காதலுக்கு ஒரே வழி!!!

May 31, 2008

உனது
அடக்கமான அழகா,
அழகான அடக்கமா
எது
என்னை இன்றும்
எழுத வைப்பது?

நீ
மாற மாட்டாயா?
நாள்காட்டியில்
நீ
தேதி பார்ப்பதில்லையா?

நகர்ந்து விட்ட
நாட்கள்
பேசிக்கொள்ளாத
வருடங்களாய்
நீண்டு விட்டதில்
உனக்கு உடன்பாடுதானா?

பெண்ணின்
சிறு தவறுகளை
மன்னிக்காத ஆணும்,
ஆணின் அன்பை
புரிந்த கொள்ளாத
பெண்ணுமாய்
நாம் ஆகிவிட்டோமா?

ஆதாம் ஏவாள்
காலத்தில் இருந்து
நாம்
வளரவில்லையா?
ஒவ்வொரு காதலும்
தவறுகளின்
தொடக்கமா?

அறிவின் வீதிகளில்
ஆதரவின்றி
அலைந்தேன்,
தென்றலாய் நீ
தோள் தொட்டாய்!

அன்பின் முகவரி
எது என்று கேட்டேன்
நீ சிரித்தாய்,
நான் கண்டுகொண்டேன்!

வா நமது
உலகம் காத்திருக்கிறது,

இந்த இரவாவது
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
மிச்ச மீதியின்றி
முழுதாய் பகிர்ந்துகொள்வோம்!

கேள்விகளால்
நம்மை இனி
கட்டிப்போட
அறிவுக்கு அனுமதி
கிடையாது,
அன்பின் உலகில்
நாம்
மறுபடியும் குழந்தைகள்!

நமது மௌனம்
ஒலிகளை
கடந்துவிடவில்லை,
வா கடலுக்கு
போட்டியாக
காதலை பேசிடலாம்!

விண்மீன்கள்
மட்டும்தான்
இரவுவானில்
காதலில் திளைத்திருக்கலாமா?
வா கண்மணி
நாமிருக்கிறோம்!

நமக்கு
வழி எதுவும் இல்லை,
நாம்தான்
காதலுக்கு ஒரே வழி!


காதல் பட்ஜெட் கவிதைகள்!!!

May 30, 2008

போடி,
உம்மணா மூஞ்சி!
உனக்கு மட்டும்
ஏழு நாளும்
திங்கட்கிழமையா?
முகத்தில்
எள்ளும்,கொள்ளும்
வெடிக்கிறது!

காதலுக்கு கண்ணில்லை,
இதழ்களுமா இல்லை?
நீ
என் தேவதைதான்
அதற்காக
சிலையாக இருந்தால்
எப்படி?

ஆண்களிடம்தான்
புன்னகைக்க சொல்லி
புகைப்படம்
எடுப்பார்கள்,
இன்று
மலர்களிடமும்
மன்றாட வேண்டியிருக்கிறது!

தமிழே நீ
சித்திரையில் பிறந்தவளா?
சிடுசிடுவென இருக்கிறாய்!
அந்த
மார்கழி திங்கள்
மதிமுகம் எங்கே?

கொஞ்சமாவது சிரிடீ
காதல் பட்ஜெட்டில்
சிரிப்புக்கு வரியை
அதிகரித்துவிட்டு,
முத்தங்களுக்கு
தளர்த்திவிடலாம்!

போர்வைக்குள்ளே
சிரித்த
பொழுதுகள் போதும்,
இரவுகள் தாண்டியும்
நம்
கனவுகள் நீள
நீ கொஞ்சம் சிரி!


காதலை சொல்லும் கவிதைகள்!!!

May 28, 2008

நாளையும்
நீ
சிரித்து விட்டு
சும்மா இருந்துவிடுவாய்,
நானும்
ஏதோ இருப்பேன்!

உன்
விழிகளில்
ஏந்தியிருப்பது
விடையா,வினாவா?

புதிர் போடும்
பூக்களுக்கு
தடை போட
ஆளில்லையா?

இது
என்ன வெட்கம்?
ஊரெல்லாம்
சொல்லும்போது
தரை பார்த்தா
வாசித்தாய் காதலை?

நீ வெட்கத்தை
விடுவதாயில்லை,
நானும் உன்னை
விடுவதாயில்லை!

கெஞ்சி
கேட்டாகிவிட்டது
காதலை,
இனி
கொஞ்சம் கொஞ்சி
கேட்டால் என்ன?

காதலை,
ஒரு வரியில் சொல்லலாமே,
நீயேன்
இரண்டு வரியில்
சிரிக்கிறாய்?

காதலிப்பது
எப்படியென்று
நீயே கற்றுக் கொடு,
முத்த பாடங்களை
மட்டும் நானே
சொல்லித்தருகிறேன்!


காதலில் நனைந்த கவிதைகள்!!!

May 26, 2008

நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!

அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப?

என்னிடமிருந்து எனக்கா?
உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா?

என் இதயத்தின்
எல்லா தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்,
காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்?

குத்துவிளக்கில் ஏன்
தீபமேற்றுகிறாய்?
இதய விளக்கில்
காதல்
திரியாக திரிகிறது,
உனக்கு தெரிகிறதா?

உன் பயணங்களுக்கு
என்னிடம்
விமானமில்லை,
ஆனால் உன்
சிறகுகளுக்கான
வானம்
என்னிடம் இருக்கிறது!

உன் விரல்களுக்கு
என்னிடம்
மோதிரமில்லை,
ஆனால் உன்
விரலிடுக்குகளுக்கான
விரல்கள்
என்னிடம்தான் இருக்கின்றன!

காதலில் நனைந்த
கவிதைகள்
எத்தனை முறை
சிலிர்த்தாலும்,
நடுங்கிக்கொண்டுதான்
இருக்கிறது
அணைத்துக்கொள்ள அவளில்லாமல்!


கவிதையின் காதல் புத்தகம்!!!

May 22, 2008

கவிதை ஒன்று
காதலுக்கு
புத்தகம் எழுதுவது
என்றிலிருந்து?

அந்த கண்ணீர்
பக்கங்களை
கிழித்து விடு,
மொத்த புத்தகமும்
நனைகிறது பார்!

சித்திரையில்
சிரிக்கக்கூடாதென
உனக்கு
யார் சொன்னது?
இங்கு 45 டிகிரி!

வெட்கத்தை
வேற்று கிரகத்துக்கு
அனுப்பிவிட்டு,
காதலை
காற்று மண்டலமெங்கும்
நிரப்பிவிட்டயா?
கதவு தட்டி
கவிதை சொல்கிறது!

நன்றி தமிழே
உன் சிறகசைவில்தான்
என் பிரபஞ்சம்
விரிகிறது!

உதிர்ந்துபோன
ஒவ்வொரு இறகிலும்
ஒளிந்திருந்த
விண்மீன்களை சேகரித்து
வைத்திருக்கிறேன்
நமக்கான ஞாபகங்களாய்!


பிரிவு

May 22, 2008

அம்மா

உன் அன்பால் நனைந்த நான்

இன்று கண்ணீரால்  நனைகிறேன்

 

கன்று  இழந்த தாய் பசுவுக்கு

வைக்கோல் பொம்மை அறுதல்

நீ இல்லாத எனக்கு

எது அறுதல் ?

 

மரத்தில் படர்ந்த கொடி போல 

உன்னில் நான் இருந்தேன்

இப்போது என் செய்வேன் ?

 

 

உன் மிருதுவான கைகள்

உன் அதரவு தரும் அரவணைப்பு

உன் அன்பு மிகுந்த கோபம்

உன் வயதான சுருக்கங்கள்

உன் வெற்றிலை பாக்கு வாசனை

இவை அனைத்தும் இனி இல்லை

 

 

கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை

உன்னை பிரிந்தது மட்டும் அல்ல

உன் வயிற்றில் பிறாகாததும் தான்

 

இப்படிக்கு ,

நீ இல்லாத ஒரு அனாதை !

 

  

 

 

 

 

 


காதல் தமிழ்!

May 19, 2008

வாழ்வின் சிறந்த
தருணங்கள்
மௌனமாகத்தான்
கரைகிறது!

வார்த்தைகளின்
இடைவெளியை
விழிகளால்
தொடருகிறாய்!

என் ஒட்டுமொத்த
கவிதைகளும்
துளி நீரில்
தத்தளிக்கிறது!

இதயத்தில் பறக்கும்
காதல் விமானம்
இதழ்களில் இறங்க
மறுக்கிறது!

காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?

உன்
கோபம்-ஆயுத எழுத்து
அதிகம் வேண்டாம்!
உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!

கண்ணே
கண்ணீர் கடலில்
காதல் அலைகள்
வேண்டாம்!

இருண்ட பிறகும்
வெள்ளி பூக்க
இறுமாந்திருக்கும்
கருநீல வானமாய்
நம் காதலிருக்கட்டும்!


நான் விரும்பும் பேய்கள்

May 18, 2008

நான் விரும்பிய பேய்களை என்னால் தொடர முடியவில்லை.இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தது ஏன்? சிலர்(உண்மையில் ஒருத்தர்தான் ;) ) என்னிடம் கேட்டனர்.சுவாரஸ்யம்தான் காரணம்.காதலைப்போல பேய்களும் சுவாரஸ்யம் நிறைந்தவை.காலையிலிருந்து இரவு வரை ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகளை  படித்து கொண்டிருந்தால் வெறுத்து போய்விடும்.கூலி வேலை செய்கிறவர்களுக்கு  ஒரு கிலோ வத்தல் என்ன விலை என தெரிந்திருக்கிறது சாப்ட்வேர் வேலை பார்ப்பவனுக்கு காலையில் குடித்தது காபியா?டீயா? எனக் கேட்டால் தெரியவில்லை.மறதி.தன்னை மறந்திருப்பவனுக்கு உலக நடப்பு எதற்கு? உப்பு,புளி விலையேற்றத்திற்கு நமக்கென்ன?பர்மாவில் புயல்,சீனாவில் நிலநடுக்கம் எல்லாமே நடந்து கொண்டே இருக்கிறது.இந்த செய்திகள் மனதை குடைந்தெடுத்தாலும் வாழ்க்கையை நாம் தொடர சற்று சிரித்திருந்தால் மட்டுமே முடியும்.சிலருக்கு  நகைச்சுவை உணர்வு சற்று குறைவு ஆனால் நன்றாக சிரிப்பார்கள்.

உண்மையை சொல்ல போனால் பேய்கள் இன்றைய காலக்கட்டத்தில்  மதிப்பிழந்து விட்டன.பேய்களை வைத்து திகில் படமெடுத்த காலமெல்லாம் போய் இன்று பேய் கார்டூன்கள்,காமெடி படங்கள்,சிரியல்கள் என பேய்களின் தரம்(பயம்) குறைந்துவிட்டன.ஆனாலும் கிராமங்களில் பேய்கள் வலம் வந்து கொண்டிருப்பது உண்மை.அங்கும் நாம் இலவச டிவி கொடுத்தபிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்,சித்தி,அம்மா,அப்பா,கொழுந்தன் என நாடகம் பார்க்க தொடங்கி விட்டால்  பேய்களை மறந்து விடுவார்கள்.கலாச்சாரம் மாறுவதற்கு டிவி ஒரு நல்ல காரணி.தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் சாதாரண மக்களின் மனதில் பிராண்ட் மோகத்தை  ஏற்படுத்தி விட்டன.முன்னெல்லாம் வீடு வீடாக பெனாரஸ் பட்டு,சூரத் சில்க் என சொல்லிக்கொண்டு சிலர் கிராமங்களில் வந்து விற்பனை செய்வார்கள்.இப்போ செருப்பு எடுக்க கூட டவுணுக்கு போகிறார்கள்.டிவியில் விளம்பரம் செய்யாத பொருள் தரம் குறைந்த பொருள்.விளம்பரங்கள்  நமக்கு உண்மையை சொல்வதில்லை.ஒருபக்க நியாயங்களையே சொல்கிறது.கேளிக்கைதான் இன்றைய வாழ்க்கையின் பிரதானம்.யாருக்குமே பொறுமை இல்லை.இதில் என்ன பேய்கள் பற்றிய  சுவாரஸ்யம் வேண்டியிருக்கிறது?.இருக்கிறது சாதாரணமாக நாம் ஒரு பஸ்ஸில் போகும்போதோ அலுவலகத்தில் வேலை செய்யும்போதோ பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

ஆனால் தனியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடந்து பாருங்கள்.எதிரில் வரும் நாய் கூட ஜென்ம நட்சத்திரத்தில் வந்த கருப்பு நாய் மாதிரி தெரியும்.தனியாக தூங்கும்போது திடீரென நடுநிசியில் எழுந்துவிட்டால் ஜன்னலுக்கு வெளியே கத்தும் பூனையை எட்டிப்பார்க்கும் தைரியம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் .அவர்களுடைய வாழ்வில் பேய்களை காட்டிலும் சுவாரஸ்யம் அதிகமான விஷயங்கள் நடந்திருக்கக்கூடும்.நள்ளிரவில் ஆற்றின் கரையோரத்தில் தனியாக அமர்ந்து நீங்கள் எதையாவது பயமின்றி யோசிக்கக்கூடுமென்றால் உங்களுக்கு சற்று வயது அதிகம், இல்லை வயதை விட நீங்கள் வாழ்வில் அனுபவித்தது அதிகம்.பேய்கள் நம் இளமையை நினைவு படுத்துபவை நமது அறியாமையை,புரிதலின்மையை சொல்பவை.வயது ஆக ஆக நம்மால் பேய்களை பார்க்கவோ கேட்கவோ முடிவதில்லை.எல்லோருக்குமே இப்படி நிகழ்ந்துவிடுகிறது.நம் கற்பனை உலகத்தை எந்தவொரு இரக்கமுமின்றி நாம் எரித்துவிடுகிறோம்.இல்லை எரித்து விடுகிறார்கள்.என்னால் இன்று பேய்களை தேடி அலைய முடியவில்லை.உங்களில் பலருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம்.ஆனால் உண்மையில் நீங்கள் உங்களை மதிப்பவராக இருந்தால் ஒரு முறையாவது   ஏதாவது ஒரு பேயின் கதையை காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்.நீங்கள் கேட்காவிட்டாலும் பேயின் இருப்பை உணர முயலுங்கள் அதுகூட ஆச்சரியாமான ஒன்றுதான்.ஒரு குழந்தையின் உலகம் உங்கள் கண்களில் விரியும்.எனக்கு பேய்களை துஷ்டமாக நினைக்க முடியாது அவை முழுக்க முழுக்க உங்கள் கற்பனையின் குழந்தைகள்.

நீங்கள் பேய்கள் இல்லையென்று சொன்னால்  நான் ஒப்புக்கொள்ள தயங்க மாட்டேன் ஏனெனில் உங்களுக்கு கற்பனைத்திறன் இல்லை.அல்லது அது போன்ற ஒரு கற்பனை உங்களுக்கு பிடிக்கவில்லை அவ்வளவே.ஆனால் ஒரு போதும் உங்கள் குழந்தைத்தனமான உலகத்தை அழிக்க முற்படாதீர்கள் பிறகு உண்மையிலுமே வாழ்க்கை மெகா  சீரியல் மாதிரி ஜவ்வாக அழுதுவிடும்.இன்னொரு வகையில் நான் இப்படி சில நாட்கள் நினைத்திருக்கிறேன் பேய்கள் ஒரு காலையில் தங்கள் முழு பலத்தையும் திரட்டி சூரியனுக்கு பதிலாக வானமெங்கும் வெள்ளை உடை அணிந்து சுற்றினால் எல்லோரும் பேய்களை நம்பிவிடுவார்களா?.ஆனால் அப்போது நமது முப்பத்து முக்கோடி கடவுளரும் பின்பு பன்னாட்டு கடவுள்களும் காட்சி கொடுக்க வேண்டிவரும்.சற்று சுவாரஸ்யம் நிறைந்த கற்பனைதான்.இந்த தலைப்பில்  நான் எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை எனக்கு அப்படியொரு எண்ணமும் கிடையாது.உங்கள் நம்பிக்கைகளை காயப்படுத்தும் எண்ணமும் எனக்கு கிடையாது.சொல்லப்போனால் நம்பிக்கைகள்  வார்த்தைகளை கடந்தவை.காயப்படுத்தும் சாத்தியங்களை கடந்தவை.என்ற போதிலும் என்னை மீறி நடந்த தவறுகளுக்கு நான் வருந்துகிறேன்.எனது விருப்பமெல்லாம் உங்கள் கற்பனை சிறகுகளுக்கு ஒரு இறகு கொடுப்பதுதான்.நன்றி.

அன்புடன்
கண்ணன்.பெ

vampire-eyes


காதல் கூட்டணி!!!

May 16, 2008

நீ
வாடகை பாக்கி
தராதவனைப்போல
இரவில் வந்து
விடியலுக்கு
சென்றுவிடுகிறாய்!

காதல் பூத்த
கண்களோடு
காத்திருக்கிறேன்,
என்
கவிதையே வா!

கூட்டணி
வைக்காமலே
நீயேன்
விலகுவதை யோசிக்கிறாய்?

தமிழ் நாட்டில்
தண்ணீருக்குத்தானே
பஞ்சம்,
தமிழுக்குமா பஞ்சம்?

தாவணியே தெரியுமா?
தலைமுடிக்கான
எண்ணையை
முகம் காட்டும்
கண்ணாடியில்
தேய்த்துவிட்டேன்!

தவறுகளை மட்டுமே
தவறாமல் செய்கிறேன்,
தவறிக்கூட
நீ
என்னை சரியாக
புரிந்து கொண்டதில்லை!

நான்
இழந்தது என்னைத்தான்
மீட்க, மீண்டும்
உன்னிடம்தான்
வரவேண்டும்!

தரவேண்டும்,
இதுவரை
பதுக்கி வைத்த
முத்தங்களை
மொத்தமாக!

காத்திராதே கண்மணி
உன்
கண்களில்தான்
நானிருக்கிறேன்,
நீ கொஞ்சம்
இமைகளை இறக்கு,
நான்
இதயத்தில்
இறங்கிக்கொள்கிறேன்!


என்ன செய்வது??

May 10, 2008

எனக்குத் தெரியவில்லை,
பாதசாரிகளுக்கான
பாதையில்
படுத்திருப்பவளை
தாண்டியும்,
சுற்றியும் செல்கிறீர்கள்,
நான் என்ன செய்வது?