தொடுவானம் தொடாத விரல்

June 10, 2012

அஞ்சுவண்ணம் தெரு – நிறைவு!

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 4:50 am

ஆதித்தெருவின் கதைகள் அறுந்துபோய் நிகழ்காலத்தின் சண்டைகளும் சச்சரவுகளும்தான் அஞ்சுவண்ணம் தெருவின் முடிவாகிறது.கதைகளின் மீதிருக்கும் ஈர்ப்பும்,மயக்கமும் நடைமுறை வாழ்வில்,வாழ்வின் தருணங்களில் இல்லை.யதார்த்தவாத இலக்கியங்களில் உறைந்து கிடப்பது நாம் வாழும் உலகின் பிம்பங்களே. இலக்கியங்களெல்லாம் நடைமுறையிலிருந்து தப்பிச் செல்ல விழையும் மனித மனத்தின் தத்தளிப்புதான் என நான் நினைத்திருக்கிறேன்.அதனாலேயே என் பதின்பருவத்தில் கதைகள்,நாவல்களுக்குள் நுழையமுடியாமல் திகைத்துமிருக்கிறேன்.ஆனால் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,கண்மணி குணசேகரன் போன்றவர்களின் படைப்புலகங்கள் அசல் வாழ்க்கையை உள்ளபடியே சொல்கின்றன.புனைவுகளின் யதார்த்தம் சர்க்கரை இல்லாத காபி போல கசப்பானது.கடைசி நூற்றுச்சொச்சம் பக்கங்களில் மீரான் கசப்பான காபியை தருகிறார்.இதுதான் முழு நாவலாக இருக்குமென்றால் அது யதார்த்த”வாதமாயிருந்திருக்கும்”.ஆனால்.ஜின்னுகளும், அவுலியாக்களும், மலக்குகளும், ஹூர்லின்களும் நாவலின் மீதான ஈர்ப்பை நீர்த்துப்போகாமல் செய்கின்றனர்.

ஆந்திராவில் வெடித்த குண்டுக்கு இரண்டு அப்பாவி இளைஞர்களை குற்றஞ்சாட்டி கொன்றுவிடுகின்றனர் போலிஸ்.புதிதாக என்ன சொல்ல இதை பக்கம் பக்கமாக நமது புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.மைதின் பிச்சை மோதின், கிழவி இறந்த துக்கத்தில் அலைந்து கடைசியில் கள்ளப்பாம்பு கொத்தி சாகிறார்.பாம்பு நடமாடும் பள்ளிக்கு தொழப் போக வேண்டாம் எனச் சொல்லும்போது வாப்பா சொல்கிறார் , “யாரானாலும் ஆயுள் தாண்டி ஒரு நொடி கூட வாழ முடியாது இத்தனை ஏன் அவனுக்கு உவப்பான நபிக்கே 63 வயதுதான் எழுதி வைத்திருந்தான்.” குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் நோய்வாய்ப்படுகிறார்.அவரது மகன் பாகவிக்கு தவ்ஹீதுவாதியான அபுசாலி ஆட்சிகுழுவுக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் பதவி போகிறது.சீக்கா வீட்டு சாவலின் தம்பிக்கு நிக்காஹ் சிங்கப்பூர்காரரின் மகளோடு, கொள்கைபிரச்சார உரையில் நபி வழித் திருமண முறைப்படி மஹர் கொடுத்து நடக்கும் முறையான முதல் திருமணம் இதற்கு முன்பு நடந்ததெல்லாம் ஹராமான திருமணங்கள் எனச் சொல்ல, ஹராத்தில் பிறந்தவர்களா? என பொங்கி எழுகிறார்கள் மக்கள்.தொடர்ந்து சண்டைதான் வேறென்ன.

கடைசியில் தாயும்மாவை இழிவு படுத்தி பேசுவதை நிறுத்தச் சொல்லி பதற் போர் பற்றி தவ்ஹீது வாதிகளின் கொள்கை விளக்க கூட்டத்தில் பக்கீர்ஷா ஒருவர் பாட,சண்டை பெரிதாகி அஞ்சு வண்ணம் தெருவிலுள்ள வீடுகள் அடித்து நொறுக்கப் படுகின்றன.அதோடு தைக்காப் பள்ளி யாரும் கேட்பாரின்றி சிதலமடைந்து, ஓடுகள் விழுந்து குட்டிச் சுவராகிறது.படுக்கையில் கிடக்கும் அப்துல் லத்திப் ஹஜ்ரத்தை பார்க்க தாத்தாவின் மருத்துவர் மகன் செல்கிறார்.BARC-ல் வேலை பார்க்கும் சகோதரன்,திருச்சி எஸ்.பி,கல்லுரி முதல்வர் என சகோதரர்கள் அனைவரும் நலம் எனக் கேட்ட ஆலிப்புலவரின் வாரிசுக்கு ஆச்சரியம்.எப்படி மினாரா கட்டிக் கொடுக்காமல் ஹஜ் போன மேற்கத்திக்காரரின் பிள்ளைகள் இப்படி உயர்ந்தனர்?.ஷேக் மதர் சாஹிப் ஏன் பாப்பரானார்? அந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவள் மம்மதும்மா மட்டுமே.

பாபர் மசூதியை பற்றிய குறிப்பு கடைசி அத்தியாயத்தில் வலிந்து திணிக்கப் பட்டதாகவே தெரிகிறது.ஆனால் மசூதி இடிக்கப்பட்டது நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியரை புண்படுத்தியதோடு அவர்களை இந்துக்களிடமிருந்து நிரந்தரமாக விலகி இருக்க செய்தது.ஆகவேதான் அது கனவில் ஒரு சித்திரமாக,ஆழ்மன வேதனையாக,அச்சமாக காட்டப்படுகிறது.ஆலிப் புலவரின் வாரிசான ஹஜ்ரத் அவர் குடும்பம் வறுமையில் வாடுகிறது,தலைமுறைகளாக அந்த தாயை வணங்கிய அத்தனை பேரின் வீடுகளும் நொறுக்கப்பட்டுவிட்டன,அவ்வளவு ஏன் அந்த தாயும்மா உறைந்த தைக்காப் பள்ளியே குட்டிச் சுவராகி விட்டது.வெளி நாட்டுக்கு போய் தவ்ஹீதுவாதியானவர்கள், ஒழுக்கத்தோடு உழைத்து கல்வி கற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மீதான மீரானின் விமர்சனங் கலந்த பதிவு இந்த நாவல்.ஒன்று பணம் தேடு,இல்லை கல்வியை நாடு இல்லையென்றால் நம்பிக்கைகளை, தலைமுறைகளாக வளர்த்த பண்பாட்டை தன் மக்களிடமே இழக்க நேரிடும்.இழந்தவர்கள் கடைசியில் ஈமானில் குறையாத எளிய மக்கள்,அந்த தாயும்மாவின் பெற்றெடுக்காத பிள்ளைகள்.

Photo: Russ Bishop

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: