Archive for பகுக்கப்படாதது
November 14, 2009 at 11:36 am
· Filed under அன்னை, இளமை, கட்டுரை, தமிழ், பகுக்கப்படாதது, மழழை, வாழ்க்கை ·Tagged இளமை, கட்டுரை
ஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக
செல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.பார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.
கடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை(?) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்? நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க கோழி முட்டைகள் மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.
கோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையா?நான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால் போதும் அதை பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.
கோழிக் குஞ்சியை பார்த்திருக்கிறீர்களா? சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வாங்கிச் சென்றோம்…
Permalink
August 7, 2008 at 6:52 pm
· Filed under அன்னை, அன்பு, பகுக்கப்படாதது, பிரபஞ்சம், பொது, மழழை, வாழ்க்கை ·Tagged அன்பு, பிரபஞ்சம், வாழ்க்கை

கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…
Permalink
July 28, 2008 at 6:43 pm
· Filed under பகுக்கப்படாதது
இட்லிக்கு சாம்பார் என தலைப்பிட்டு எழுதினால் கூட ரெண்டு பேர் படிப்பார்கள் எனத்தோன்றுகிறது.அதுவும் ப்லோக் வந்துவிட்ட பிறகு நிறைய பேர் (நான் உட்பட) சும்மா கவிதை என்ற பெயரில் அத்தனை பேரையும் காய வைத்துவிட்டார்கள்.இன்னும் சிலர் முன்னேறி ரஜினி,கமல்,அர்த்த இராத்திரி கனவுகள் என எழுதி ஆள் திரட்டுகிறார்கள்.சில ஆத்மாக்கள் தீபிகா படுகோனே, டோனி என கிரிக்கெட், சினிமா ரெண்டையும் பாலன்ஸ் பண்ணி நெளிய வைக்கிறார்கள்.உண்மையில் இப்படி திசைகளே இல்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் எழுதுவது.
படித்ததை எழுதினால் வாசிப்பார்களா என தெரியாது அது திருட்டுதான்.சொந்த சமாச்சாரம் இல்லாதவர்கள் சிலர் இப்படி எங்கயாவது உருவி கொண்டு வந்து நம்மிடம் சேர்ப்பது உண்டு.சில இலக்கிய பத்திரிக்கைகள் அயல் நாட்டு எழுத்தாளர்களின் பேட்டியை போட்டு பக்கத்தை நிரப்புவது கூட அப்படித்தானா என சந்தேகம் வருவதுண்டு.துணைக் கண்டத்தில் இலக்கிய தரத்தில் எழுத்து இல்லையா?எழுத ஆள் இல்லையா?.புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் அதற்காக சினிமாக்காரர்கள் ஊட்டியில் எடுத்த ஷூட்டிங்கை நியூசிலாந்திலும், டிவிக்காரர்கள் மெகா சீரியலில் மலேசியாவில் இருக்கும் ஒண்ணு விட்ட தாத்தாவையும் காண்பிக்கிறார்கள்.நானும் சில மொழி பெயர்ப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
ரெண்டு நாளைக்கு முன்பு ஓட்டலுக்கு லஞ்ச் சாப்பிட போயிருந்தேன் ரெண்டு பகல் குடியர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.ஒருவன் போதை மிகுதியில் சாப்பிடும் தட்டின் ஓரத்தை ஓங்கி அழுத்தி விடவே சோறும் மோரும் சேர்ந்து ஒரு அபிஷேகம் நடந்து விட்டது.ஓட்டலில் எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.அவன் அதற்கு பிறகு சாப்பிடவில்லை.எழுந்து பாத்ரூமிற்கு போய் உடலை கழுவி விட்டு வெளியேறிவிட்டான்.எதையாவது மறக்கவோ,மறைக்கவோதான் குடிக்கு அடிமையான பலர் குடிக்கிறார்கள்.ஆனால் குடித்ததும் நினைவுக்கு வருவது அவர் மறக்க அல்லது மறைக்க நினைத்ததுதான்.குடித்ததும் ஆழ்மன உண்மைகள் வெளிவந்தது விடுகிறது.
இந்த recession-ல் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டால் என்னவாகும் என்று சாப்ட்வேர் கம்பனிகள் தலையில் துண்டை போட்டுகொண்டு சுற்றுகின்றன.மென்பொருள் வல்லுனர்களும் subprime market,housing bill-ஐ பற்றியெல்லாம் படித்து விட்டு தூக்கமில்லாமல் சுற்றுகிறார்கள்.சிலர் இதனால் இந்தியாவிற்கு லாபம் என்றும் நிறைய outsourcing இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.எது எப்படியோ நாலு பத்தி வந்துவிட்டது.மீண்டும் குண்டு எதுவும் வெடிக்காமல் இருந்தால் சந்திப்போம்.
Permalink
June 25, 2008 at 12:04 pm
· Filed under பகுக்கப்படாதது
Permalink
May 22, 2008 at 8:18 am
· Filed under பகுக்கப்படாதது
அம்மா
உன் அன்பால் நனைந்த நான்
இன்று கண்ணீரால் நனைகிறேன்
கன்று இழந்த தாய் பசுவுக்கு
வைக்கோல் பொம்மை அறுதல்
நீ இல்லாத எனக்கு
எது அறுதல் ?
மரத்தில் படர்ந்த கொடி போல
உன்னில் நான் இருந்தேன்
இப்போது என் செய்வேன் ?
உன் மிருதுவான கைகள்
உன் அதரவு தரும் அரவணைப்பு
உன் அன்பு மிகுந்த கோபம்
உன் வயதான சுருக்கங்கள்
உன் வெற்றிலை பாக்கு வாசனை
இவை அனைத்தும் இனி இல்லை
கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை
உன்னை பிரிந்தது மட்டும் அல்ல
உன் வயிற்றில் பிறாகாததும் தான்
இப்படிக்கு ,
நீ இல்லாத ஒரு அனாதை !
Permalink
March 10, 2008 at 11:18 pm
· Filed under பகுக்கப்படாதது ·Tagged காதல்
முன்னிரவில்
சிரிக்கிறது,
பின்னரவில்
அழுகிறது,
காலையில்
குளிர்கிறது,
மாலையில்
தகிக்கிறது,
தினசரி
நான்கு காட்சிகளாக,
எனக்கு
காதல் ???

Permalink
March 10, 2008 at 1:27 pm
· Filed under பகுக்கப்படாதது
ஊரெல்லாம்
கேட்டிருந்தது
என்
உளறல்,
நீ
எந்த
ஊரில் இருக்கிறாய்???

Permalink
March 5, 2008 at 11:45 pm
· Filed under பகுக்கப்படாதது
பொம்மைகளை
வீதியில் விரித்து
சிரித்தாள்
வயதான குறத்தி,
தெருவோரத்தில்
அழுகின்றன
அவள்
குழந்தைகள்…!

Permalink
March 4, 2008 at 5:09 pm
· Filed under பகுக்கப்படாதது
இலைகள்
உதிரலாம்,
கிளைகள்?
பூக்கள்
வாடலாம்
வேர்கள்?
சத்தங்கள்
ஓயலாம்,
இசை?
பிறக்காத
குழந்தைகளுக்கும்
பூமியில் இடமிருக்கிறது,
இசைக்காத
இன்னிசைக்கும்
காதுகள்
திறந்தேயிருக்கிறது.
மலராத
பூக்களுக்கும்,
எங்கோ
ஒரு செடி
காத்திருக்கிறது.
இன்னும்
இருக்கிறது
வாழ்க்கை…
அதோ
பெய்யாத
மழைக்கு
குடையோடு
ஒரு குட்டி நிலா!

Permalink
February 29, 2008 at 4:36 pm
· Filed under பகுக்கப்படாதது ·Tagged பேய்கள்
உங்கள் கனவுகளில் வருகின்ற பேய்கள் என்ன செய்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? பேய்களுக்கு மனிதர்கள் அளவுக்கு முகபாவனைகள் தெரியாதோ என்னவோ? எப்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு நம்மை பயமுறுத்தும்,ஒருவேளை ஒரே மாதிரி இருப்பதால்தான் பயங்கரமாக தெரிகிறதோ?.நானும் அப்படித்தான் ஒரு வித்தியாசமான பேய்க்கனவில் பயந்து அலறி விட்டேன்.என் அப்பா எனக்கு திருநீறு பூசிய பிறகு,சிறிது தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.
யாருமற்ற, பனை மரங்கள் நிறைந்த ஒரு காட்டுக்குள் நான் மட்டும் ஓடுகிறேன்,எதிரே இருக்கும் பெரிய குளத்தில் அடக்கடவுளே!,கருப்பு நிற அன்னங்கள் என் மூச்சே நின்று விடும் போல இருந்தது.பின்னே விரட்டுவது யார் எனத் தெரியாமல், திரும்பி பார்க்கும் தைரியமும் இல்லாமல், மூச்சிரைக்க ஓடினேன். ஆம், என்னை யாருமே விரட்டவில்லை நானேதான் ஓடி கொண்டிருக்கிறேன் ஆளரவமற்ற அந்த ஒத்தை வீட்டை நோக்கி என நினைத்த மாத்திரத்தில்..கிட்ட தட்ட உயிர் போய்விட்டது.
ஒருமுறையாவது என் அப்பாவை கூக்குரலிட்டு அழைத்து விடவேண்டுமென்று துடித்தேன்.நாக்கு வறண்டு விட்டிருந்தது.கண்களை கட்டிக்கொண்டு வந்தது.கால்கள் பின்னிக்கொண்டன. கடைசி முறையாக நான் உயிரை பிடித்து கத்தியபோது என்னை தவிர வீட்டில் எல்லோரும் எழுந்திருந்தனர்.
தினமும் என் கனவில் பேய்கள் வந்தவாறே இருந்தன.உடைமரங்கள் நிறைந்த காட்டில், மரங்களை விட சற்று உயரத்தில் பறந்து கொண்டிருப்பேன்.வழக்கம்போல பேய்கள் என்னை துரத்தும்.பிறகு சற்று நேரத்தில் ஊரே பிரளயம் வந்தது போல் மழை வெள்ளத்தில் மிதக்கும்.தண்ணீரில் பல வண்ணங்களில் சேலைகள் மிதந்து செல்லும்,ஒவ்வொன்றும் ஒரு உயிருள்ள பாம்பை போல நெளிந்து நெளிந்து செல்லும்.ஒரு வெள்ளை நிற குதிரையில் நான் ஏறி காற்றை விட வேகமாக செல்ல… பொழுது விடிந்திருக்கும்.வெளிச்சத்தில் பேய்கள் வராது என்பது எனது அன்றைய நம்பிக்கை..
பேய்கள் உலாவும்…

Permalink
Older Posts »