காதல் சொல்லாத வார்த்தைகள்..
நீ சொல்லாத வார்த்தைகளையும்
சேர்த்துதான் பொருள் கொண்டேன்,
கண்ணீரை ஊற்றியா
காதலை எழுதினாய்?
வாசிக்கும்போது இப்படி உவர்க்கிறது!

கண்மணி,
கனவுகளை பகிரச்சொன்னாய்,
பாதிக்கனவில் இடைவேளை விட்டு
மீதிக்கனவை அனுப்பிவைத்தேனே
தேடிவந்ததா அந்த தென்றல்
கனவு மூட்டைகளோடு!

மலர்க்கொடி,
ஏனிப்படி ஒளித்துவிட்டாய்?
இதயத்தில் வேர்விட்ட காதலை
இதழ்களில் மலர விட்டிருந்தால்
என் இரவுகளாவது தப்பியிருக்குமே!

தேன்மொழி,
காற்றோடு ஏனடி காதலை
பேசித் திரிகிறாய்
அது பித்து பிடித்து
வேறு திசைகளில் வீச மறுக்கிறது!

என் நுண்ணுனர்வுகளை
எங்கிருந்து நுகர கற்றாய்?
நான் நாளை நினைக்கவிருப்பதை
நீ நேற்றே சொல்லிவிட்டாயாமே?

காற்று புகாத இடத்திலும்
காதல் புகுந்து விடும்
காதல் மட்டும் புகுந்து விட்டால்
காற்று கூட நொந்து விடும்!

நான்
தூக்கம் தொலைத்தது
தெரிந்தும்
அவள் கனவுலகில் மிதக்கிறாள்,
நீதி தேவதையே
நீயும் என் காதல் தேவதைக்கு
உடந்தையா?.

உனது தூக்கத்தையும்
கெடுத்துவிட்டேன்,
நான்
என் கவிதைகளைத்தானே
வாசிக்கச் சொன்னேன்,
நீ
ஏன்
என் காதலையும்
சேர்த்து வாசித்தாய்?
