்துவிடு,
என்
இளமை கொன்றுவிடு!

கவிதை பாடிவிடு,
என்
காதல் ஏற்றுவிடு!

தோள் சேர்ந்துவிடு
என்
துயரம் தாங்கிவிடு!

இதழ் சேர்த்துவிடு
என்
இனிமை உறிஞ்சுவிடு!

கண் பார்த்துவிடு
என்
காதல்ஜோதி ஏற்றிவிடு!

நிலவே
கொஞ்சம் இறங்கிவிடு,
இந்த சூரியனை
மடியில் சுமந்துவிடு!

January 24, 2009

விடிந்தெழுந்தேன்!!!

Filed under: அன்பு,இரவு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:25 pm
Tags: , ,
Endless Night

Endless Night

நேற்று இரவு
நெடு நேரமாய்
நீ
உறங்கவில்லை,

புரண்டு படுக்கவும்
விருப்பமில்லாதவளாய்
நீயாகிவிட்டாய்!

திசைகாட்டும் கருவியாய்
வடக்கு சுவர்
பார்த்தே
உறங்கினாய்
இல்லை, இருந்தாய்!

இன்னும்
உன்னைப்பற்றி
எழுதிக்கொண்டே
இருக்கலாம்…

என்னைப்பற்றி
ஒன்றை மட்டுமே
சொல்லமுடியும்!

நேற்றிரவும்
நான் பேசுவதற்காக இல்லை,

நீ
பேச விரும்பும்
எந்த தருணத்திலும்
கேட்கவே,
விழித்திருந்தேன்!

October 14, 2008

உறவுகள் ஒரு தொடர்கதை!!!

Filed under: அன்னை,அன்பு,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:32 pm
Tags:

பலமுறை யோசித்திருக்கிறேன் ஏன் உறவுகள் உலகில் இத்தனை சிக்கலாகிவிடுகிறது? என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும்?என்னவாக இருக்க முடியும்? அது அவர்களுக்கே வெளிச்சம்.

அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மனிதன் அடிப்படையிலேயே குடும்ப உணர்வுள்ளவன்.அதனால்தான் எல்லா சமயங்களும் ஒரு கட்டத்தில் குடும்ப உறவை சற்று கடுமையாக சாடியிருக்கின்றன.அரசியல் தலைவர்கள்  அதனாலேயே உறவுகளை சொல்லி தொண்டர்களை அழைக்கிறார்கள்.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குடும்பம் என அழைப்பதும் இது போன்றதொரு காரணத்தினால்தான்.மனிதன் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம் குடும்பத்தை,உறவுகளை,நட்பை விட முடியாது.பிறந்த குழந்தைக்கு சொல்லாமலேயே தெரிகிற உறவு தாய் மட்டுமே.தாயை துன்புறுத்துகிற தந்தைகளை பார்க்கிற குழந்தைகள் எத்தனை கொடுமையானதொரு வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

அடுத்தவர்களின் காலுக்கு செருப்பாக இருந்துவிட்டு மனைவியை ஏறி மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்ன பிரயோஜனம்?.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில்  புலியாகிறவர்களை என்ன செய்வது?சர்க்கஸில் சேர்த்துவிட  வேண்டியதுதான்!.நான் இப்படித்தான் என்னால் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியாது என சொல்பவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்?.அண்மையில் ஒரு மெகா சீரியலில் 😉 இப்படி காட்டினார்கள் அந்த காவலதிகாரி பல தருணங்களில் ஒரு “Hard Negotiator” ஆக இருந்து நடக்கவிருந்த குற்றங்களை நிறுத்தியிருக்கிறார் ஆனால் தன் மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாதவர் என்ற அவரின் மனைவியின் குற்றச் சாட்டினால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள்.

எப்படி இவருடன் குடும்பம் நடத்துறதுன்னே தெரியலப்பா என சொல்லி அழும் சாமானியர்கள் எத்தனை பேர்?பணம் ஒரு பிரச்சனையே இல்லை ,நிம்மதியா ஒரு நாள்கூட தூங்கினதில்ல.இது போன்று நம்மை பலவாறாக எண்ண வைக்கும் நிகழ்வுகளை பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.வயதானவர்களோ குழந்தைகளோ இளைஞர்களோ யாராக இருந்தாலும் எல்லோருக்கும் மனம் ஒன்றுதான் உணர்வுகள் ஒன்றுதான்.எத்தனை நடந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது,நீ அன்றைக்கு இதைத்தான் செய்தாய் இன்று என் முறை,உனக்கும் வலின்னா என்னன்னு தெரியணும்,மனுஷன் விடிஞ்சு போனா அடைஞ்சுவாறான் அவனிடம் ஆசையா ரெண்டு வார்த்த பேசாம நீ இப்படி ஈயத்த காய்ச்சி ஊத்துற மாதிரி பேசிறியே,நான் மட்டும் என்ன குத்துக்கல் மாதிரி சும்மாவா உக்காந்திட்டு இருக்கேன் வீடு தூக்கணும்,தெளிக்கணும்,ஓம் பிள்ளைகளுக்கு பீயள்ளிபோடனும்,கழுவி விடணும்,குளுப்பாட்டி  பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்,போகைலே கையில மத்தியான சாப்பாடு கெட்டி கொடுக்கணும்..நீங்க கட்டின துணிமணியெல்லாம்  தொவச்சு போடணும்,ராத்திரியில நாக்குக்கு ருசியா சாப்பிடறதுக்கு  காய்கனியெல்லாம்   வாங்கிட்டு வரணும்,மஞ்ச மசாலா சாமான் இப்படி நானும் நாயா ஓடியாடி வேல பாத்தாலும் ராத்திரி வந்தா ஒரே புடுங்கலு…  சோசலிசமாக  இருவரும் இப்படி திட்டிக்கொள்வதும் நடக்கும்.

நாம் இன்றும்  இது போன்ற உரையாடல்களை கிராமங்களிலும் சேரிகளிலும் கேட்கலாம்,வசதியான குடும்பங்களில் பேசுவதெல்லாம் நன்றாகவே இருக்கும்.வெளியில் காட்ட மாட்டார்கள்.கேட்க முடியாது.அவர்கள் படித்தவர்கள் பிடிக்கவில்லை என்றால் பேச்சை குறைத்து கொண்டு செயல்களில் வஞ்சனை செய்வார்கள்.சாப்பாடை எடுத்துவைத்துவிட்டு அமைதியாக போய்விடுவார்கள்.தண்ணி வைக்கமாட்டார்கள்.இல்லை உப்பு போடமாட்டார்கள்.இப்படியாக இருக்கும்.பிறகு பேசினால் ஒன்னு ரெண்டு வார்த்தைகளில் ஜென்மத்திற்கும் பேசமுடியாத மாதிரி விஷ பேச்சாக இருக்கும்.

சரி இப்ப இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன?.உறவுகளை பொறுத்தவரையில் உடைத்தெறிந்து பேசுவது எளிது.ஆனால் என்ன செய்தாவது உறவுடன் பேச வேண்டும் பழக வேண்டும் நம்மை புரிய வைக்க வேண்டும்.இதுதான் விதி.கடவுளையோ,தலை எழுத்தையோ சொல்லுவது  அறிவுடமையல்ல.நான் ஆம்பள அப்படித்தான் இருப்பேன் என வீராப்பு சொல்வது நல்லதல்ல.பெண்கள் பேசுகிற அளவிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.”அவள் அப்படி பேசிவிட்டாள் அதானால” என  ஆண்கள் சொல்வதோ,”இவர் செஞ்ச காரியம் என்னன்னு தெரியுமா உனக்கு” என பெண்களோ பேசுவதை நிறுத்திவிட்டு தங்களையும்,தன் துணையையும் புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் ஒரு தொடர்கதை.

கோப்பையில்லாத கைப்பிடி!!!

Filed under: அன்பு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:08 am
Tags: , ,
You&Me

நுணுக்கமானதொரு
பீங்கான் கோப்பை
எதிர்பாராமல்
நிகழ்ந்த  கைபடலில்
தன்னிலும் வலுவான
தரையில் விழுந்து
நொறுங்காமல் உடைந்தது…

கோப்பையின் கைப்பிடி,
கைப்பிடியில்லாத கோப்பை
இப்படியாக…

உடைந்தாலும்
அது
ஏதோவொரு கோப்பையாக
இருந்ததினால்
பூக்களை சுமந்துகொண்டு
சூடான தேநீர் காலங்களை
நினைத்தபடி….

மற்றுமொரு
பிஞ்சு கரத்தின்
கைபடலையோ…
தளர்ந்த விரல்களின்
நடுக்கமான ஸ்பரிசத்தையோ,
தவற விடுதலையோ
மௌனமாக எதிர்பார்த்தபடி…

ஆனால்
உடைந்த கைப்பிடி
உடைந்த  “கோப்பையின் கைப்பிடியாகவே”
சிறுமையுற்றது…

கோப்பையில்லாத கைப்பிடியாக
யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை…
அதுவே கூட…

நீ
என் கோப்பை,
நான்
உனது கோப்பையில்லாத கைப்பிடி…

October 10, 2008

காதலை காபியுடன் கலந்துவிட்டாள்…

Filed under: அன்பு,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:20 am
Tags: ,

காலையில்
காபி கேட்டேன்
நீ
கொடுத்து விட்டு
கேட்டாய்,
“என் கண்கள்
உனக்கு புளித்து விட்டதா?”
காபி உவர்த்துவிட்டது,
பிறகு இருவரும்
கண்களையே பருகினோம்
காலையை உலையிலிட்டபடி…

« Previous PageNext Page »

Create a free website or blog at WordPress.com.