அமைதியாக ஒரு யாசகன்…

நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக
பெறுகிறேன்!

இது
என் குலத்தொழில்
இல்லை;
நான்
கர்ண பரம்பரை;

என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!

அவளிடம்
கேட்காமல் கிடைத்தது,
இன்று
கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு
முகம் கிடையாது;
முகமூடிதான்
அவனுக்கும் அடையாளம்;

எனக்கு
இரண்டுமே கிடையாது;

அடையாளமோ,
அரிதாரமோ
அவசியமற்றது;

எவர் கனவுகளிலும்
நான்
வருவதில்லை;
எனக்கு
கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!

என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும்
வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு
நான்
மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை
கேட்பதில்லை!

எனக்காக,
எனக்கு
அழத்தெரியாது;
என்
பொம்மைகளுக்காக
அழுதிருக்கிறேன்.

முளைவிடும்
விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது
என் தவம்;

எனக்கும்
வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர்
தருகிறது;

என் பச்சையங்கள்
பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று
சுவாசமும் தருகிறது.

இந்த உலகம்
இரண்டாவது தாய்;
என்னை
பெரும் யாசகனாக்கியது.

என்னிடம்
புன்னகைப்பவர்களுக்கு
நான்
பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின்
பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது
தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே
புன்னகைத்திருக்க கூடும்…

Leave a Comment