நினைவுகளாய் நீள்பவன்…

August 10, 2008

நண்பனே..
என் வசந்த காலங்களின்
சிறகாக இருந்தவனே..
உன்னை நினைக்காத
நாளில்லை..
மயிலிறகு போல
மனதை வருடுகிறது
உன்னை நானும்
என்னை நீயும்
நிரப்பிக்கொண்ட நிமிடங்கள்..
அந்த நாட்களில்
வீடு மட்டுமே
நமக்கு வேறாக இருந்தது…
சிறுசிறு சண்டைகள் கூட
இல்லாதது
நமது நட்பு..
நான் வாசித்த
புத்தகங்களின்
அட்டைப் படம் மட்டுமே
பார்த்தவன் நீ..
நீ
சுவாசித்த
திரைப்படங்களின்
பாடல்களை கூட
கேட்காதவன் நான்..
நாம்
பேசிக்கரைந்த இரவுகள்
எதற்கும் நீளமில்லை..
நீ
சேகரித்த
கிளிஞ்சல்களும்,
கூழாங் கற்களும்
என் நினைவோடையில்
நிறைந்து கிடக்கிறது…
எந்த விடுமுறையும்
நம்மிடம் விடுபட்டதில்லை..
எல்லா தேநீர் கடைகளிலும்
தெரிந்தே இருந்தது
நமது நட்பின் சுவை…
எந்த தையலகமும்
பண்டிகை காலங்களில்
நம்மை சேர்த்தே தைத்தது…
இன்னும் எழுதலாம்..
நினைவுகளை மட்டுமே
பரிசாக தந்துவிட்டுபோன
நிலாக் காலங்களை…