அறுபதுகளில் U.R.ஆனந்தமூர்த்தி எழுதி வெளி வந்த நாவல் சம்ஸ்காரா, அடையாளம் பதிப்பகத்தால் T.S சதாசிவம் மொழிபெயர்ப்பில் தமிழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.சனாதன தர்மத்தின் மீது ப்ரானேஸாச்சார்யா என்ற வைதீக மனதிற்கு உள்ள பிடிவாதமும் அதன் தளர்வும் என்று இந்நாவலை வாசிக்கலாம்.சம்ஸ்காரா என்றால் பிராமணர்கள் வாழ்வில் ஜனனம்,மரணம்,திருமணம்,கருவுறுதல்,கல்வி என பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்கும் சடங்குகள் என்றும் ஒரு பொருளிருக்கிறது.குறியீடுகளால் ஆன நாவல் என்று சொல்கிறார்கள், யோசிக்கும்போது ப்ரானேஸாச்சார்யா சனாதனத்தில் தோய்ந்த மனம் அவர் வாழ்வே அதற்கு சாட்சியாக இருக்கிறது. துர்வாசபுரத்து மக்கள் அவரை தங்களை வழிநடத்தும் ஒளியாக எண்ணுகிறார்கள். பாகீரதி என்ற அவரது மனைவி சநாதனத்தின் ஆன்மா என்று கொள்ளலாம் அவள் விவாகத்திற்கு முன்பே நோயுற்றவள் பலவீனமானவள் துறவியாகும் எண்ணத்தை கைவிட்டு ப்ரானேஸாச்சார்யா அவளை மணக்கிறார். தன தவ வாழ்விற்கான வேள்வித்தீ தன் மனைவி என எண்ணுகிறார்.நாரனப்பா சனாதன தர்மத்திலிருந்து தவறிய மனதின் குறியீடு,சந்திரி என்ற தாசி குல பேரழகி பாலின்பம்,ஒழுக்கக்கேடு போன்றவற்றின் குறியீடு எந்தவொரு குற்றவுணர்ச்சியுமில்லாமல் வாழ்வை வாழ்கின்ற மனிதர்களின் குறியீடு. வாயாடி புட்டா ஒரு பூக்கட்டி பிராமணன் ஸ்மார்தர்களுக்கும்,மாத்வர்களுக்கும் கீழ் எந்தவொரு சனாதன பிடிப்புமின்றி இருக்கும் மக்களின் குறியீடு.பிளேக் நோய் அதாவது எலிகளின் வழி பரவும் கொள்ளை நோய் லௌகீக வாழ்வில் எதிர்கொள்ளும் ஆசைகள்,சவால்கள்,துவேஷங்கள்.. இப்படித்தான் தோன்றுகிறது.

courtesy:himalayanacademy
ப்ரானேஸாச்சார்யாவின் முதல் சிக்கல் நாரனப்பாவின் மரணத்தில் ஆரம்பிக்கிறது.பல வருடங்களாக தர்மமின்றி அலைந்த மனிதன் இறந்தால் அவனை எப்படி எரிப்பது என்ன பரிகாரம்.உற்றார் உறவினர்கள் என அவன் உயிருள்ளவரை யாரையும் நெருங்கவிடவில்லை.ஈமச் சடங்குகளை செய்ய யாரும் முன்வரவில்லை.சரி ஊர் கூடி செய்தால் செலவு யார் செய்வது எனும்போது சந்திரி தன நகைகளை கழற்றி வைக்கிறாள்.ப்ரானேஸாச்சார்யா விடிய விடிய தர்ம சாஸ்திரங்களை புரட்டுகிறார்.உயிருடன் இருந்த நாரணப்பா நாவலில் எங்குமே வரவில்லை அவன் நினைவுகளின் வழியாக நாவலில் மீட்டெடுக்கபடுகிறான்.அக்கிரகாரத்துக்காரர்களுக்கு நாரனப்பா இருந்தும் கெடுத்தவன் இறந்தும் கெடுத்தவன்.இது முற்றிலும் புறச் சிக்கல் அது அகச் சிக்கலாக ஆகும் தருணம்தான் ஆச்சர்யாவின் வாழ்வு திசை திரும்புகிறது.முழுவதும் தற்செயலான கட்டத்தில் ஆச்சார்யா சந்திரி இருவரும் நிதானம் இல்லாமல் பாலுறவு கொள்கின்றனர்.சந்திரி தன் தர்மம் அப்பேற்பட்ட மாமனிதரால் புண்ணியம் அடைந்தததென்று எண்ணுகிறாள்.அவள் வருத்தம் என்பதை சிறிதும் அறியாதவள்.அவள் செய்த எல்லாமே அவள் அறிந்த குல தர்மம்.இன்பத்தை அள்ளி மனிதர்களுக்கு வழங்குவது. ஆனால் ஆச்சார்யா பெருங்குழப்பத்துக்கு ஆளாகிறார்.25 வருட தவம் சில நொடிகளில் தூக்கியெறியப்பட்டுவிட்டது.வீடு திரும்பினால் தன் பாரியாள் பெருங்குரலெடுத்து ஓலமிட்டபடி மரணிக்கிறாள்.
மனித அக ஓட்டங்களையே அதிகம் பேசுவதால் வாசிப்புக்கு சற்று தொய்வாக சில நேரம் தோன்றுகிறது.மனைவி இறந்த பிறகு ஆச்சார்யா கால் போன போக்கில் போகிறார் போகும்போது யோசிக்கிறார் நாரணப்பா அவருக்கு விட்ட சவாலில் தான் தோற்றுவிட்டதை உணர்கிறார்.பால்ய நண்பன் மஹ பாலனை நினைத்துப் பார்க்கிறார்.இடையில் புதிர் புட்டாவை சந்திக்கிறார்.ஆச்சார்யா என்னும் தன் பாரம் தலை விட்டு நீங்கிய நிம்மதி உணர்கிறார் பின்பு தான் அடையாள மற்றவனாகிவிட வேண்டும் சந்திரியோடு வாழ்வது என குந்தாபுரம் போகத் தலைப்படுகிறார்.அதற்கு முன் தன்னவர்களிடம் தன் நெறி தப்பியதையும் சொல்லி நாரணப்பாவின் சவத்தை தானே எரித்து விடுவாதகவும் சொல்ல கிளம்புவதுடன் நாவல் நிறைவுறுகிறது.இடையில் நாரணப்பாவின் சவத்தை முசலமான்களின் உதவியுடன் சந்திரி எரித்துவிடுகிறாள் இதையறியாமல் பரிகாரம் தேடி பிராமணர்கள் மைல்கணக்கில் நடக்கின்றனர்.எலிகள செத்து விழுவதும், கழுகுகள் அலைவதும் மருட்டவும் பெண்கள் பிள்ளைகளுடன் தாய் வீடு செல்கின்றனர்.பிளேக் தாக்கி தசாச்சார்யான் இறந்து போகிறான்.மேலும் சிலர் இறக்கிறார்கள்.பாரிஜாதபுரத்து மஞ்சய்யா தடுப்பூசி போடும் மருத்துவர்களை ஏற்பாடு செய்கிறான்.
மரணம் நாரணப்பா என்ற தன் கணவனை சவமாக சுருக்கி விட்டதென்று துயற்படுகிறாள் சந்திரி. ஆனால் அக்கிரகாரத்தில் அவன் பிணம் ஒரு சனாதன சிக்கலாக ஆகி அது அங்கிருக்கும் அனைவைரையும் துன்பத்திலாழ்த்துகிறது.சிவமொகிக்கு போன நாரனப்பா பிளேக்கோடு திரும்பி வந்து இறந்து போகிறான்.நாரனப்பா சனாதனத்துக்கு மாற்றான மரபை முன்வைக்கவில்லை அவன் முன்வைப்பது சற்றும் குறுகுறுப்பில்லாமல் சந்திரியைப் போல வாழ்வதை மட்டுமே.வாழ்வின் சிக்கல்களை குறைக்கவே மனிதன் எண்ணிலடங்காமல் தர்மசாஸ்திரங்களையும்,நீதிநூல்களையும் வகுத்து வைத்திருக்கிறான்.சில புறவாழ்வில் கட்டுப்பாடுகளை கோருபவை,சில அக வாழ்வில் ஒழுங்கை வேண்டுபவை.சில கட்டுப்பாடுகள் காலவோட்டத்தில் பொருளற்றுப்போன பின்பும் பேணப்படுகின்றன.ஒரு நீதி,ஒரு தர்மம் அநீதிக்கு காரணமானால் அது பொருளற்ற சடங்காகிவிடுகிறது, நீதி எந்திரமாகிவிடுகிறது .அநீதியை வரையறுப்பதுதான் மாற்று அறம்,மாற்று மரபு.அதை நோக்கிய விவாதத்தை உருவாக்குவதுதான் இலக்கியம்.தன் சிறு கிராமத்தில் பிளேக் நோய் வந்த போது சேரிக்குள் செல்ல உயர்சாதி மருத்துவர்கள் மறுத்ததால் சேரி மக்கள் இறந்துபோன சம்பவமே இந்த நாவலாக உருவெடுத்ததென்று ஆனந்தமூர்த்தி சொல்கிறார்.
இன்று இந்த நாவலின் தளம் சற்று வீர்யம் குறைந்ததாக இருந்தாலும் தனி மனித ஒழுங்கிலும் திரளான மக்களுக்கான சட்டம் மற்றும் கோட்பாடுகளிலும் அதன் கேள்விகள் முக்கியமானவை.
உடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. தமிழிலும் பரவலாக கவனிக்கபப்ட்ட படைப்பு.
Comment by Nalliah Thayabharan — December 25, 2012 @ 7:33 pm |