சில நாட்களாக வாசித்த புத்தகங்கள் தந்த உற்சாகத்தில்(!) இன்று எழுத உட்கார்ந்தேன்.கல்லுரி படிப்பு முடிந்த சமயத்தில் உயிர்மை ,காலச்சுவடு போன்ற இதழ்களை வாசிக்க தொடங்கியிருந்தேன். என்னால் பிரவேசிக்க முடியாமல் போன பல கட்டுரைகள், கதைகள் ,கவிதைகள் அந்த இதழ்களில் வெளி வந்தன. அவைகளை வாசிப்பது ஒரு மோஸ்தர் என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும் உழன்று கொண்டிருந்தேன். நன்பர் ஒருவர் சிவசங்கரி,லட்சுமி,ரமணி சந்திரன், அனுராதா ரமணன், காண்டேகர், என்டமுறி விரேந்த்திரநாத்,பாலகுமாரன்,சாண்டில்யன்,ஜானகிராமன்.. என்று வகை தொகையில்லாமல் வாசித்து தள்ளினார். வைரமுத்து மேத்தா அப்துல்ரகுமான் இவர்கள்தான் கவிஞர்கள்.அவ்வப்போது வண்ணதாசனும் வந்துபோவார்.எனக்கு யாரை வாசிக்க வேண்டுமென்கிற விவரம் கிடையாது.இலக்கியமென்றாலே அது சங்க இலக்கியம் மட்டுமே என எண்ணி வந்த காலம். எனக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது ,அவிழ்த்து விடப்பட்ட கன்று போல இலக்கில்லாமல் குதித்து ஓடும் மனம்.புத்தகங்களின் மீதான இந்த கிளர்ச்சி அடங்க வெகுநாட்களாகியது.இன்று உணர்கிறேன் நான் புத்தங்களை துய்ப்பதாக, ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுவே உண்மை. இதை உணர நான் வாசித்த பக்கங்கள் அனேகம்.
நான் உயிர்மையில் வாசித்த ஒரு சிறுகதை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.என்னை புன்னகைக்க வைத்தது,எழுதியவர் யார் என்று பார்க்க வைத்தது,எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அந்த கதை புரிந்து விட்டது.எத்தனை ஆச்சரியம் நாஞ்சில் நாடனின் (பள்ளி முடிக்கும் வரை நாஞ்சில் மனோகரன்,நாஞ்சில் சம்பத் இவர்களை போல நாடன் இவர் என எண்ணியிருந்தேன்) ஐந்தில் நான்கு, அழகிரி சாமியின் ராஜா வந்திருக்கிறார்,தி.ஜா-வின் முள்முடி என இன்னும் சில கதைகள் பள்ளியில் துணைப்பாட நூலில் தெரிந்து கொண்டேனே தவிர தேடி வாசிக்கவில்லை.அவைகளும் தமிழ் இரண்டாம் தாளில் கேட்கப்படும் திறனாய்வு(!) கட்டுரைகளுக்காக கைடில் கொஞ்சம் புத்தகத்தில் கொஞ்சம் என பிய்த்து பிய்த்து வாசித்தது. சிறுகதை வடிவ போதம் சிறுதும் பிடிபடவில்லை, புதுமைப்பித்தனின் பிரம்மராக்ஷசன் அந்தக்கால எழுத்து என புறங்கையால் ஒதுக்கினேன்.தினமலர்-வாரமலரில் எழுதிவந்த தாமரை செந்தூர்பாண்டியின் கதையும் புரியவில்லை. அப்பேற்பட்ட எனக்கு ஒரு சிறுகதை புரிந்ததென்றால்?! கதை எழுதியவர் அ.முத்துலிங்கம்.

நன்றி:திண்ணை.காம்
எனக்கு மகிழ்ச்சி அடைபடவில்லை. யார் இந்த முத்துலிங்கம் பல நாடுகளின் மக்கள் வாழ்வை, பண்பாட்டை எழுதுகிறாரே எப்படி? எழுத்தாளர்தான் என்றால் புத்தகங்கள் வழியே ஒரு தேசத்தின் முகத்தையும் அகத்தையும் எப்படி உள்வாங்கி எழுதியிருப்பார்? திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கமா? கேள்விகள் மண்டையை குடைந்தன.யாரிடம் கேட்பது தமிழ் நாட்டில் ? வாய்ப்புள்ளபோது தெரிந்து கொள்ளலாமென விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு முன் அங்கே இப்ப என்ன நேரம் ? வாசித்தேன், நேற்று “மகாராஜாவின் ரயில் வண்டி” வாசித்தேன் அடுத்து அவரது சிறுகதைகளின் தொகுப்பை வாசிக்கலாமேன்றிருக்கிறேன்.காலையில் தொடங்கினேன், சமர்ப்பணத்தில் ஆப்பிரிக்க காட்டில் இவரின் வேட்டைக்கார நண்பரால் சுட்டு வீழ்த்தப்பட்ட காகத்திற்கு நூலை காணிக்கையாகியுள்ளார்.மூடி வைத்துவிட்டேன். ரெண்டு வார்த்தையாவது அவரைப்பற்றி எழுதி விடவேண்டும் என்று எழுதுகிறேன்.
மயக்க மருந்தில்லாமல் அறுவை சிகிச்சை செய்வது போல இருக்கிறது பல இடங்கள். வறுமையும் இயலாமையும் ஏக்கமும் அவதியும் அபத்தமும் கதைகளில் விரவிகிடக்கின்றன.மெல்லிய அங்கதம் கதையெங்கிலும் வழிந்தோடுகிறது.வாழ்வில் நிகழ்வுகள் புனைவைக் காட்டிலும் நம்பகத்தன்மையற்றிருக்கும் விசித்திரத்தை உணர்த்துகிறார். வீட்டில் கோழிக்குழம்பு வைக்க கோழியின் கழுத்து திருகப்படுவதை என் அண்ணன் மகள் வேணி பார்த்துக்கொண்டிருப்பாள், அவள் நேரடி பார்க்கும் அதிகபட்ச வன்முறை அதுவாக இருக்கும்,அதோடு கோயில் திருவிழாக்களில் கழுத்து துண்டிக்கப்படும் ஆடுகள் எனக்கான அதிகபட்ச வன்முறை.பொழுது போக்காக சுடப்பட்ட காகம் ,பெயரற்ற காகம் ,ஊரற்ற காகம்,உபயோகமற்ற காகம் அவருணர்ந்த வன்முறையின் ஒரு குறியீடு. ஒட்டு மொத்த வாழ்வின் மீது மரணத்தின் விமர்சனம்,எண்ணிலடங்காமல் கொலையுண்ட மனித தொகுப்பை சுருக்கி ஒற்றை குறியீடாக்கிய எளிய உயிரின் மூச்சடங்குதல்.
பாத்துமாவின் ஆடு படித்த பிறகு மகராஜாவின் ரயில் வண்டி ஒரே ஆசிரியரின் வேறு முகமெனப் பட்டது.முத்துலிங்கத்தின் கதையில் வரும் ருஷ்ய பறவையும் பாத்துமாவின் ஆடும் நம்மோடு இந்த உலகை பகிர்ந்து கொள்ளும் எளிய ஜீவன்கள். பல்லாயிரம் மைல்கள் பறக்கும் பறவையும் கட்டிலில் கிடக்கும் உலகப்புகழ் பெற்ற மூக்கை விரும்பிச் சுவைக்கும் செம்பழுப்பு நிற ஆடும் முத்துலிங்கத்திற்கும்,பஷீருக்கும் ஒன்றுதான்.எனக்கு பஷீர் ஓர் எளிய வெள்ளாடு, முத்துலிங்கம் பல்லாயிரம் மைல்கள் துல்லியமாக பறக்கும் வலசை பறவை.
Leave a Reply