பலமுறை யோசித்திருக்கிறேன் ஏன் உறவுகள் உலகில் இத்தனை சிக்கலாகிவிடுகிறது? என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும்?என்னவாக இருக்க முடியும்? அது அவர்களுக்கே வெளிச்சம்.
அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மனிதன் அடிப்படையிலேயே குடும்ப உணர்வுள்ளவன்.அதனால்தான் எல்லா சமயங்களும் ஒரு கட்டத்தில் குடும்ப உறவை சற்று கடுமையாக சாடியிருக்கின்றன.அரசியல் தலைவர்கள் அதனாலேயே உறவுகளை சொல்லி தொண்டர்களை அழைக்கிறார்கள்.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குடும்பம் என அழைப்பதும் இது போன்றதொரு காரணத்தினால்தான்.மனிதன் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம் குடும்பத்தை,உறவுகளை,நட்பை விட முடியாது.பிறந்த குழந்தைக்கு சொல்லாமலேயே தெரிகிற உறவு தாய் மட்டுமே.தாயை துன்புறுத்துகிற தந்தைகளை பார்க்கிற குழந்தைகள் எத்தனை கொடுமையானதொரு வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
அடுத்தவர்களின் காலுக்கு செருப்பாக இருந்துவிட்டு மனைவியை ஏறி மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்ன பிரயோஜனம்?.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில் புலியாகிறவர்களை என்ன செய்வது?சர்க்கஸில் சேர்த்துவிட வேண்டியதுதான்!.நான் இப்படித்தான் என்னால் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியாது என சொல்பவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்?.அண்மையில் ஒரு மெகா சீரியலில்
இப்படி காட்டினார்கள் அந்த காவலதிகாரி பல தருணங்களில் ஒரு “Hard Negotiator” ஆக இருந்து நடக்கவிருந்த குற்றங்களை நிறுத்தியிருக்கிறார் ஆனால் தன் மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாதவர் என்ற அவரின் மனைவியின் குற்றச் சாட்டினால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள்.
எப்படி இவருடன் குடும்பம் நடத்துறதுன்னே தெரியலப்பா என சொல்லி அழும் சாமானியர்கள் எத்தனை பேர்?பணம் ஒரு பிரச்சனையே இல்லை ,நிம்மதியா ஒரு நாள்கூட தூங்கினதில்ல.இது போன்று நம்மை பலவாறாக எண்ண வைக்கும் நிகழ்வுகளை பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.வயதானவர்களோ குழந்தைகளோ இளைஞர்களோ யாராக இருந்தாலும் எல்லோருக்கும் மனம் ஒன்றுதான் உணர்வுகள் ஒன்றுதான்.எத்தனை நடந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது,நீ அன்றைக்கு இதைத்தான் செய்தாய் இன்று என் முறை,உனக்கும் வலின்னா என்னன்னு தெரியணும்,மனுஷன் விடிஞ்சு போனா அடைஞ்சுவாறான் அவனிடம் ஆசையா ரெண்டு வார்த்த பேசாம நீ இப்படி ஈயத்த காய்ச்சி ஊத்துற மாதிரி பேசிறியே,நான் மட்டும் என்ன குத்துக்கல் மாதிரி சும்மாவா உக்காந்திட்டு இருக்கேன் வீடு தூக்கணும்,தெளிக்கணும்,ஓம் பிள்ளைகளுக்கு பீயள்ளிபோடனும்,கழுவி விடணும்,குளுப்பாட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்,போகைலே கையில மத்தியான சாப்பாடு கெட்டி கொடுக்கணும்..நீங்க கட்டின துணிமணியெல்லாம் தொவச்சு போடணும்,ராத்திரியில நாக்குக்கு ருசியா சாப்பிடறதுக்கு காய்கனியெல்லாம் வாங்கிட்டு வரணும்,மஞ்ச மசாலா சாமான் இப்படி நானும் நாயா ஓடியாடி வேல பாத்தாலும் ராத்திரி வந்தா ஒரே புடுங்கலு… சோசலிசமாக இருவரும் இப்படி திட்டிக்கொள்வதும் நடக்கும்.
நாம் இன்றும் இது போன்ற உரையாடல்களை கிராமங்களிலும் சேரிகளிலும் கேட்கலாம்,வசதியான குடும்பங்களில் பேசுவதெல்லாம் நன்றாகவே இருக்கும்.வெளியில் காட்ட மாட்டார்கள்.கேட்க முடியாது.அவர்கள் படித்தவர்கள் பிடிக்கவில்லை என்றால் பேச்சை குறைத்து கொண்டு செயல்களில் வஞ்சனை செய்வார்கள்.சாப்பாடை எடுத்துவைத்துவிட்டு அமைதியாக போய்விடுவார்கள்.தண்ணி வைக்கமாட்டார்கள்.இல்லை உப்பு போடமாட்டார்கள்.இப்படியாக இருக்கும்.பிறகு பேசினால் ஒன்னு ரெண்டு வார்த்தைகளில் ஜென்மத்திற்கும் பேசமுடியாத மாதிரி விஷ பேச்சாக இருக்கும்.
சரி இப்ப இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன?.உறவுகளை பொறுத்தவரையில் உடைத்தெறிந்து பேசுவது எளிது.ஆனால் என்ன செய்தாவது உறவுடன் பேச வேண்டும் பழக வேண்டும் நம்மை புரிய வைக்க வேண்டும்.இதுதான் விதி.கடவுளையோ,தலை எழுத்தையோ சொல்லுவது அறிவுடமையல்ல.நான் ஆம்பள அப்படித்தான் இருப்பேன் என வீராப்பு சொல்வது நல்லதல்ல.பெண்கள் பேசுகிற அளவிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.”அவள் அப்படி பேசிவிட்டாள் அதானால” என ஆண்கள் சொல்வதோ,”இவர் செஞ்ச காரியம் என்னன்னு தெரியுமா உனக்கு” என பெண்களோ பேசுவதை நிறுத்திவிட்டு தங்களையும்,தன் துணையையும் புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் ஒரு தொடர்கதை.
Posted by கண்ணன் பெருமாள் 
Posted by கண்ணன் பெருமாள் 
Posted by கண்ணன் பெருமாள் 