நமது புலவர் காயல்பட்டணம் போனவர் நபியின் விண்ணேற்றப் பயணம் நிகழ்வை பாடலாக இயற்றி கையில் வைத்துக் கொண்டு அரங்கேற்றத்துக்காக கோட்டாறு வருகிறார்,தன் சமூக மக்களிடம் நடையாய் நடந்து நொந்துபோனவரை பாவாடைச் செட்டியாரிடம் அழைத்துச் செல்கிறார் புலவரின் மாணவர்.புலவரின் வேதனையை கண்ட செட்டியாரும் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.வடக்கே மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் பொற்கால ஆட்சி நடந்துகொண்டிருக்கும் காலத்தில் தென்னெல்லையில் (எனக்கு இரண்டு அல்லது மேற்பட்ட வார்த்தைகளை இஷ்டத்திற்கு இணைத்து எழுதும் வியாதி இருக்கிறது என்பதை இவ்விடம் தெரிவித்துக் கொள்கிறேன்.திண்ணை இணைய இதழில் இரா.முருகன் கதையின் ஓரிடத்தில் நன்னார்க்குண்டி என்று சொல்லி பின் நன்றாக+இருக்கும்+அடி என்று “வாச”கர்களுக்காக சந்தி பிரித்திருந்தார்.) இப்படி ஒரு சித்திரம் காணக்கிடைக்கிறது.மேலும் அரங்கேற்றத்துக்கு கூடிய கூட்டம் மூவாயிரம் இந்து நெசவாளர்களுடையது.ஒற்றை வேம்பு வளர்ந்தோங்கி கிளை பரப்பி நிற்கிறது.இந்த வேம்புதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காக்கை இட்ட எச்சத்தில் இருந்து முளைத்த வேம்பு.ஆனால் என்ன நடந்தது என்பதுதான் அதிசயத்திலும் அதிசயம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவழிபாட்டிற்காக முன்னோக்கியிருந்த பள்ளி “பைத்துல் முகத்தீசு” இது ஜெருசலேமில் தாவூது நபியின் (தாவீது/டேவிட்) மகனான சுலைமான் நபியால் (சாலமன்) கட்டப்பட்டது.நபி புராக் என்னும் மிருக ஊர்தியில் அப்பள்ளிக்கு சென்று பின் விண்ணேற்றப் பயணம் செய்கிறார்.நாலாவது ஆகாசத்தை கடந்து ஐந்தாவது ஆகாசத்தில் நுழையுமுன் தூணில் கைவிரலால் துளையிட்டு புராக்கை அதில் கட்டிவிட்டு நுழைகிறார்.புலவர் இதை கூடியிருந்தவர்களுக்கு சொல்லி விளக்கும்போது வேம்பின் அடியில் தாஹா நபி (நபிகள் நாயகம் (ஸல்)) ஒரு ஜோதியாக தோன்றுகிறார்கள்.மொத்த கூட்டமும் வாயடைத்துப் போய் நிற்கிறது,நபி ஆலி என்னுடன் வந்த ஜிப்ரீலும் அல்லாவையும் தவிர யாருமறியாத இந்த விடயம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்?.நபியை நேரில் கண்டு விதிர்விதிர்த்துப் போன ஆலி “எனக்கு அப்படி வந்து விட்டது” எனச் சொல்லி மூர்ச்சையடைகிறார்.குருடர் பாவடைச் செட்டியார் கண் பெறுகிறார்.நபியைக் கண்ட கண்கள் மானிடரைக் காணாதென்று கண்களை குருடாகிவிடுகிறார் புலவர்.
பின்னும் எத்தனையோ கதைகள் மம்மேலி மைதீன் தைக்காப் பள்ளியில் முதன் முதலாய் பாங்கு சொல்வது,மம்மதும்மாவின் நிக்காஹ்,மம்மதுப்பாவின் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட பாம்பு,ஓடிப்போன ஹஜாராவின்(தாயும்மாவின்) சகோதரர் வழி வந்த மம்மதுப்பாவின் கனவில் பெத்தம்மா வந்து சொல்லி இரவோடிரவாக ஜின்னுகளை கொண்டு பள்ளி கட்டுவது,மறைக்காயரப்பாவின் போர்த்திறம்,உபைத் இப்னு அப்துல்லாஹ் என்னும் அரபியின் வழி வந்த மாவீரன் ஷஹீத் அயம்மாதாஜியின் மகள்தான் மம்மதும்மா,அயம்மாதாஜி வெள்ளைருக்கெதிரான போரில் வீரமரணம்(ஷஹீத்) அடைகிறான்,நாட்டுக்காக போராடிய அந்த வீரனின் அருமாந்த பெண்பிள்ளைதான் வீடின்றி தெருவிலலையும் மம்மதும்மா,ஆற்றங்கரைப் பள்ளியில் கிடாய் அறுத்து நெய்ச் சோறு விருந்திட்டு பாத்தியா ஓதிட்டு சௌதிக்குப் போன சீக்கா வீட்டு சாவல் தவ்ஹீதுவாதியாக திரும்பி வந்து ஊரை ரெண்டாக்குகிறான்,நாகூரப்பாவின் பேர் வைப்பது தவறென்கிறான்,மெஹ்ராஜ் மாலை,மஸ்தான் பாடல்கள்,சீறாப் புராணம் எல்லாத்தையும் தீ வைக்கணும் எல்லாம் ஷிர்க் என்கிறான்,தொப்பியணிய மறுக்கிறான் ,மவ்லுது ஓதுவது பாவம் என்று சொல்லும் அவன் உம்மா “சுட்டும் விழிச் சுடரே” என்ற கஜினி படப் பாடலை கேட்கிறாள்,அதோடு விடாமல் வட்டிக்கு பணம் கொடுக்கிறாள்,தாயும்மாவின் கொடியேற்ற விழாவில் கொடிக்கம்பு முறிக்கப்படுகிறது கொடி கிழிக்கப்படுகிறது.நாகரிகம் முற்றிய பண்பாட்டாளர்கள் உலகெங்கும் செய்யும் கூத்து அங்கு அரங்கேறுகிறது.கபடமற்ற மக்களின் பண்பாடு,நம்பிக்கை முறிக்கப்பட்டு,கிழித்தெறியப்படுகிறது.கடைசியில் தாயும்மாவின் கொடி சாணியில் புரட்டப்பட்டு வீதியில் கிடக்க மம்மதும்மா பெருங்குரலெடுத்து வைகிறாள்.
இப்படித்தானே மெல்ல மெல்ல நம் கண்ணெதிரே பெருந்திரளான மக்கள் செய்யும் விவசாயத்தை கேலிப் பொருளாக்கினர்.நம் உணவு வகைகள்,தானியங்கள்,திருவிழாக்கள்,நாட்டார் கலைகள்,விளையாட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரைப் படங்களையும்,தொலைக்காட்சியையும்,கிரிக்கெட்டையும் மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறோம்.(கோபப்படாதீர்கள், எனக்கு புத்தகங்களும்,இணையமும் அவ்வப்போது கிரிக்கெட்டும்.)
மலட்டுக் காசிம் மண்டையைப் போட்டதும் இந்த வன்மம் உச்சத்தை எட்டுகிறது,அவன் மனைவி இத்தா இருக்க மறுப்பதை மம்மதும்மா சரியென்று சொல்லி காரணமாக காசிமின் வண்டவாளத்தை பிட்டு வைக்கிறாள்.தல்கீன் ஓதக்கூடாது ஓதவேண்டும் என்று கைகலப்பாகி ஒன்றுமறியா சுக்குக் காப்பி இஸ்மாயில் கொல்லப்படுகிறான்.மம்மதும்மாவின் நெஞ்சம் ரணமாகிப் போகிறது என்றென்றும் அவள் வாய் திறக்க முடியாத பெருந்துயராக மாறிவிடுகிறது இஸ்மாயிலின் மரணம், எத்தனை எளியவன்?. வாப்பா சொல்கிறார் இந்த சாமானி(காலம்) யிலுள்ள முஸ்லீம்கள் கையில் இஸ்லாம் அதாபு(சிரமம்) படுகிறது.அதேவேளையில் நொடித்துப் போன மச்சானுக்கும்,தாத்தாவுக்கும் விடியலாக வருகிறது அவர்கள் பிள்ளைக்கு கிடைத்த மெடிக்கல் சீட்.தாருல் சஹீனா விருத்திகெட்ட வீடில்லை, அல்லாஹ் வீடுகளின் உயரத்தை அளப்பவனில்லை.
-தொடரும்
Leave a Reply