விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..
April 9, 2011
களித்தோழி!
April 4, 2011
என் குருசு…
உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
August 14, 2010
தீண்டாச் சர்ப்பம்!
நினைவுகளில்
என்றும் நெளிகிறது
ஒரு பாம்பு..
முகம் காட்டியதில்லை..
உடல்
வளைத்து வளைத்து
நெளியுமது..
தனிமைகளில்
எங்கோ
பதுங்கியிருக்கிறது!
சட்டென்ற
வினோத ஓசை
பாம்பானது…
வால் நுனி
காட்டிய
அரணை,பல்லி
ஓணான்
எல்லாமே பாம்பாகிறது..
அத்துவானக் காடுகளில்,
ஆளரவமற்ற பாதைகளில்,
பாம்பின் சட்டைகள்..
இரவின் இடுக்குகளில்,
பாழடைந்த கிணறுகளில்,
பாம்பின் வாசனை..
தனியான ஒத்த வீடுகளில்,
நகாராத பெரிய கற்களில்,
பாம்பின் காத்திருப்புகள்..
வாழப் பிடித்த
நாட்களிலும்
தீண்டக் காத்திருக்கிறது
எங்கோ
ஒரு சர்ப்பம்.. !
July 5, 2010
மழைக் குறிப்புகள்-1!
மழை வருமா
என்றபடி
கண்ணாடி பார்த்தாள்,
வானவில்!
கண்ணாடிக்குள்
யார் பார்த்தது
மழையான மழை?
July 4, 2010
திறக்காதீர்கள்..
ஜன்னல்களை அடைத்தே
வைத்திருங்கள்
இருள்
வெளியே கசியாமல்..
அறைக்குள்
இருக்கும் வானம்
என்றும்
இருள்வதில்லை…
மனிதர்கள்
குதித்துவிடக் கூடும்
எச்சரிக்கை…
சில வார்த்தைகள்
ஊடுருவும் ..
சில குழந்தைகளின்
அழுகை கேட்கும்..
சொப்பனங்களில் ஆழ்த்தும்
ஆபாசப் பாடல்கள் வரும்
அடைத்தே வைத்திருங்கள்..
கதவுகளை..
யார் அவர்கள் கேளிர்,
கேளிக்கையாக
வந்து போகும்
சத்திரமா என்ன?
இறுக அடைத்துவையுங்கள்
நாய்கள்
நன்றி இல்லாத நாய்களைத்தான்
சொல்கிறேன்
வாலை ஆட்டிப்பார்க்கும்..
அடைத்து விடுங்கள்..
தயவு செய்து
இறக்கும் வரை
அடைத்த ஜன்னலும்
அடைத்த கதவுமாய்
இருக்க பிரார்த்தியுங்கள்…
உள்ளே வருவதுதான்
ஒருவனைக் கெடுக்கும்..
கிறிஸ்து அறைக்குள்
இருந்திருந்தால்
சிலுவையில் செத்திருப்பாரா?
கிருஷ்ணன்,
அறைக்குள்ளேயிருந்திருந்தால்
குருக்ஷேத்ரம் ஏது?
தோழர்களே தோழிகளே
கண்களை இறுக்க மூடி
மன்றாடுங்கள்..
அறியாமையில் அலையும்
மனிதர்கள் பாவம்,
அவர்களுக்கு மந்திரம்
தெரியாது?
வசனங்கள் புரியாது!
ஆகமம்,திருமறை,
காபிரியேல் எல்லாம்
தெரியாத ஜென்மங்கள்
புற்கள் என ஜென்னில்
அவர்களைத்தான் சொல்கிறார்கள்..
ஏன் இந்த குருவி காக்கா
கோழி பருந்து
பன்றி கழுதை
வகையறாக்கள் இன்னும்
பிறந்து தொலைக்கின்றன..?
பறப்பதும் நீந்துவதும்
ஆடுவதும் பாடுவதும்
கத்தி கும்மாளமிடுவதும்
என்ன கூத்து இது?
உங்களுக்கு நேரமில்லை
எனக்கு தெரியும்!
ஈனப் பிறவிகளுக்கு
ஒன்றும் புரிவதில்லை!
பிறந்து பிறந்து
சாகின்றன..
அறைக்குள் இருந்தபடியே
உங்கள் உள்ளத்தை
விண்ணுக்கு எழுப்புங்கள்
அங்குதான் நமது
தந்தை தாய்
மூதாதையர்கள்..
சிவபாதமெய்திய
சுந்தரர்களும் சுந்தரிகளும்
இருக்கிறார்கள்..
அவர்களுடன் நாம்
மரித்திருப்போம்..
மன்னிக்கவும் மகிழ்ந்திருப்போம்..
அப்படியே ஆகுக..
March 24, 2010
வலசை பறவைகள்!
February 6, 2010
நீராடல்…
மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…
January 26, 2010
மந்தைகளே…
உங்கள் மந்தைகளில் இல்லை
நான்,
எனது மேய்ப்பனை
தேடும் ஆடு
நான்,
என்னிடமிருந்து
தொலைந்த அவனை
தேடுகிறேன்..
உங்கள் மந்தைகளில்
தேடுகிறேன்,
அவனும் ஓர்
ஆடாகியிருக்கக்கூடும்..
உங்கள் மேய்ப்பர்களில்
தேடுகிறேன்
அவன் என்னை
மறந்திருக்கக்கூடும்..
உங்கள் சவ ஊர்வலங்களில்
தேடுகிறேன்
உங்கள் களப்பலியாக
அவனிருந்திருக்கக்கூடும்..
உங்கள்
பிணக் குவியல்களில் தேடுகிறேன்
நானில்லாமல் அவன்
அனாதையாகியிருக்கக்கூடும்..
குழந்தைகளை தேடி
அலைகிறவன்
ஏதாவது பள்ளியில்
ஆசிரியராயிருப்பான்..
இல்லை தெருக்களில்
கோமாளியாகியிருப்பான்..
அவனை என்னிடம்
வரவிடுங்கள்
மந்தைகளே…
December 27, 2009
புல்..
யாரும் சொல்லாத
கவிதை
சுமந்த பனித்துளி,
யாரும் கேட்காத
கவிதையோடு
தொலைகிறது..
இரவில்
வந்த கனவை
என்றுமறியாது
அந்தப் புல்..
November 3, 2009
சிவ தனுசு!
யாருக்காகவோ எழுதும்
ஒரு கவிதை,
மௌனமாக பார்க்கப்படுகிறது..
சில தடவைகள்
நாட்குறிப்புகளுக்குள்
உப்புக்கரிக்கும் விரல்களால்
ஒளித்து வைக்கப் படுகிறது…
யாரும் வாசித்து
விடாமலிருக்க நாட்குறிப்பும்
கைக்கெட்டாத
ஆழங்களில் அடைக்கலமாகிறது…
நாட்களாக பார்க்கப்பட்ட
நாட்குறிப்பு
மாதங்களாய்,வருடங்களாய்
கண்ணுக்குள் ஒளியாகி,
மொழிகளின் மொழியாகி,
வன்மத்தின்
உதிரம் குடித்து,
சிவ தனுசாகிறது…
வேண்டாம் இராமனென்று
ஒரு கனத்த இரவில்
சீதையே
ஒடித்து விட்டாள்…
தீ பிழைத்தது..