உலகத்தின் உலகம்!
நீ
உணவு பகிர்ந்தாய்,
உடல் சுமந்தாய்,
உதிரம் ஊட்டினாய்,
உணர்வு ஏற்றினாய்,
உயிரும் தந்தாய்!
என் தாய் நீ
எதையும் தருவாய்!
பெற்ற பொழுதிலும்
மற்ற பொழுதிலும்
தன்மகன் எனக் கேட்டாலே
பெரிதுவந்த தாய் நீ!
வண்ணங்கள் காட்டினாய்,
வடிவங்கள் காட்டினாய்,
வார்த்தைகள் சொன்னாய்,
எண்ணங்கள் சொன்னாய்,
உன் இதழசைந்த பிறகே
என் உலகம் இசைத்தது!
கண்ணீரோ,காற்றோ
உன்னை தாண்டித்தான்
என்னை சேர்ந்தது!
எனது பசிக்கு
உன்னையே உணவாக
உதிரமாக தந்தவள் நீ!
என் திசைகளை
தீர்மானித்த
கலங்கரை விளக்கம் நீ!
என் அசைவுகளை
அங்குலம் அங்குலமாக
அளந்து இரசித்தவள் நீ!
நான் தவழ்ந்த நாட்களில்
உனக்கு
தாங்க முடியாத சந்தோசம்!
நான் நடந்த நாட்களோ
என்ன சொல்வேன்
உலகை வெல்ல கிளம்பிவிட்டான்
என் தங்க மகன்
என நீ தலைகால்
புரியாத பூரிப்பில் பூத்திருந்தாய்!
உயிருள்ளவரை உனக்கு
நான்தான் உலகம்!
நீதான்
உலகத்தின் உலகம்!
