வாய்நிறைய தளிர் வெற்றிலையும் வேப்பாணம் போயிலையும் கூட்டி கன்னத்தில் ஒதுக்கியபடி தாத்தாவிடம் நபீசா மனிசிலுக்குள் ஆளற்ற இரவுகளில் ஒலிக்கும் கொலுசு சத்தத்துக்கு பின்னாலிருக்கும் நிஷாவைப் பற்றி சொல்கிறாள் மம்மதும்மா. நிஷா கருப்பென்றாலும் அழகி பட்டாரியாரின் மகனை நேசித்தாள் கருவுற்ற உண்மை ஊரெல்லாம் தெரியவர சடலமாக கிடக்கிறாள். வேப்பாணம் போயிலை வாசனை கதையெங்கும் கமகமக்கிறது. போயிலை பாவிக்கும் ஆண்களையோ பெண்களையோ ஏன் போயிலையையே பார்த்து பல வருடங்களாகிவிட்டது.திண்டுக்கல் அங்கு விலாஸ் போயிலை,வேப்பாணம் போயிலை,D S பட்டணம் பொடி இதையெல்லாம் இன்று கேட்கும்போது வேறுயுகத்தில் இருப்பதை உணர முடிகிறது. வாப்பாவிற்கு ஆலிப்புலவரின் மெஹ்ராஜ் மாலை அத்துப்படி.கவிஞரை பற்றிய கதைகளையும் தொன்மைங்களையும் மெய்மறந்து சொல்கிற வாப்பா ஒத்த எழுத்து வாசிக்கத் தெரியாதவர். என் வாழ் நாளில் அப்படிப்பட்ட மனிதர்களை இன்னும் பார்க்கவில்லை.இத்தனைக்கும் எங்களூரிலிருந்து பத்து மைல் தொலைவிலிருக்கும் இடைசெவலில்தான் தமிழகத்தின் தலை சிறந்த கதை சொல்லி கி.ரா பிறந்தார்.(இவரும் அகாடமி விருது வாங்கியவர் என்பதை அடியேன் இவ்விடம் குறிப்பிட விழைகிறேன்.அங்ஙனமே விலைக்கு வாங்கிய பெரியவரின் புத்தகங்களுமுண்டு.)

Photo Credit: http://www.dailynews.lk
ஆலிப்புலவரின் கதை சுவாரசியம் கூடியது குளிர எண்ணெய் தேய்த்து குளித்தால் கவிஞருக்கு ஆட்டுக்கறி வேண்டும்.பலநாட்கள் தேசாந்திரம் போய் திரும்பிய புலவர் அன்றும் அப்படியே வழிய வழிய எண்ணெய் தேய்த்துவிட்டு ஆட்டுக் கறி கேட்கிறார் மனைவியார் இல்லை என்கிறார்,சரி கோழிக்கறி என்று கேட்கிறார் இல்லையென்கிறார் கோபம் பொத்துக் கொண்டது கவிஞருக்கு.பின்னே கவிஞர் இல்லையா?.மனைவியிடம் வானத்தை பார்த்து ஆலிப்புலவர் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்,மத்தியானம் சாப்பாடுக்கு ஐந்தாறு கொக்குக்குகளை விழச் சொல் என்கிறார்.மனைவி சிரிக்கிறாள்.என்ன அதிசயம் கொக்குகள் வரிசையாக ,அறுக்க வசதியாக கழுத்தை நீட்டியபடி வானிலிருந்து முற்றத்தில் செத்து விழுகின்றன.உடன் கொங்கணரும், வாசுகியும் நினைவில் வந்தார்கள்.கூடவே அந்த தெய்வப்புலவனின் குறள் ஒன்றும், நேற்று பத்மாவதி சரித்திரத்தில் இடையே வந்தது.
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
பின்னும் எட்டயபுரத்துக் கவிஞன்
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினைஅழித்திடுவோம்.
ஏனய்யா புலவீர்காள் இத்தனை கோபம்?.வாப்பா சொல்கிறார் அவர் புலவர் மட்டுமில்லை அவுலியா!.வலிய கராமத்துள்ள அவுலியா!.தைக்காப் பள்ளிக்கு தாருல் சாஹினாவை விட உயரமாக ரெண்டு மினாரட்டு கட்டிக் கொடுக்க குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் எத்தனை எடுத்து சொல்லியும் மறுத்து விடும் வாப்பாவை அவர் ஆசாமி வஹாபியோ என்று சந்தேகிக்கிறார்.ஆனால் வாப்பாவிற்கு இறைநேசர்களின் மீதிருக்கும்ஆழ்ந்த ஈடுபாடு ஆலிப்புலவரின் வழியாக சொல்லப்படுகிறது.
மேலும் தீன் சொல்ல நாஞ்சில் நாட்டுக்கு வந்த சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் மக்களெல்லாம் கூடி குறை சொல்கிறார்கள் என்னவென்று இந்த நெய்துக்காரன் பீர் மட்டும் தொழ வருவதில்லை என்று.அப்படியா சங்கதி ,விட்டேனா பார் என்று பீரை சந்திக்கப் போகிறார் தொழும் வேளை.பீர் தறிக் குழிக்குள் நெய்து கொண்டிருக்கிறார்.
ஏனப்பா நீ பள்ளிவாசலுக்கு தொழப் போகல்ல?
எனக்கேட்டுவிட்டு பார்த்தால் என்ன மாயம்? பீரை காணவில்லை.தறிக்குழிக்குள் எட்டிப் பார்த்தவருக்கு தூக்கி வாரிப்போடுகிறது.என்ன அதிசயம் கஅபதுல்லா (மக்காவிலிருக்கும் காபா) திறந்திருக்க பீர் தொழுது கொண்டிருக்கிறார்.ஆஹா என்ன காரியம் செய்ய துணிந்து விட்டேன், இத்தனை பெரிய அவுலியா வாழ்கிற மண்ணிற்கா தீன் சொல்ல வந்தேன்? என எண்ணி திரும்ப எத்தனித்தவரை பீர் இருந்து விருந்துண்டு செல்ல சொல்கிறார்.அதோடு முடிந்ததா கதை குளத்திற்கு குளிக்கச் சென்ற இடத்தில் எப்படி சுத்தமாக குளிக்க வேண்டுமென சொல்கிறார் பீரப்பா.எப்படி தன் குடல்களை கையில் எடுத்து அலசி கழுவுகிறார். சதக்கத்துல்லா “என் ஷேக்கே” என வாயடைத்துப் போய் நிற்கிறார். பீரப்பா பற்றி இங்குஎச் ஜி ரசூல் இங்கு ஹமீது ஜாஃபர் எழுதிய பதிவுகள்.நானும் நாலு வருடங்கள் அந்த ஞானியின் பூமியில் நல்ல சாப்பாட்டுக்கு அலைந்திருக்கிறேன், எத்தனை பெரிய அஞ்ஞானி நான்!.
இப்படி வாப்பாவின் வெகு சுவாரசியாமான கதைகளில் வரும் மீரானின் நாஞ்சில் வழக்கு எனக்குள் ஒரு மெல்லிய புன்னகையை வரவைத்தது.நாஞ்சில் நாடன்,ஜெயமோகன் இருவரிடமும் தெறிக்கும் வழக்கிலிருந்து இது வித்தியாசமானதுதான்.அடுத்து வேம்படிப் பள்ளியின் கதை.இதற்கிடையில் நான் எழுத மறந்த குறிப்பொன்று உண்டு. அது மருத்துவான் மழைக் காற்று.அஞ்சு வண்ணம் தெருவில் அது வீசக் காரணமே சமாதியில் உறங்கும் அந்தத் தாயின் கருணை என எண்ணுகின்றனர்.ஆனால் நானும் உணர்ந்திருக்கிறேன் காற்றுகூட ஊருக்கு ஊர் வேறுதான்.எங்கள் ஊரில், எனது அம்மாவின் ஊரில், நான் படித்த பள்ளியில் வீசிய காற்று எல்லாமே எத்தனை உணர்வுகளை தரக் கூடியவை.பெரு நகரங்களில் காற்றே இல்லை என்று சொல்லலாம்.சென்னையில் காற்று வீசும் இடங்களுண்டு.கொச்சியில் அப்படி இடங்கள் இருப்பதாக தெரியவில்லை.பெங்களூர் கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்திலிருக்கிறது காற்றிருப்பதே பெரிய விஷயம்.
நபிகள் நாயகம்(ஸல்) பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நூஹு நபி (நோவா) பிரளயக் காலத்தில் ஏற்றிச் சென்ற காக்கை உமிழ்ந்த வேப்பங்கொட்டையிலிருந்து ஒரு மரம் துளிர்க்கிறது. எப்போது? ஆலிப்புலவர் உறக்கமற்று கிடக்கிறார் ஒரு கோடை இரவில் ஒரே புழுக்கம்.இப்படியும் அப்படியும் புரண்டு பார்க்கிறார் தூக்கம் வந்தபாடில்லை.எழுந்து காத்தாட நடந்து போய் ஓடைக்கருகில் குளிர்ச்சியாக இருக்க நின்று கொண்டிருக்கிறார்,முழு நிலவில் தொப்பியும்,முக்காடும் அணிந்து மாரியம்மன் கோயிலில் புராணக்கதைகளை கேட்டுவிட்டு இஸ்லாமியர்கள் சாரை சாரையாக வருகிறார்கள்.வருந்திய புலவர் புராணம் படைக்க “சின்ன மக்கம்” என அழைக்கப்படும் காயல்பட்டிணத்திற்கு செல்கிறார்.
-தொடரும்
Leave a Reply