யாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை…

September 11, 2008

காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறேன்.யாருக்காக?எதற்காக?எப்படி இது சாத்தியம்?.இப்படி அழுவதால் என்ன நிகழ்ந்துவிடும்?.என்  அழுகையின் ஊற்றுக்கண்ணை தேடி அலைகிறேன்.வீதிகளில் நள்ளிரவில் நடந்தது கொண்டிருக்கும்போது எனக்கு வெளியில் நிசப்தம்,உள்ளே ஓயாத கடலலை போல அந்த அழுகை.எனக்கு விவரம் தெரியாத பள்ளி பருவத்தில் அழுதிருக்கிறேன்.ஆசிரியர் எத்தனைதான் அடித்து துவைத்தாலும் அழவே,அழாதவர்களின்  மன அழுத்தத்தை கண்டு வியந்தாலும் அவர்களின் உணர்வுகளை ஒருபொழுதும் உள்வாங்கிக் கொண்டதில்லை.செய்த தவறுக்காக அழுகிறவர்கள்.தவறை முழுமையாக உணர்ந்த பிறகு அழுவதற்கான காரணங்களை தொலைத்துவிட்டவர்கள்.ஆண்கள் அழக்கூடாது என்ற கட்டுமானத்தில் தலைசாய்ந்தவர்கள்.அழுவது,புரிந்து கொள்வதாலா?இல்லை புரிய முடியாத காரணத்தினாலா?இயலாமை கூட அழ வைக்கும் ஒரு காரணிதான்.

தாங்க முடியாத உடல்வலியில் கூட அழமுடியாதவர்களை பார்த்திருக்கிறேன்.சமூகத்தின் மிகக்கடுமையான  கட்டமைப்புகளில் ஒன்று ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்பதும்.ஏதாவது ஒரு சிறுவன் அழத்தொடங்கினால் அவன் காதுகளில் ஆறுதல் எதுவும் கேட்கும் முன் “டேய்,என்ன எப்ப பாத்தாலும் பொட்டபிள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க?” என்ற திணிப்பு புகுந்துவிடும்.மிகச்சரியாக என் பதின் வயதுகளில் நான் அழுவதை நிறுத்திவிட்டிருந்தேன்.
வலி,இயலாமை, பயம்,மரணம்,இகழ்ச்சி, விமர்சனம்,ஏமாற்றம்,துரோகம்,பிரிவு,ஆனந்தம்..
இப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு என் மனம் நெகிழாத நாட்கள்.எதையுமே செய்வதால் அதாவது வினையாற்றுவதன் மூலம் மட்டுமே கடக்க முடியும்.உணர்ச்சிவயப்படுவது ஒன்றிற்கும் உதவாது என்று முடிவெடுத்திருந்த நாட்கள்.அப்பொழுது படித்த ஈ.எம்.பார்ஸ்டேரின் கட்டுரை  புத்தகம் ஓன்று நினைவிலிருக்கிறது.நடந்த விபத்திற்காக அழுவது,பயப்படுவது இதை தவிர்த்துவிட்டு காயமடைந்தவர்களுக்கு உதவுவது,ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டவனோடு சேர்ந்து அழுவதைவிட அவனுக்கு கைகொடுத்து தூக்கி விடுவது முக்கியமானதாகவே எனக்குப்பட்டது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி அழுத நாட்கள் இருந்தது.கையால் எண்ணிவிட முடியும்.நான் நேசித்தவர்கள் வேறு யாருமல்ல நண்பர்கள்தான் என் நட்பை அவமானப் படுத்திய நாட்களில் என்னை எவராலும் சமாதானப்படுத்த முடியவில்லை,யாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை.என்னை திரும்ப திரும்ப அழ வைத்த ஒரே உறவு நட்பு மட்டுமே.என் அப்பா அம்மா மற்றும் உடன் பிறப்புகள் என்னை(அழுகையை) புரிந்து கொண்டவர்கள்.நான் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருந்த அழுகை மீண்டும் என் கண்களில் துளிர்த்துவிட்டது.ஆனால் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?.இந்த அழுகையில் கண்ணீர் இல்லை,ஒரு புரிதலை தொடர்ந்த சிறிய/பெரிய வலி.கண்களுக்கு வராத உணர்வுகளை காண்பதால் ஏற்படும் கசிவு.இதை அத்தனை எளிதில் நிறுத்திவிடும் சாத்தியமில்லை.அப்படியொரு எண்ணம் எனக்கில்லை.


தொடுவானம் தொலைத்தல்…

September 8, 2008

எதிர்பார்ப்புகள்
தீர்ந்த மழை நாளில்
நீயும்,நானும்…

கணுக்காலளவு
தண்ணீரில்
கனவுகள் கப்பலாக..

காகிதம்
தீர்ந்த பிறகு
கண்களில்..

ஓசைப்படாமல்
ஒரு காற்று
உன் கூந்தல்
கலைத்தது…

உன்
அழகு சுழலில்
நானும்,காற்றும்..

நீயோ
தூரம் சென்ற
கப்பல்களோடு…

நீ
திரும்பி
பேச விழைந்த
கணத்தில்..

உன் கண்கள்,
என் கண்கள்,
சிறு
புன்னகை மின்னல்..

நீ
தேடிக்கண்ட
சொற்களில்
ஒளிந்திருந்தது
உனது பிரியம்..

தொலைந்திருந்தது
தொடுவானம்…


இலையுதிர்காலம்…

September 8, 2008

சொல்லிய வார்த்தைகளில்
சூல்கொண்ட காதல்,
காற்றிலும், கண்களிலும் கரைகிறது!

நெருப்புக்கான சூட்சமங்களை
நெருங்காமலே சொன்னவள்;
நிலவென நினைத்தவேளையில்
நிறங்கள் நீர்த்துப்போன
இருளோடு தொலைந்துவிட்டாள்!

அவளை  புரிந்துகொள்வதற்கான
என் மௌனங்களில்
அவள்  எழுதி வைத்ததெல்லாம்
பூவிற்கான மென்மையையும்,
புரிபடாத புன்னகை புதிர்களும்தான்!

ஒருபோதும் நினைத்ததில்லை,
கற்பக விருட்சங்களுக்கும்
இலையுதிர்காலம் இருக்குமென்று!