பாதசாரியின் “கட்டற்ற உரைகள்” அடங்கிய தொகுப்பு பேய்க்கரும்பு, இணையத்தில் கோபி ராமமூர்த்தியின் பதிவை வாசித்து மறந்துவிட்டேன் ஆனால் பாதசாரி என்ற பெயர் எனக்கு ஏனோ பிடித்துவிட்டது. புத்தகக்கடையில் பார்த்ததும் எடுத்துவிட்டேன்.கொஞ்சம் புரட்டிப் பார்த்து,என்ன பதிப்பகம் முன்னரையில் யார் என்ன எழுதியிருக்கிறார்?, உள்ளே ஏதாவதொரு பக்கத்தை புரட்டி தமிழில்தான் எழுதியிருக்கிறாரா?(கண்டிப்பாக விலையை பார்ப்பேன்).என வழக்கமாக வாங்கும் படலம் நிகழும்.அது இந்தமுறை தவறிவிட்டது.
பேய்க்கரும்பு என்ற தலைப்பே வசீகரமாயிருந்தது, தலைப்புகள் அமைவது மனிதன் செய்யும் தவம் ,உள்ளடக்கம் உள்பட.நாஞ்சில் நாடன் தலைப்புகள் அவ்வளவு தமிழ் எட்டுத் திக்கும் மத யானை,என்பிலதனை வெயில் காயும், சூடிய பூ சூடற்க,நதியின் பிழையன்று நறும்புனலின்மை,மாமிசப்படைப்பு,பேய்க்கொட்டு,தீதும் நன்றும்,நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று..நானும் சின்னாட்கள் முயல்வதுண்டு. எதுவும் அமையாது, தவக்குறை என்செய்வேன்? சிறு புத்தகம் என்பது வாசிப்பு சௌகர்யம்,பேருந்தில்,பேருந்து நிலையத்தில் என எங்கும் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டு இல்லை கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டு எப்படி வாகாக இருக்கிறதோ அப்படியே வாசிக்கலாம்.காவல் கோட்டத்தோடு மல்லாக்க படுத்தால் மாரடைப்புச் சாத்தியங்களுண்டு,கவனம்.
பேய்க்கரும்பு என்றால் என்ன? நேரமில்லை ,கரும்பு என்றால் நினைவுக்கு வழக்கமாக வருவது கரு நீல நிறத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிடைக்கும் கரும்புதான், அதுதான் வந்தது.கோபி ராமமூர்த்திக்கு பட்டினத்தார் ஞாபகம் வந்திருக்கிறார்,உடனே எனக்கு “ஞானம் பிறந்த கதை” அட்டைப்படம் ஞாபகம் வந்தது.பட்டினத்தார் கையில் கரும்பு எப்படி வந்ததென்பது தனிக்கதை, ஆனால் “கடிக்கின்ற பக்கமெல்லாம் இனிக்கும் பேய்க்கரும்பு நீயெனக்கு” என கவியொருவன் உருகியிருந்தான். ரஸ்தாளி கரும்பு ஓன்று இருப்பதாக தெரியும் அது பச்சையா இல்லை கரு நீலமா? ரஸ்தாளி வாழைப் பழம் மஞ்சள் நிறம் கரும்பு எப்படி பச்சையாகும்? பெயரில் என்ன இருக்கிறது என்று விட முடியவில்லை.கடித்த இடமெல்லாம் இனித்தால் அதற்கு பேய்க்கரும்பென்ற பெயர் பொருத்தமானதுதான்,ஆனால் புத்தகம் பேய்க்கரும்பில்லை, ஊரில் “ஒதைப்பழம்” என்பார்கள் புளியங்காயுமில்லாமல் பழமுமில்லாமல் இருப்பதை அப்படியிருந்தது.மன நிழல் என தமிழினி இதழில் வெளி வந்த தன்னுடைய உதிரி உணர்வுகள் இந்த புத்தகமென்கிறார் பாதசாரி.
கரும்பு தூரில் இனிக்கும் உங்கள் ஊரில் “வேராக” இருக்கலாம்.நுனியில் கசக்கும்.பகிர்ந்து கொள்வது பாக்கியம் என ஆரம்பித்து Love possesses not nor will it be possessed,for love is sufficient unto love. என கிப்ரானில் முடிக்கிறார்.உண்மைதான் போலும், இனிப்பதே கசக்கும். அங்கங்கே சில இடங்களில் நெகிழ்வான உணர்வுகளை உதிர்த்திருக்கிறார்.பால்ய கால நண்பன் கவி.சுகுமாரன், இப்போது நாஞ்சில் நாடன்,தேவ தேவன், செல்வ புவியரசன், ராஜசுந்தரராஜன், க.மோகனரங்கன் என பாக்யவானாக இருக்கிறார் பாதசாரி. தன்னை கவி என்று சொல்லிகொள்வதால் கவிதைகள் வரும் எனக் காத்திருந்தேன்.வரவேயில்லை.சுய எள்ளல் நிரம்பி வழிகிறது. இது பொது வழி அல்ல- “உதிரிப்பூக்கள்” நன்றாக இருந்தது.இனி வரும் காலங்களில் இது போன்ற புத்தகமல்லாத புத்தகங்கள் நிறைய வரலாம்.எதையும் கட்டுரையாகாமல் கவிதையாக்காமல் புனைவாக்காமல் உதிரிகளாக உதிர்க்கப்படும் உணர்வுகளின் தொகுப்பு.அதற்கான தேவை இருக்கிறதென்றே நினைக்கிறேன். உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்டது ஆனால் மனிதன் உலகத்திற்கு வெளியே நிற்கிறான்.
இதை புத்தகமாக சிபாரிசு செய்ய முடியாது இணைய வெளியில் வரும் சற்றே பெரிய ட்விட்டர்-களை வாசித்த உணர்வே வருகிறது. பரவாயில்லை என்றால் வாசியுங்கள்.அம்பாரமாக குவிந்து கிடக்கும் சொற்களை கொண்டு செல்பேசி,நட்பு,புகைப்பழக்கம்,பெண்மை,தீண்டாமை,நகரம், காதல், சுற்றுச் சூழல் என அவருக்குள் இருக்கும் சொந்தப்பேயை ஆட விட்டிருக்கிறார்.
Leave a Reply