திருட வந்திருக்கிறேன்…

கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…

Leave a Comment